என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்னி பேருந்துகள்"
- பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
- சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.
கிறிஸ்தவ பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இன்றுடன் தேர்வு முடிகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நாளை வரை தேர்வு எழுதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால் பெரும்பாலானவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
நாளை (23-ந்தேதி) பயணம் செய்ய ஆம்னி பஸ்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. ரெட் பஸ் இணையதளத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல்வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு வழக்கமாக குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. செமி சிலீப்பருக்கு ரூ.2,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.3000 முதல் ரூ.4,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி டிவி வசதி அதில் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில பஸ்களில் ரூ.3,500, ரூ.4000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலுக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.3,600 வரையிலும், மதுரைக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரை வசூலிக்கிறார்கள்.
ஒரு சில ஆம்னி பஸ்களில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கிறார்கள்.
பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கிறார்கள். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.
தற்போது ரெயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் வேறு வழியில்லாமல் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்வார்கள் என்ற நோக்கத்தில் விமான கட்டணத்திற்கு இணையாக உயர்த்தி உள்ளனர்.
சனிக்கிழமையிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு தான் இயல்பான கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
- பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
- பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னை:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் - ரூ.3700 என்றும் தற்போது ரூ.4100 வரை வசூலிக்கப்படுகிறது.
பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர்
- ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
சென்னை:
தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து அரசின் அனுமதியை பெற்றனர்.
வார நாட்களில் ஆம்னி பஸ்கள் காலியாக ஓடுவதாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இடங்கள் நிரம்புவதாகவும் இதனால் ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்து கட்டணத்தை நிர்ணயித்தனர். ஏ.சி. இருக்கை, படுக்கை, ஏசி இல்லாத பஸ்களில் இருக்கை, படுக்கை என கட்டணங்களை பஸ்சின் வசதிக்கேற்ப நிர்ணயித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தேவை அதிகரித்து வருவதால் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏற்கனவே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் தேவையை அறிந்து மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு சில ஆம்னிபஸ் ஆபரேட்டர்கள் தாங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு புஷ்பேக் இருக்கை கட்டணம் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலித்தனர். தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தினர். படுக்கை கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தது. அவை ரூ.2000 ரூ.2,500 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலித்த நிலையில் தற்போது ரூ.3000 வரை வசூலிக்கின்றனர்.

ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.4000 வசூலிப்பதாக தென் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அதை விட கூடுதலாக ரூ.4,500 வரை பெறப்படுகிறது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.3,140 ஆகும். கூடுதலாக 1000 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதே போல திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி பொதுமக்களிடம் பல மடங்கு கூடுதாக வசூலிக்கும் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
ஆம்னி பஸ்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வெளிப்படையாக நடக்கும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பஸ்களை பறிமுதல் செய்வதோடு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.
சென்னை:
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வந்தது.
சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன.
அனைத்து ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆம்னி பஸ்களை 24-ந்தேதி முதல் இயக்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700-800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும்.
ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
- தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.
சென்னை:
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மை தான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆனால் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்.
நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்.
- ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புறநகரில் இருந்து இயக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைமம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளுக்குள் வரக்கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருந்தார்.
அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குத்தான் வருகிறது.
நாளை தைப்பூசம், அதனைத் தொடர்ந்து குடியரசு நாள் என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.
- பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
- அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.
சென்னை:
சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.
தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.
அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.
பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.
- பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்.
- நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் பேருந்துகள் புறப்பட வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.
ஆம்னி பேருந்துகளை எங்கிருந்து இயக்குவது என்பதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தைப்பூசம், குடியரசு தினவிழாவை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அரசு பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் நிறுத்தப்படுகிறது.
ஆனால் பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. பொங்கலுக்கு பின்னரும் அங்கிருந்துதான் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு கறாராக தெரிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இதனால் நேற்று மாலையில் இருந்து கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பயணிகளும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை தாண்டி சென்னை மாநகருக்குள் நுழைய முயற்சித்தன. ஆனால் போலீசார் ஆம்னி பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.
இதனால் ஆம்னி பேருந்து டிரைவர்கள் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தினர். கோயம்பேட்டில் நிறுத்துவார்கன் என நினைத்த பயணிகள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.
கோயம்போடு, தாம்பரம் மற்றும் கிண்டி போன்ற இடங்களுக்கு அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் குழந்தைகள் மற்றும் லக்கேஜ் உடன் ஆட்டோ அல்லது கார்களில் செல்ல முயன்றனர். ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து அதிகத்தொகை கேட்டதால் நெருக்கடிக்குள்ளாகினர்.
குழந்தைகளுடன் மாநரகப் பேருந்துகளில் செல்ல விருப்பம் இல்லாமலும், அதிகத் தொகை கொடுத்து வாடகை ஆட்டோ, கார்களில் செல்ல முடியாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பரிதவித்த நிலையில் பெரும்பாலான பயணிகள் நிற்க வேண்டியிருந்தது.
இதற்கிடையே கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி மற்றும் ரெட் ஹில்ஸ் செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு கோயம்பேடு வழியாக செல்கிறார்.
விடுமுறை நாட்களாக தற்போது ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்காணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் புறப்படும், அங்குதான் வந்து சேரும் என நம்பியிருந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
- ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது
- பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், " தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளும் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது
இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
- கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
- ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடந்த வாரம் தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக பதிவெண்ணாக மாற்றினால் மட்டுமே 547 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசம் வழங்க ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் இயக்கினால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்க படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்துகளை தொடர்ந்து நடத்துகின்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.
தனியார் செயலிகள் மூலமாகவும், புதிதாக பேருந்து இயக்குபவர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
அவர்கள் மீதான புகார்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு தரப்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை கட்டுமான வேலை இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. விரைவில் முடிவடையும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் அவர்களின் சொந்த பணிமனையில் இருந்து இயக்குவார்கள். அந்த பேருந்துகள் 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும்.
அரசுக்கு சில கடமைகள் இருக்கிறது. பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்திக் கொடுக்கும் கடமை. அரசு கூடுதலாக எத்தனை பேருந்துகள் இயக்குகிறது என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
அந்த கூடுதல் பேருந்துகளில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய இடத்தில்தான் இந்த துறை இருக்கிறது. செயலிகளில் குறிப்பிட்ட பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத் தான் உள்ளது.
- தமிழக அரசின் பணி என்பது மக்களின் நலன்களை காப்பது தானே தவிர, தனியார் பேருந்துகளின் நலன்களைக் காப்பது அல்ல.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன. பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக வசூலிக்கப்பட்டக் கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணம் சென்னைக்கு திரும்பி வருவதற்காக வசூலிக்கப்படும் நிலையில், இந்தக் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.
மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.3950 கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது. நெல்லையிலிருந்து சென்னைக்கு ரூ.4500, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.5,000, நாகர்கோவிலில் இருந்து ரூ.3,899 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் விட குறைந்த தொலைவு கொண்ட திருச்சியிலிருந்து சென்னைக்கு வருவதற்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது இயல்பாக அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 6 முதல் 8 மடங்கு வரையிலும், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை விட 4 முதல் 6 மடங்கு வரையிலும் அதிகமாகும்.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத் தான் உள்ளது. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. வழக்கம் போலவே பொங்கல் திருநாளுக்கு முன்பாக, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமான வசனங்களுடன் தமிழக அரசிடமிருந்து அறிக்கை வந்தது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த எண்களை தொடர்பு கொண்டால், "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை. அதனால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்'' என்று மட்டுமே பதில் கிடைத்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆணையர் ஷன்சொங்கம் ஜடாக் சிரு உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டிய அரசும், அதிகாரிகளும் எந்த அளவுக்கு விழிப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். கட்டணக் கொள்ளை குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பிறகு தமிழக அரசின் சார்பில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கண் துடைப்பு அறிவிப்பு வெளியாகும்.
கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சராசரியாக ஒரு பேருந்துக்கு ரூ.1750 மட்டும் தான் வசூலிக்கப்பட்ட்டிருக்கும். ஒரு பயணியிடம் ரூ.5000 என்ற அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்தும் பேருந்துகளிடம் ரூ.1750 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டால், தனியார் பேருந்துகள் எவ்வாறு திருந்தும்? கட்டணக் கொள்ளையை எவ்வாறு தடுக்க முடியும்? கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது ஏன்?
தமிழக அரசின் பணி என்பது மக்களின் நலன்களை காப்பது தானே தவிர, தனியார் பேருந்துகளின் நலன்களைக் காப்பது அல்ல. இதை உணர்ந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அளித்தத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.