search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசைத்திருவிழா"

    ஆஸ்திரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். #MusicFestival #Drug
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை தின்று உற்சாகத்தில் மிதந்தனர்.

    சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    சிட்னி இன்டர்நேஷனல் ரெகாட்டா சென்டரில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை கொண்டு வந்து வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-மந்திரி கிளாடிஸ் கூறும்போது, “நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு பயங்கரமான சம்பவம்தான். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

    இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரை தின்று 2 வாலிபர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

    இசைத்திருவிழாவில் இப்படி போதை மாத்திரைகள் தின்று பாதிப்புக்கு ஆளாகும் சம்பவங்கள் பெருகுவது ஏமாற்றம் அளிக்கிறது; இசைத்திருவிழாவில் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாது என விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் கூறி உள்ளனர்.  #MusicFestival #Drug
    ×