search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுனர்"

    நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு பஸ்களை இயக்குவதில் எந்த தவறும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    மாநிலம் முழுவதும் நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் பஸ்களை தமிழக அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை கொண்டு அரசு பயணிகள் பஸ்சை இயக்குவதில் எந்த தவறும் இல்லை. இந்த பஸ் இடைவெளியில் நிற்காமல் செல்வதால், நடத்துனர் தேவையில்லை. ஒருவேளை பஸ்சை நிறுத்த வேண்டும் என்றால், பயணிகள் பயன்படுத்தும் விதமாக ‘பெல்’ பஸ்சில் பொருத்தப்பட்டுள்ளது. அதை அழுத்தி, பஸ்சை பயணிகள் நிறுத்தலாம்.

    தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 555 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 1.75 கோடி பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

    தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 227 நடத்துனர் இல்லாமல் பஸ்சை இயக்கக்கூடாது என்று கூறினாலும், மோட்டார் வாகன விதி 38, ஓட்டுனருக்கு அந்த பொறுப்பை வழங்க வழி வகை செய்கிறது. இந்த விதியின்படி, நடத்துனர் பணியை ஓட்டுனர் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.

    இப்போதெல்லாம் பயணிகள் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ பஸ்களைத் தான் விரும்புகின்றனர். அவர்கள் பஸ்சில் ஏறும் இடத்திலேயே டிக்கெட் எடுத்து விடுகின்றனர். இடைவழியில் நிற்காமல் பஸ் செல்வதால், பயணம் நேரம் குறைகிறது. தற்போது நடத்துனர் இல்லாமல் ஓட்டுனரை மட்டும் கொண்டு, தமிழகம் முழுவதும் 256 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுபோல ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் பஸ்கள், மராட்டியம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இயக்கப்படுகின்றன. இந்த முறையை பின்பற்றுவதால், ஓட்டுனருக்கு தேவையில்லாமல் மன அழுத்தம் ஏற்படும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற பஸ்களில், திடீரென நடுவழியில் பழுது ஏற்பட்டால் அதை கண்காணித்து உடனே ஊழியர்களை அனுப்பி சரிசெய்யவும், அவை எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணிக்கவும், ஒவ்வொரு பஸ்சிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    ×