என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெனோபாஸ்"
- ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள்.
- வாழ்க்கைச் சூழல் மாற மாற உடற்பயிற்சி குறைகிறது.
40 வயதை தாண்டிய பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் 40 வயதை தாண்டிய பெண் என்றால் பின்வரும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாகவும், அக்கறையாகவும் இருங்கள்.
சர்க்கரை நோய்:
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், தொப்பையை அதிகரிக்கச் செய்யும். அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் செயல்பாட்டை தடுக்கிறது. இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.
உயர் ரத்தஅழுத்தம்:
நடுத்தர வயதில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று, ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்கள், பரம்பரை நோய்களாகும். வாழ்க்கைச் சூழல் மாற மாற உடற்பயிற்சி குறைகிறது. உணவுப்பழக்கமும் மாறுகிறது. இது ரத்த அழுத்தத்துக்கும் காரணமாகிறது.
தைராய்டு:
தைராய்டு ஹார்மோன்கள் கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள், நமது உடல் வெப்ப நிலை, இதயத் துடிப்பு மற்றும் பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. தைராய்டு சமநிலை இல்லாதபோது, வளர்சிதைமாற்றம், உடல் வெப்பநிலை, கருவுறுதல், எடை அதிகரிப்பு, இழப்பு, மாதவிடாய், முடி ஆரோக்கியம், மனநலம், இதயத் துடிப்பு போன்ற நமது உடலின் ஒவ்வொரு செயல்பாடும் பாதிக்கப்படுகின்றன.
மெனோபாஸ்:
பெரும்பாலான பெண்களுக்கு பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நிறுத்தம் தொடங்குகிறது. இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம். இதற்கான அறிகுறிகள் பல. உதாரணமாக, இரவில் அதிகமாக வியர்த்தல், பிறப்புறப்பு வறட்சி, பதற்றம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை கூறலாம்.
மாதவிடாய் நின்ற பிறகு கால்சியம் இழப்பானது, எலும்புச்சிதைவு மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் நல்ல தூக்கம் பழக்கத்தை பின்பற்றுவதும் போதுமான ஓய்வு எடுப்பதும் அவசியம். வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் நிறைந்த உணவுகளை பெண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம்.
- கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
- இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.
கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும் போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.
பெரும்பாலும் மெனோபாஸ் வயதில் தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும் அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன.
முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3-வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்தநிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும்.
சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப்போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.
முதல் நிலை பாதிப்பாக இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுப்பதற்கான வழிகள்.
- ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும்.
- மெனோபாஸ் வயது என்பது 50 தான்.
* மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹோர்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்து பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
* 50 வயதிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
* 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.
* மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹோர்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரிமெனோபாஸ் நேரத்திலும் வரும்.
* ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தவறில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
* பத்து பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிடுகிறது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
* அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
* இந்த காலத்தில் கால தாமதமான திருமணம் காரணமாக நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா?
- ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள்.
வருடத்துக்கு ஒருமுறை ஆயுத பூஜை என்கிற பெயரில் மெஷின்களுக்குக் கூட பூரண ஓய்வு அளிக்கிறோம். இன்னும் வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பில் இருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ஆனால், ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கிற உயிருக்கு, குறிப்பாக பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா? பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களை பற்றி பார்ப்போம்.
மாதவிலக்கு:
இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால்தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும். அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும். இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.
மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.
பிரசவத்துக்குப் பிறகு:
வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.
கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.
அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்த பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.
பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்' என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.
தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.
சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.
மெனோபாஸ்:
மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி, படபடப்பு, கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும். மூளையில் உண்டாகிற ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.
எந்த விடயத்திலும் பிடிப்பே இருக்காது. உடல் மற்றும் மனதளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது. அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள். பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.
வயதானவர்கள்:
முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம், கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இவர்களுக்கான அவசியத் தேவை.
- பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம்.
- பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையே 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தமாகும். வயது முதிர்ச்சியின் காரணமாக பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். கருப்பையில் இருந்து வெளிவரும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதோ அல்லது நிறுத்தப்படுவதோ இதற்கு காரணமாகும்.
பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 45 முதல் 55 வரையாகும். ஒருசில பெண்கள் 40 வயதிற்குள்ளேயே மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விடுகிறார்கள். இதனை "மூன்கூட்டிய கருப்பை செயலிழப்பு என்கிறோம்.
முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்: பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஒரு கருமுட்டை வெளியேற்றப்படும்.
பிறக்கும் போதே குறைவான அளவு கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்.
இதுமட்டுமில்லாமல் குரோமோசோம் குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கும். இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர், கருப்பையை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்வோர் மற்றும் முன் அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படக்கூடும். சிலருக்கு இது மரபு வழியாகவும் ஏற்படலாம்.
முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள்:
6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையற்ற மாதவிடாய் ஏற்படும், தாமதமாக மாதவிடாய் வருவது, குறைந்த அல்லது அதிகப்படியான நாட்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்றவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கியமான அறிகுறிகளாகும்.
இதுதவிர முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் அதிக வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, தோல் கருமை அடைதல் அல்லது வறண்டு காணப்படுதல், தலைவலி, உணர்வு ரீதியான மாற்றங்கள், அதிக அளவு முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவைகளும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.
முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான தீர்வுகள்:
45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடலில் வெப்பம் குறைந்து ஹார்மோன் சுரப்பு சீராகும்.
- உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
- உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம்.
40 வயதை தாண்டிய பெண்களா நீங்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு முதலில் பெண்கள் 40 வயதை தாண்டியவுடன் உடல் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
40 வயதிற்கு மேல் உடலை அழகாக வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்க கூடாது. உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? என்று எல்லோரும் நம்மை பார்த்து கேட்கும் அளவுக்கு ஆச்சரியமாக வைத்துக்கொண்டால் அதுவே நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.
நமக்கு பணம், நகை இருக்கும்போது வரும் பெருமையை விட இவ்வளவு வயது ஆகியும் எப்படி இருக்கிறாங்க. உடலை எப்படி மெயிண்டெய்ன் பண்றாங்க என்று நம்மை பார்த்து சிலர் கூறுவதும் நமக்கு ஒரு பெருமைதான். அதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். அதற்கு ஜிம்மிற்கு செல்வதெற்கெல்லாம் வசதி இல்லை, அல்லது நேரம் இல்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே நான் செய்யும் வேலைகள் கூட நமக்கு ஒரு வகையான உடற்பயிற்சியே. அதாவது கூட்டுவது, துடைப்பது, உட்கார்ந்து பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளை செய்வது, முடிந்தவரைக்கும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியம்.
அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம். உடலுக்கு யோகா வலிமையையும் மனதுக்கு அமைதியான சூழ்நிலையையும் உருவாக்கும். அடுத்து கணவன், மனைவி உறவுக்குள்ளும் ஒருவகையான சலிப்பு மற்றும் விரிசல் ஏற்படுகின்றது. ஏன் இந்த விரிசல் என்றால் குழந்தையை வளர்க்கிறோம் என்ற பெயரில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதையோ, விருப்பத்தை சொல்வதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. இது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்திவிடும். கடமைக்காக வாழ்வதாக இன்றும் நிறையபேர் சொல்வதுண்டு. 40 வயதாகிவிட்டது இனிமேல் என்ன? என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 40 வயதிற்கு பிறகும் சந்தோசமான வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணவேண்டும்.
உணவுமுறைகளிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதுவும் குழந்தைபேறுக்கு பிறகு நிறைய பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்று நிறைய மாற்றங்களால் உடலில் நிறைய நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.
இந்த காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. அதற்கு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடிய பச்சை காய்கறிகள், கீரைகள், பயறுவகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நமது உடம்பை இயற்கையான உணவை உட்கொண்டு நல்ல திடகாத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக உணவின் மீது அதிக அக்கறை செலுத்தி நல்ல சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க கூடாது. எடையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக நாம் அடிக்கடி கல்யாண போட்டோவை எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் கல்யானத்தின் போது அவ்வளவு ஸ்லிம்மாக இருந்திருப்பார்கள். இது தான் அவர் உடல் எடையை குறைக்க நல்ல டிப்ஸ்.
கல்யாணத்திற்கு பிறகு எல்லோருக்கும் எடை அதிகரிக்க காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்வலி, முதுகுவலி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எடைமீது மட்டும் இல்லீங்க, உடை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
40 வயதிற்கு மேல் பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளனர். அது ரொம்ப தவறு. எப்போதுமே ஒரு பெண் எவ்வளவு வயதாக இருந்தாலும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் வயதுக்கு ஏற்ற உடை, அலங்காரம், ஆபரணங்கள் அணிவது என்று தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மெனோபாஸ் பிரச்சினை பெண்களை இன்னும் பலவீனமாக்கிவிடுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடமும், கணவனிடம் புரியவைக்க வேண்டும். இதனாலேயே பல பெண்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
முறையற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக மெனோபாஸ் ஏற்படும் போது பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிழுங்கள். தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதை விடுத்து குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள். குழந்தைகளுடன் நாம் செலவு செய்ய செய்ய நாம் நம்முடைய வயதை மறந்து குழந்தைகளுடன் சேர்ந்து இன்னும் நாம் இளமையாக இருப்போம். நாம் நம்முடைய வயதை மறந்து சந்தோசமாக இருக்கமுடியும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
- நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.
உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.
உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.
ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.
சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.
தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.
மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.
- 12 முதல் 15 வயது என்பதே பெண்கள் பூப்படைய சரியான காலம்.
- சில குழந்தைகள் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள்.
பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு பூப்படைதல். 12 முதல் 15 வயது என்பதே பெண்கள் பூப்படைய சரியான காலம். ஆனால், சில குழந்தைகள் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். இவ்வாறு சீக்கிரம் பூப்படையும் பெண்களுக்கு, மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை விளக்குகிறார் சென்னை, கொட்டிவாக்கத்தில் வசிக்கும் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.
முன்பெல்லாம் தாய் சிறுவயதிலேயே பூப்படைந்தால், அவரின் பெண் குழந்தையும் அவ்வாறே பூப்படைவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இயல்பாகவே சிறுவயதிலேயே பூப்பெய்தும் நிலை உண்டாகிவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பழக்கவழக்கமும், வாழ்க்கை முறையும்தான். முன்பெல்லாம் ஏதேனும் திருவிழா, சுப நிகழ்வின்போதே விருந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது.
ஆனால், தற்போது தினசரி வாழ்விலேயே பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், வெளியில் விற்கும் உணவுகள் போன்றவற்றை சாப்பிடும் வழக்கம் அதிகரித்துவிட்டது. உணவில் கலக்கப்படும் பதப்படுத்திகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு, உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் இவை அனைத்தும் பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைய வழிவகுக்கும். இதுதவிர சுற்றுச்சூழல், மரபியல் மற்றும் வளர்சிதைமாற்றம், மனஅழுத்த ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மை போன்ற மற்ற காரணங்களாலும் விரைவாகவே பூப்படைதல் நிகழும்.
இதனால் குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்படும்போது உடலில் வளர்சிதை மாற்றம் குறைவது, கருப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கும். இவ்வாறு, 13 வயதுக்கு முன்னர் பூப்படைந்தால் மெனோபாஸும் விரைவாக வரும் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் 11 வயதுக்கு முன்பே பூப்பெய்துபவர்களுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு மரபியல், ஹார்மோன் கோளாறு, ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றால் கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றாலும் மெனோபாஸ் விரைவில் ஏற்படும்.
இதனால் இதய நோய், சர்க்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமில்லாமல் தூக்கமின்மை, பதற்றம், மன உளைச்சல் போன்ற வாழ்வியல் பிரச்சினைகளும் உண்டாகும். சீக்கிரம் பூப்பெய்துவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களில் பரிமாறப்படும் தண்ணீர், பானங்கள் மற்றும் உணவுகளைத் தவிர்ப்பது, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சரியாக சுத்தம் செய்து பயன்படுத்துவது, ரசாயனம் கலக்கப்பட்ட பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
- சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.
- மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படும் வரை தம்பதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகில் பொதுவாகப் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் சராசரி வயது 49-51 எனக் கருதப்பட்டாலும், இந்தியப் பெண்களில் மாதவிடாய் நிறுத்தம் 47-49 வயதில் ஏற்படுகிறது. அதாவது உலகெங்கிலும் உள்ள பெண்களை விட இந்தியப் பெண்கள் மாதவிடாய் நிற்றல் விரைவாக ஏற்படுகிறது.
"எந்த ஒரு பெண்ணுக்கும் கருவுறும் காலமோ மாதவிடாய் நிற்கும் காலமோ அவரவர் உடல் வாகைப் பொறுத்தது. மற்ற எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு வரை, சாதாரண மாதவிடாய் இருக்கும். பின்னர், அது நின்றுவிடும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. மற்றும் சில பெண்களுக்குச் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, இடைவெளி அதிகரிக்கிறது. இந்தக் காலகட்டம், ப்ரீமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது, சில மாதங்கள் முதல் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கலாம். கடைசி மாதவிடாய் காலத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு 12 மாதங்கள் வரை மாதவிடாய் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஒரு பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது அசாதாரணமாகவே கருதப்படுகிறது." என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வயது அதிகரிக்க, அதிகரிக்க, பெண்களின் பிறப்புறுப்புகள் வறண்டு போகின்றன, கருப்பை வாய்க் கட்டி, கருப்பையின் புறணி தடித்தல் அல்லது மெலிந்து போதல், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது நோய்த்தொற்றுகளால் உதிரப்போக்கு ஏற்படலாம். மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு சில நேரங்களில் சிறிய காரணங்களாலும் இருக்கலாம். சில சமயங்களில் இது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
மாதவிடாய் நின்ற பிறகு, லேசான வடுவோ, அதிக இரத்தப்போக்கு அல்லது எந்தவிதமான இரத்தப்போக்கு இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இது புற்றுநோயாக இருக்க பத்து சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தப் புற்றுநோய் கருப்பையிலோ அல்லது அதன் வாயிலோ அல்லது சினைப்பையிலோ அல்லது யோனியிலோ ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, இரத்தப் பரிசோதனைகள், பேப் ஸ்மியர்ஸ், எண்டோமெட்ரியல் பயாப்ஸி, சோனோகிராபி மற்றும் டி.என்.சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
"இரண்டு-மூன்று மாதங்களாக மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், மாதவிடாய் நின்று விட்டது என்று கருதும் பெண்கள், கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். அதனால் அந்த வயதில் அவர்கள் கர்ப்பமடைகிறார்கள். அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது." என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற பிரச்சனைகளுடன் பல தம்பதியர் வருவதாகவும் அந்த நேரத்தில், கருக்கலைப்பு செய்வது மிகவும் கடினமாகிவிடுவதாகவும், இதனால், அவர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எனவே, பெண்ணுக்கு மாதவிடாய் நின்றது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படும் வரை தம்பதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
- பெண்கள் உடல் மற்றும் மன அளவில் மாற்றங்களை அடைகின்றனர்.
- சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி காணப்படும்.
மாதவிடாய் சுழற்சி, மகப்பேறு இவற்றை தொடர்ந்து மாதவிடாய் நிறைவு அல்லது மெனோபாஸ் நிலை சராசரியாக 45 வயது முதல் 55 வயது வரை எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ்கிறது. இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவு இயற்கையாகவே வயதிற்கு ஏற்ப குறைகின்ற காரணத்தினால் மெனோபாஸ் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் மாற்றங்களை அடைகின்றனர். தென் குறிகுணங்களாக தூக்கமின்மை, மன அழுத்தம், எரிச்சல் உணர்வு, முடி கொட்டுதல், சரும வறட்சி, உடல் சோர்வு, எலும்புகளில் வலி, பிறப்புறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படலாம். இக்காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் அளவு குறையத் தொடங்கும். மேலும் கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் குறைவதால் அதற்கேற்ப உணவு முறைகளை மாற்றி எடுத்துக்கொள்வது சிறந்தது.
கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களால் ஆன உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுதல், பிரண்டை, முடக்கற்றான் கீரை, முருங்கை கீரை, உளுந்து, முளைக்கட்டிய தானியங்கள், பால், மோர், கருப்பு கவுனி அரிசி, கைக்குத்தல் அரிசி இவற்றுடன் காய்கறிகள், பழங்கள், அளவான இறைச்சி, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை தவிர நடைபயிற்சி, பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் மேலும் சில யோகாசனப் பயிற்சிகளை மருத்துவரின் அறிவுரைப்படி மேற்கொள்வது சிறந்தது. இதனால் உடல் மற்றும் மனநலம் மேம்படும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி காணப்படும்.
இதனை சூதக வலி என்பர். இதற்கு சோம்பு கஷாயம், தனியா கஷாயம், புதினா துவையல், புதினா சாற்றுடன் தேன் கலந்து அருந்துதல், பெருங்காயத்துடன் வெந்நீர் கலந்து அருந்துதல் போன்றவை சூதகவலியை கட்டுப்படுத்தும். சில மகளிருக்கு மெனோபாஸ் எய்திய பிறகும் திடீரென உதிரப்போக்கு தொடங்கும். அவ்வாறு இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். ஏனெனில் இத்தகைய குருதிப்போக்கானது கருப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகக் கூட இருக்கலாம். மேலும் அனைத்து மகளிரும் சுய மார்பக பரிசோதனை செய்வதை தெரிந்து கொள்வது அவசியம்.
மார்பகத் தோல் மற்றும் மார்பகக் காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள்,மார்பகத்தில் உருண்டையான கட்டிகள் போல காணப்படுதல், மார்பக காம்புகளில் கசிவு போன்றவை காணப்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில் மார்பகப் புற்று, கருப்பை புற்று, கருப்பைவாய் புற்று போன்றவை தற்பொழுது பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றன. இதில் காணப்படும் குறிகுணங்களைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறும்மோது நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும் மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
ஏனெனில் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து அவை ரத்தக் குழாய்களில் படியும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இக்காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி இவற்றுடன் சித்த மருந்துகளான மருதம்பட்டை, வெண்தாமரை, சீரகச் சூரணம் போன்றவற்றை முறையான மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளும்போது அவை இருதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. பெண்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி நிறைவான ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால் மட்டுமே ஒரு சிறந்த குடும்பம் மற்றும் சமுதாயம் ஏற்படும்.
- எலும்புகளின் ஆரோக்கியத்தை மெனோபாஸ் காலத்துக்குப் பின்பு பராமரிப்பது மிகவும் முக்கியம்.
- எலும்புகளின் ஆரோக்கியத்திற்கான சில வழிகளை பார்ப்போம்...
மெனோபாஸ் வயது வந்துவிட்டது... இனிமேல் எதற்கு உடற்பயிற்சி எல்லாம்என்கிற எண்ணம் பல பெண்களுக்கும் உண்டு. ஆனால் அது தவறு. அத்தனை காலம் நீங்கள் உடற்பயிற்சியே செய்யாதவர் என்றாலும் மெனோபாஸ் நெருங்கும் போதாவது உடற்பயிற்சிகளை தொடங்க வேண்டியது அவசியம்.
வெயிட் பேரிங் பயிற்சிகள் என்பவற்றை உடற்பயிற்சி நிபுணரிடம் கேட்டு செய்ய ஆரம்பிக்கலாம்.ஒரே ஒரு பயிற்சியை மட்டும் செய்வதைவிட வேறு வேறு பயிற்சிகளை செய்வது உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும். வெயிட் பேரிங் (Weight bearing) மற்றும் தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் எல்லா வயதினருக்குமே மிக அவசியம். மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதில் இந்த பயிற்சிகள் மிக மிக முக்கியமானவை.
எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து மிக முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடியவரையில் உணவின் மூலமே கால்சியம் சேரும்படி பார்த்து கொள்ளுங்கள். கொழுப்பு குறைந்த பால் மற்றும் பால் பொருட்கள், மீன்களில் சார்டைன், சாலமன் போன்றவையும் கால்சியம் சத்து நிறைந்தவை. பிரோக்கோலி, கீரைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றிலும் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.
கால்சியம் சத்து மட்டும் சரியாக இருந்தால் போதாது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி சத்தும் மிக முக்கியம். அது போதுமான அளவில் இருந்தால்தான் கால்சியம் சத்து கிரகிக்கப்படும்.
முட்டை, ஈரல் போன்றவற்றில் வைட்டமின் டி இருக்கிறது. காலை மற்றும் மாலையில் இளம் வெயில் உடலில் படும்படி வாக்கிங் போகலாம், தோட்ட வேலை செய்யலாம். இதுவும் வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவைப்பட்டால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் அடிக்கடி காஃபி மட்டுமே அருந்தி பசியாற்றி கொள்வதை பார்க்கிறோம். அதிகளவில் காஃபி குடிப்பதால் அதிலுள்ள கஃபைன், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும். காஃபி மட்டுமில்லை, கஃபைன் உள்ள எந்த பானமும் தவிர்க்கப்பட வேண்டும். மெனோபாசை நெருங்கும் பெண்கள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
வயதாக ஆக உடற்பயிற்சியை தவிர்த்தீர்களானால் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பெரியளவில் பாதிக்கப்படும். சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கை முறையாக பின்பற்றினால் மெனோபாஸ் வயதில் எலும்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வலிகள் தவிர்க்கப்படும். வயதாக ஆக நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைய தொடங்கும். அதன் தொடர்ச்சியாக உணவின் மூலம் உடலுக்குள் சேரும் ஊட்டச்சத்துகளின் அளவும் குறையும். குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு கால்சியமும், வைட்டமின் டியும் மிக முக்கியம். உணவு குறைவதால் இவை போதிய அளவு உடலுக்கு சேர்வதில்லை. உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்து, உடலை உறுதியாக வைக்கும்.
மெனோபாசுக்கு பிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறையும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழப்பதும், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வருவதும் சகஜமாக இருக்கும்.மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும் ஹெச்ஆர்டி எனப்படுகிற சிகிச்சை பலனளிக்கும். ஆனால் இதை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் முழுமையான ஆலோசனை பெற்றே, அவரவர் உடலுக்கு ஏற்றபடியான சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது.
எடை அதிகரிப்பு எப்படி எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறதோ அதே போல அதிக அளவில் எடையை குறைப்பதுகூட ஆரோக்கியமற்றதுதான். அதிலும் குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்கள் அளவுக்கதிகமான எடையை குறைப்பது அவர்களது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
வயதாவது மற்றும் எடைகுறைப்பு இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பும் பெண்கள் அதற்கு முன் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்றே செய்வது சிறந்தது.
- சிலருக்கு மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம்.
- மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.
பெண்களில் மாதவிடாய் சுழற்சியின் முடிவைக் குறிக்கும் ஒரு நிலை மெனோபாஸ். இது மிகவும் பொதுவான, இயல்பான நிகழ்வு. இந்த நிலையில் மாதவிடாயின் அசௌகரியத்தை இனி சமாளிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலருக்கோ மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம். கவலை, மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவற்றுடன் இது சேர்ந்து நடக்கலாம். சில சந்தர்ப்பங்களில், பெண்களின் இதய, எலும்பு ஆரோக்கியமும் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நின்ற காலகட்டத்தை அனுபவிக்கும் பெண்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்ட வேண்டும். எலும்பு இழப்பைத் தடுக்க முயல வேண்டும். மெனோபாஸ் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புச் சிதைவு நோய்) ஆபத்து அதிகரிக்கிறது, எலும்பு இழப்பு தூண்டப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, மெனோபாஸ் காலத்தில் 20% எலும்பு இழப்பு ஏற்படலாம். உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பத்து பெண்களிலும் ஒருவரை ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கிறது.
எலும்பு சேதம் அதிகரிப்பு, எலும்பு வலிமைக்குப் பாதிப்பு போன்றவற்றை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுத்துகிறது. வலி அல்லது அறிகுறிகள் இல்லாமலேயே இந்த நோய் ஏற்படலாம். பெண்களின் எலும்பு வலிமையைப் பராமரிப்பதில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் எலும்பு இழப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற முதல் ஐந்து வருடங்களில் பெண்கள் 10% வரை எலும்பை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம். ஏனெனில் இவர்களுக்கு எலும்பு உடைந்துவிட்டால் சரிசெய்வது சற்று கடினம்.
எலும்பை வலுவாக வைத்திருக்க வைட்டமின் D முக்கியம். சத்தான உணவினை நாம் சாப்பிடுவது மிக முக்கியம் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாகக்கூடும். அன்றாட உணவில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்