என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 157945
நீங்கள் தேடியது "எழுமின்"
விவேக், தேவயானி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எழுமின்’ திரைப்படத்தை 1000 பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்துள்ளனர். #Ezhumin
வி.பி.விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயானி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பத்திரிகையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள விகாஷ் வித்யாலயா பள்ளியின் தாளாளர், தனது பள்ளியில் பயிலும் சுமார் 1000 மாணவ, மாணவிகளை ஸ்ரீ சக்தி திரையரங்கில் இத்திரைப்படத்தை காண ஏற்பாடு செய்துள்ளார்.
தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று படத்தினை பார்த்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும், பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியருக்கு இத்திரைப்படத்தை சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான வி.பி.விஜி தெரிவித்தார்.
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு எழுமின் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். #Ezhumin #TNGovernment
பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி.
இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
As per the orders from Honourable CM Thiru Edappaadi K Palaniswami, from next week onwards, Girl Students are to be taught Karate and other self defence Martial arts at Government Schools.
— AIADMK (@AIADMKOfficial) October 19, 2018
தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ’எழுமின்’ படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது, எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார், எழுமின் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி.
விபி.விஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் படக்குழுவினரை அழைத்து நடிகர் விஜய்சேதுபதி பாராட்டி இருக்கிறார். #Ezhumin #VijaySethupathi
வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், ரிஷி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.பி.விஜி. இப்படம் நாளை (அக்டோபர் 18) உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி படத்தில் நடித்த சிறுவர்கள் ஆறு பேரையும், இயக்குனர் வி.பி.விஜியையும் அழைத்து பாராட்டி உள்ளார்.
விபி விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி, ரிஷி, பிரேம், அழகம் பெருமாள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் விமர்சனம். #Ezhumin #EzhuminReview
விவேக் - தேவயானி இருவரும் வசதியான தம்பதி. தங்கள் மகனை குத்துச்சண்டை வீரராக வளர்க்கிறார்கள். விவேக் மகனின் நண்பர்கள் திறமைசாலிகளாகவும் அதே நேரத்தில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் இல்லாததால் அகாடமியில் சேரமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
விவேக்கின் மகன் மாநில அளவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் சாம்பியன் ஆகிறான். ஆனாலும் அவர்களால் மகனின் நண்பர்களை நினைத்து அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு சோகத்தில் இருக்கிறார்கள்.
மகனின் விருப்பப்படியே நடுத்தர குடும்பத்து மாணவர்களின் விளையாட்டு கனவை நிஜமாக்க அகாடமி ஒன்றை தொடங்குகிறார் விவேக். விளையாட்டு துறையில் இருக்கும் அரசியல் காரணமாக பல அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றை இளம் வீரர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
இளம் வீரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் பிரவீன், வினீத், ஸ்ரீஜித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா ஆகியோர்தான் படத்தின் கதாநாயகர்கள். கதாபாத்திரத்தை உணர்ந்து தங்களால் முடிந்தளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார்கள்.
விவேக் வழக்கமான காமெடியனாக இல்லாமல் மகனின் கனவை நிறைவேற்ற விரும்பும் தந்தையாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி இருக்கும் தேவயானி மனதில் நிற்கிறார்.
அழகம்பெருமாள் காலம்காலமாக இருக்கும் விளையாட்டு அரசியலின் உதாரணமாக வருகிறார். அட்டு படத்தில் கதாநாயகனாக நடித்த ரிஷி, இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அபூர்வமாக தான் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக எடுக்கப்படும் ஊக்கம் தரும் படங்கள் வெளியாகும். அந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து ஒரு படம் கொடுத்ததற்காக இயக்குனர் விபி.விஜிக்கு பெரிய பாராட்டுகள். சிறுவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். விளையாட்டு துறையிலும் இருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தற்காப்பு கலையின் அவசியத்தையும் கூறியிருக்கிறார்.
கணேஷ் சந்திரசேகரனின் இசையும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிராக்கிள் மைக்கேல் ராஜின் சண்டைக்காட்சிகள் பெரிய ஹீரோக்களின் படங்களை பார்ப்பது போல இருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராமின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
மொத்தத்தில் ‘எழுமின்’ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பார்க்கவேண்டிய படம்.
எழுமின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட பேசிய விவேக்கின் கோரிக்கையை அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் உடனே ஏற்றுக் கொண்டிருக்கிறார். #Ezhumin
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.
18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.
அதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.
மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.
விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.
ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர்.
இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil
நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ திரைப்படம் விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘வட சென்னை’ திரைப்படத்துடன் மோத இருக்கிறது. #Ezhumin
வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.
முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி 2” திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. #Ezhumin #Vivek
வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர், இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
இதையடுத்து அக்டோபர் 5ம் தேதி இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும் என்று எழுமின் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்தார். #Ezhumin #Vivek #HipHopAdhi
“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் நடைபெற்றது.
இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
“எழுமின் முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது. இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன். காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது” என்று பேசினார். #Ezhumin #Vivek #HipHopAdhi
தற்காப்பு கலையை மையமாக வைத்து விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். #Ezhumin #Dhanush
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார். அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் வி.பி.விஜி. மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.
தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி முதன்மைக் கதாபாதிரங்களாக நடித்திருக்கிறார்கள். வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.
விவேக் மற்றும் தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படக்குழுவினரை கேரள அமைச்சர் அழைத்து பாராட்டி இருக்கிறார். #Ezhumin #Vivek
வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் “எழுமின்” திரைப்படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. A.C. மொய்தீன், கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் திரு. M.V. ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். தற்காப்பு கலையை மையமாக மைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, தான் இனி எங்கேயும் தாமதமாக வரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் சிம்பு பேசியதாவது,
பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும்.
வாழ்க்கையில் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதை விட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்படி செய்து காட்டுபவர் தான் விவேக். நான் எனது படம் ஒன்றில் ஒரு காமெடியனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் விவேக் சார் தான் உச்சத்தில் இருக்கிறார், அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார். அந்த நிலையில், விவேக் விட்டுக் கொடுத்ததால் தான், சந்தானம் இன்று சினிமாவில் இருக்கிறார். இந்த படத்தில் நடித்துள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதி அளித்த பெற்றோருக்கு நன்றி.
என் குழந்தையை நான் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். படிக்க, கற்றுக்கொள்ள தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். முதலாவது வரும் ஒருவனை மட்டும் தான் பார்க்கிறார்கள். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்றால் அந்த குழந்தைக்கு அதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான பயிற்சி கொடுக்க முயற்சிப்பதில்லை. தண்டிக்க தான் செய்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைக்கு வர எனது பெற்றோர் தான் காரணம்.
போட்டி, பொறாமை எதற்கு, எதை எடுத்துக் கொண்டு போகிறோம். மனதில் பட்டதை தான், நான் பேசுவேன். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் போது, அவரது பேச்சில், முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் மீது கோபப்பட்டு, திட்டியிருக்கிறேன். அவர் செய்த ஒரு விஷயம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் அனைத்துமே தவறா, நடிகர் சங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு மனிதாபிமானத்துடன் என்னை அழைத்த விஷாலுக்கு நன்றி. நான் திட்டுகிறேன் என்றால் பலரும் சும்மா திட்டுகிறார்கள்.
ஏஏஏ படத்திற்கும் அவரை திட்டினார்கள். ஏன் திட்டினார்கள் என்று தெரியவில்லை. அந்த ஏஏஏ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த ஏஏஏ என்று விஷாலை குறிப்பிட்டு, (Arise, Awake, Acheive) இதை தான் அவரிடம் பார்த்தேன்.
கட்அவுட் வைத்த தன் ரசிகர் இறந்தது வருத்தத்தை அளித்தது. அவரை கொலை செய்ததால், அவரது வாழ்க்கை மட்டுமில்லாமல், அவரை கொலை செய்த 9 பேரின் வாழ்க்கையும் பாலானது.
எனக்கு பிடித்ததை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு பிடித்த மாதிரி நான் இருந்து கொள்கிறேன். ஆனால் நான் தாமதமாக வருவது பலருக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்கின்றனர். அப்படி இருந்தால், இனி நான் தாமதமாக வர மாட்டேன். லேட்டாகவும் போவதில்லை என்று உறுதி அளிக்கிறேன் என்றார். #EzhuminTrailerLaunch #STR
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X