என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி முதலமைச்சர்"
- தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
- இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
புதுச்சேரி:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார்.
- அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமைசெயலாளர் மற்றும் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவியாளர் பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதேபோல் அமைச்சக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே முதலமைச்சரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார். அங்கு காத்திருந்த அமைச்சக ஊழியர்கள் மனித சங்கிலி போன்று நீண்ட வரிசையில் நின்று கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.
- மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும்.
- தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இப்போதும் எடுத்து வருகிறோம். 1971-ம் ஆண்டில் 31 செ.மீ. மழை பெய்தது. அதுதான் அதிகபட்சமான மழை. தற்போது 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதான் அதிகபட்சமான மழை. எதிர்பார்க்காத மழை.
எல்லா வாய்க்காலிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றமாக இருந்ததால் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. கடல் நீரை உள்வாங்காததால் வாய்க்கால் நிறைந்து தண்ணீர் ஊருக்குள் வந்தது. எல்லா பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்தது.
மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும். தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுத்து வருகிறோம்.
மக்களை வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் காவல் துறையினர் சொல்வதை கேட்டு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.
நடேசன் நகர், உப்பளம் வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளேன். எல்லா துறையினரும் வேலை செய்து வருகிறார்கள். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
- தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
- புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத.
இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களை மீட்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாகையிலிருந்து மீன்பிடிக்க காரைக்கால் மாவட்டம் கீழ்காசாக்குடி அன்பழகன், 15 வயது சிறுவன், காரைக்கால்மேடு பாண்டியன், வேலாயுதம், மயிலாடுதுறை மாவட்டம் கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், ரமேஷ், 16 வயது சிறுவன், நாகை ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த 8-ந் தேதி இரவு 11.30 மணிக்கு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
- மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
- முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது.
- கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதமும் 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்சர்மா, அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது. மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு அனுமதி அளித்தது.
தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடு காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதனால் புதுவை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி வருவாய் கிடைக்காது.
இதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது.