என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி"
- பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
- கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர்.
அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். அன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடைபெறும்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், அவல், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ணக் கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமணத் தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.
நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களைப் பெற்றிடுவோம்.
- உறியடி திருவிழா வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
- உறியடி என்பது... குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பப்பட்ட பானையை உடைப்பது.
உறியடி திருவிழா வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே உறியடி திருவிழாவை நடத்துகிறார்கள். திருவண்ணாமலையில் அடி அண்ணாமலையில் இந்த தடவை 3-வது ஆண்டாக உறியடி விழா நடக்கிறது. மற்றபடி தமிழக கிராமங்களில் கோவில் விழாக்களில் உறியடி நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு.
உறியடி என்பது... குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பப்பட்ட பானையை உடைப்பது.
உறியடி விழாவில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களிடம் ஆளுக்கு ஒரு கம்பை கொடுத்து விடுவார்கள். அந்த கம்பை பயன்படுத்தி அவர்கள் உறியில் கட்டி தொங்க விடப்பட்ட பானையை உடைக்க வேண்டும்.
ஆனால், எளிதாக பானையை உடைத்து விட முடியாது. ஒவ்வொருவராக ஓடி வந்து பானையை உடைக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பானையை அடிக்க கம்பை ஓங்கும்போது பானையை மேல் நோக்கி, கீழே நோக்கி என்று ஒருவர் கயிற்றால் இழுத்துக் கொண்டு இருப்பார். இதனால் குறி தவறி, பானையை எளிதில் உடைக்க முடியாமல் போய்விடும். அதையும் தாண்டி பானையை உடைப்பவருக்கு பரிசு வழங்கப்படும்.
சில இடங்களில் குறிப்பிட்ட உயரத்தில் பானையை கட்டி வைத்திருப்பார்கள். அதை இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, ஒருவர் மீது ஒருவர் ஏறிச்சென்று உடைப்பார்கள். பானையை உடைத்த இளைஞர் குழுவுக்கு பரிசு வழங்கப்படும்.
இதேபோல், உறியடி பானையை உடைக்க வருபவரின் கண்களை துணியால் கட்டி, அவரது கையில் ஒகு கம்பையும் கொடுத்து, பானையை உடைக்கச் சொல்வதும் உண்டு.
இப்படி உறியடி விழா பல வகைகளாக நடக்கும்.
இந்த விழா அழகான தத்துவம் ஒன்றை நமக்கு எடுத்துரைக்கின்றது. பானை என்பது பரம்பொருள், அது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. பரம்பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் மனித வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.
ஆனால் நடுவில் பல அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி பல ஜீவன்கள் இறைவனை அடைய முடியாமல் போய் விடுகின்றன. ஆனால், இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு உறுதியாகச் செயல்பட்டு, அகங்காரம் என்னும் பானையை உடைத்து விட்டால், இறையருள் எனும் பரிசு நமக்கு கிடைத்து விடும்.
- மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
- கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான்.
கிருஷ்ணருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கோவர்த்தன கிரி மேய்ச்சல் நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். ஒரு நாள் ஆயர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.
எங்கே போகிறீர்கள்? என்று கிருஷ்ணர் கேட்க, பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்ய செல்கிறோம் என்றனர்.
ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம். இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது என்றான் கண்ணன்.
மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம், செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா என்று கேட்டான் கண்ணன்.
அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக்கொண்டனர். எந்தத்தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத்தம் பசுக்களை மதித்து வழிபட்டனர். இந்திரன் இதனை அறிந்து கோபம் கொண்டான். ஆயர்களை அடக்குவதற்காகக் கடுமையாக மழை தொடர்ந்து பெய்ய செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. ஆயர்களும் பசுக்களும் தவிப்புக்குள்ளானார்கள்.
கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் தஞ்சம் அடைந்தனர்.
கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித்தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கண்ணனை அவன்தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.
- உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே.
- எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன.
ஸ்ரீகிருஷ்ணர் வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் "உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக்கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாகக் கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு. எனக்காகவே எல்லா கர்மங்களையும் செய். பற்றுகளிலிருந்து விலகி விடு. தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு".
- இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல.
- கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான்.
எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர்.
இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன்.
குசேலரின் திருவடியை வணங்கினான். கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா? எனக்கேட்டு, உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே! என்று சொல்லி அவற்றை வருடினான்.
கண்ணணின் அன்பை கண்ட குசேலர் மெய்மறந்து போனார்.
இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.
- யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான்.
- கண்ணா! நான் மோட்சம் பெற காரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு! என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.
நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி.
யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.
கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, கண்ணன் இங்கு வரவில்லையே என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு. கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான்.
அவன் கண்ணனிடம், கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன் எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.
கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான்.
- கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.
- கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும்.
கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.
கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும்.
கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசு தானம் செய்த புண்ணியம் கிடைத்துக்கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
- கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
- கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன்.
கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.
வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
- கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது.
- யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
* கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
* சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
* அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.
* யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
* சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.
* ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.
- அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
- வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 ஆழாக்கு
உளுந்து மாவு - 2 ஸ்பூன்
தேங்காய் - 1 துண்டு
வெல்லம் - 1 கப்
எள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் (தேவையான அளவு)
செய்முறை:
* அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
* பிறகு எள்ளையும் வறுக்கவும்.
* தேங்காயை சிறு சிறு பல்லாக வெட்டி நெய்யில் வறுக்கவும்.
* வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.
* எண்ணெய் காய வைத்து வெல்லமாவை சிறு உருண்டையாக (முழு நெல்லிக்காய் அளவு) உருட்டி பொரித்து எடுக்கவும்.
- கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
- அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்
செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.
- நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
- மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.
மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.
அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.
இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-
தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.
முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.
பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.
இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.
ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.
வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.
இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.
ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.