search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான்கான்"

    • இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது.
    • இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இம்ரான்கானுக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருவதாக அவரது கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் சிறையில் இம்ரான்கானை இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

    இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அவர் வாரத்துக்கு ஒரு முறை லண்டனில் உள்ள தனது மகன்களுடன் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர். அவர் சிறை அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இருட்டு அறையில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை எழுந்துள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளரான ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கும், இம்ரான்கானுக்கும் 1995-ல் திருமணமான நிலையில் 2004-ல் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்ததும், இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளதும் குறிப்படத்தக்கது.

    • இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

    மோதல் காரணமாக இஸ்லாமாபாத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. இதற்கிடையே இம்ரான்கான தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
    • சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இஸ்லாபாமாத்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 'தோஷ்கானா' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டு அவரை சிறையில் அடைத்தது. மேலும் அவர் நிறுவிய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சிக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டது.

    சிறையில் உள்ள இம்ரான்கானை விடுக்க வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராட்டத்தை துண்டிவிட்டதாக கூறி இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றச்சாட்டு.
    • பெண் தொண்டர்களை கைது செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதில் சில வழக்குகளில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையே அவரது கட்சி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றம் சாட்டியது. இதனால் இம்ரான்கான் கட்சியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் இம்ரான்கான் கட்சியின் தலைமையகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைநகர் இஸ்லாமா பாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள் போலீஸ் படை நுழைந்தது.

    அங்கு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். பின்னர் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹசன் உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பெண் தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

    போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு முயற்சி செய்து வரும் சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இம்ரான்கானை உடனே விடுவிக்க வேண்டும் என ஐ.நா.குழு வலியுறுத்தியது.
    • இது உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தான் அரசு பதிலளித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

    இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா. குழு தீவிர கவலைகளை எழுப்பியது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் குழுவின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தானின் அரசு, இது உள்நாட்டு விவகாரம் என பதிலளித்துள்ளது.

    • கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர்.
    • இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் விடுதலை செய்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் (71). இவர்மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஒரு ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து போலீசார் கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் ராவல்பிண்டியில் ராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    வன்முறையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடந்துவந்தது. இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்தது.

    இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறிய கோர்ட் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

    ஆனாலும், ஊழல் குற்றச்சாட்டு உறுதியாகி அவர் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அந்த வழக்குகளில் அவர் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
    • புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

    அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

    தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான்கான் கூறும்போது, அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளங்கள் அவரது தோலில் இருந்தது. நாக்கில் விஷத்தின் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும். மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

    புஷ்ராவுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இதையடுத்து புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே புஷ்ரா பீபி கூறும்போது, கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவத்தை எனக்கு உணவில் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமடைந்தது. என் கண்கள் வீங்குகின்றன. மார்பு, வயிற்றில் வலியை உணர்கிறேன், உணவு , தண்ணீரும் கசப்பாக இருக்கிறது. முன்பு தேனில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கலந்திருந்தன. தற்போது கழிப்பறையை சுத்தப்படுத்தும் கிளீனர் எனது உணவில் கலக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
    • பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் 9-ந் தேதியன்று பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் அவர் 2-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிப் அலி சர்தாரி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார்.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    • ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்தது.
    • குரேஷி, அவரது மகன் ஜெய்ன் குரேஷியின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி துணைத் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் குரேஷி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது.

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குரேஷியின் தண்டனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    குரேஷி மற்றும் அவரது மகன் ஜெய்ன் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    முல்தான் உள்ளிட்ட 2 சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்தஇடத்தில் மாற்று வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

    • இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக கூறியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்துக் கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

    அடியாலா சிறையில் நேற்று நடந்த இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    ×