search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப்படை"

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கிளர்ச்சியாளர்கள் வேகமாக வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Syria
    டமஸ்கஸ்:

    சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

    சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

    2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
     
    இந்நிலையில் மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளான ஹமா மற்றும் ஹோம்ஸை சுற்றியுள்ள ராஸ்டன், டல்பேசேஹ் மற்றும் ஹௌலா பகுதிகள் இன்று அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அங்கு கிளர்ச்சியாளர்களால் மூடப்பட்டிருந்த அந்நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையை அரசுப்படைகள் திறந்து வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு மீதம் இருந்த கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

    ஏற்கனவே, சிரிய அரசுடன் கிளர்ச்சியாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். அதில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பகுதியை விட்டு கிளர்சியாளர்களின் குடும்பம் மற்றும் அதிபர் ஆசாத் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாத பொதுமக்களும் என சுமார் 1,10,000 பேர் கிளர்ச்சியாளர்களுடன் வெளியேற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த மாதம் தொடக்கம் முதல் 27 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

    அவர்கள் அனைவரும் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள துருக்கி மற்றும் ஜோர்டான் எல்லையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டிருந்த பகுதிகளான கிழக்கு அல்லெப்போ பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேரும், கடந்த மாதம் கிழக்கு கவுட்டா பகுதியில் இருந்து 66 ஆயிரம் பேரும் ஏற்கனவே வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கிளர்ச்சியாளர்கள் வெளியேறிவருவதை அடுத்து அங்கு அமைதி திரும்பி வருகிறது. #Syria
    ×