என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#அன்புமணி ராமதாஸ்"

    • வரும் 11ம் தேதி பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.
    • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மகாபலிபுரம் அருகே திருவிடந்தையில் நாளை மறுநாள் பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில்," உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கட்டுப்பாடோடு, பாதுகாப்புடன் இங்கே நீங்கள் வந்து செல்ல வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    • சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
    • மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    பின்னர், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது

    மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், வரும் 11ம் தேதி ஞாயிறு அன்று ECR, OMR சாலைகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

    • 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
    • நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

    நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
    • அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ந்தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.

    அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
    • சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.

    * சுதந்திர இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்ட முதல் பிரதமர் மோடிதான்.

    * சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.

    * மத்திய அரசு உத்தரவிட்டாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசும் நடத்த வேண்டும்.

    * சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * சாதிவாரி கணக்கெடுப்பை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் செய்யவில்லை.

    * தி.மு.க.வுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

    * மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வித்தியாசம் உள்ளது என்றார். 

    • புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல்.

    4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை.

    அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
    • இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில், " சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு" என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.

    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

    இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை தகர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இந்தியாவில் கடைசியாக 1931-ம் ஆண்டு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அண்மைக்காலத்திய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டியே பல சமூகங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. அந்த சமூகநீதிக்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவு கட்டும்.

    தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்பட வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டு காலமாக குரல் கொடுத்து வந்தது வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.

    45 ஆண்டுகளுக்கு முன் 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு நடத்தப்பட வேண்டும் என்பது தான்.

    அன்று தொடங்கி இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பல நூறு போராட்டங்கள், கருத்தரங்குகள், மக்கள் இயக்கங்கள் என ஏராளமான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது.

    வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 45 ஆண்டுகளில் இராஜிவ் காந்தி, வி.பி.சிங் , வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பலமுறை கடிதங்கள், கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் மருத்துவர் அய்யா அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகளுக்குத் தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது.

    அதேநேரத்தில் மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.

    2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.

    அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான்.

    இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில் 56 முதன்மை வினாக்கள், 19 துணை வினாக்கள் என மொத்தம் 75 வினாக்கள் எழுப்பி விவரங்கள் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

    அதற்காக 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும்.
    • பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    "தமிழகத்தில் மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பா.ம.க. இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இதில் குறிப்பாக தம்பி, தங்கைகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பது ஆகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.

    இந்த கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

    மேலும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது.

    இதில் 20 மாவட்டங்கள் மிக மிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.

    இதில் 15 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதார வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடை விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    • காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும்.
    • தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேருவோருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டு காலம் தகுதி காண் பருவமாகக் கருதப்பட்டும். இந்த காலத்தில் அவர்களின் நடத்தைக் குறித்து அவர்கள் வாழும் மாநிலங்களின் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால் உரிய காலத்தில் அந்த அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கையை தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஆட்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும். அதில் செய்யப்படும் தாமதத்தால் பணியாளர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் களைய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சி.யால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.

    என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்ததன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வானதிராயபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட 62 மடங்கும், பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அதிக அளவாக 115 மடங்கும் கூடுதலாக பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சி.யால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அந்த ஏரியில் உள்ள நீரிலும் பாதரசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம், கடந்த 2023-ஆம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்திருந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதும் உறுதியாகியிருந்தது. அவை இப்போது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

    என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களால் கடலூர் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்.

    ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி தான் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் ஸ்டெர்லை ஆலை ஏற்படுத்திய தீங்குகளை விட பலமடங்கு அதிக கேட்டை என்எல்சி ஏற்படுத்தியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பது தான் எனது வினாவாகும்.

    தனியார் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் என்.எல்.சியால் பெரும் தீமைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் நம்பிக்கை இல்லை என்றால், சென்னை ஐஐடி மூலம் கூட தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்திக் கொள்ளலாம். அந்த ஆய்விலும் என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன.
    • அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26-ம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 5 லட்சம் மாணவர் சேர்க்கை இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் சேரத்தகுதியான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டு விட்ட நிலையில், இனி எவரும் அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பில்லை என்றும், அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் தான் மிகவும் குறைவாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 31, 336 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் ப்ள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் நடைபெற்று வருகின்றன. இத்தனைப் பள்ளிகளில் வெறும் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றால், ஒரு பள்ளிக்கு சராசரியாக 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தான் பொருள். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 5 மாணவர்கள் கூட சேரத் தயாராக இல்லை என்றால், அரசு பள்ளிகளுக்கு மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31, 336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும் தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டும் தான் பயில்கின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்களே விளக்குகின்றன.

    அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் அங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான். தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பல பள்ளிகளில் மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து விழுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.

    அதேபோல், ஆசிரியர்களும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

    எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர், மாணவியரை சேர்க்கப்படுவதை வகை செய்ய வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×