search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனதாதளம்"

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #CMKumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி ஆட்சியின் முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.

    இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால், இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகதாயி நதிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன். மகதாயி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டுவேன். தர்மஸ்தலா மஞ்சுநாத கோவில் நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதில் ரூ.8 கோடி நிதியை அந்த கோவில் நிர்வாகம் சார்பில் நேரடியாக மக்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும் அந்த கோவில் நிர்வாகம் ரூ.2 கோடி, முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்இந்திய முதல்-மந்திரிகள் மாநாடு வருகிற 18-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்இந்திய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.

    பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தபடம்.

    லாட்டரியில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள், 2010-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீவைத்தவர்கள் உள்பட யார்-யார் மூலமாக பேரம் பேசுகிறார்கள் என்ற விஷயமும் எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன்.

    அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.

    ஜனாதிபதி நாளை (அதாவது இன்று) பெலகாவிக்கு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பெலகாவிக்கு செல்கிறேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு ஜனதா தரிசனம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். அனைத்து மந்திரிகளும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த மந்திரியும் எனக்கு எதிராக செயல்படவில்லை.

    பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.

    இப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆட்சி கவிழவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் ஆட்சி கவிழும் என்று கெடு விதிப்பார்கள். அதன் பிறகு தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தேதி முடிவு செய்வார் கள். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழாது.

    கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று செய்திகள் வெளியாவதால், அதிகாரிகள் மத்தியில் ஒருவித குழப்பம் மற்றும் சுறுசுறுப்பு குறைவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் விதமாக அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன்.

    ஆட்சியின் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தாமல், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துவேன். எனக்கு மாநிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நான் சுதந்திரமாக உள்ளேன். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #CMKumaraswamy
    தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.
    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.

    இது தொடர்பாக நேற்று அவர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார்.



    அந்த அறிக்கையில் அவர், ‘‘இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அவர்களில் சிலரிடம் நான் பேசி உள்ளேன்’’ என கூறி உள்ளார்.

    மேலும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், நாட்டு மக்களை காக்கவும் தேவையான முக்கிய விவகாரங்களை விவாதிப்பதற்கு இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என சரத் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சரத் யாதவ் இதற்கு முன் கூட்டிய இத்தகைய கூட்டங்களில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி, கர்நாடக சட்டசபையில் நாளை (வெள்ளிக்கிழமை) மெஜாரிட்டியை நிரூபிக்கிறார். முன்னதாக சட்டசபை சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். #kumarasamy
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. அதாவது ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 15-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதாவது அதிகபட்சமாக பா.ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேப் போல் காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 38 இடங்களையும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதேப் போல் காங்கிரஸ் ஆதரவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்தது. இந்த கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இக்கூட்டணியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.

    இருப்பினும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான எடியூரப்பா கடந்த 17-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 19-ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 111 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் அக்கட்சி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டின.

    ஆனால் வாக்கெடுப்பின் போது, பா.ஜனதாவுக்கு உறுப்பினர்கள் பலம் 104 ஆக மட்டுமே இருந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 3 நாளில் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவர் நேற்று மாலை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார்.



    இருப்பினும் குமாரசாமி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா மீண்டும் குதிரை பேரம் நடத்தி இழுக்கும் என கருதி, நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுவேன் என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடக சட்டசபையில் குமாரசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க உள்ளார். இதையொட்டி சட்டசபையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, சபாநாயகர் தான். இதனால் நாளை காலை சட்டசபை கூடியதும் முதல் பணியாக சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இந்த கூட்டணி அரசு சார்பில் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும், துணை சபாநாயகர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ரமேஷ்குமார் நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    அதேப் போல் துணை சபாநாயகராக ஜனதாதளம் (எஸ்) சார்பில், ஏ.டி.ராமசாமிக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்கள் கடந்த 16-ந்தேதி முதல் ஓட்டல்களில் தங்கவைத்து பாதுகாத்து வரப்படுகிறார்கள்.

    ஆனால் அந்த எம்.எல்.ஏ.க்கள், தங்களது குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் மீது எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு அவர் களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. #kumarasamy
    ×