என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் அதிகாரி"
- தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார்.
- அனைத்து கட்சி கூட்டத்தை வரும் 18-ந் தேதி பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா? என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்தியாவில் தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன் கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 14 தேசிய மற்றும் மாநில கட்சிகளை இந்த கூட்டத்திற்கு அவர் அழைக்கவுள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தை வரும் 18-ந் தேதி பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா? என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி பேசிய அர்ச்சனா பட்நாயக், 18-ந் தேதியை உத்தேசமாகத்தான் கருதியுள்ளோம் என்றும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
- பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை 20-ந்தேதி (நேற்று) தொடங்கியது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் அந்தந்த கட்சிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் காலகட்டம் என்பதால் இந்த வார இறுதி நாளில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
கோவையில் 18-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், சீருடையில் பள்ளி மாணவிகள் பங்கேற்றது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது என்றும் பிரதமர் வரும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களாகவே பள்ளிக்கு வெளியே வந்து பிரதமரை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்ததும் அது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும், நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, பா.ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ், சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத் பெரியசாமி, மார்க்சிஸ்டு சார்பில் பீமாராவ், ஆறுமுக நயினார், தே.மு.தி.க. சார்பில் வக்கீல் சந்தோஷ் குமார், மாறன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக், லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கூறப்பட்டது.
- தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.
- சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
* தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.
* சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.
* தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* வாக்குப்பதிவு தினத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறினார்.
- மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது.
- தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் எந்தெந்த பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் பாகம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நிழற் பந்தல்கள், நாற்காலிகள், குடிநீர் வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாத பணியாளர்கள், மருத்துவ காரணங்கள் கூறி இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே தேர்தல் பணிக்கு யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. பயிற்சி வகுப்புக்கு வராத ஊழியர்கள் அடுத்து நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு வந்து விடுகிறார்கள்.
இந்த தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எவ்வளவு பேர் வராமல் உள்ளனர் என்ற விவரம் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் சேகரித்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் தேர்தல் நடத்தும் ஊழியர்கள் முழுவதும் பெண்களாக இருப்பார்கள். இதேபோல் ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியை முற்றிலும் மாற்றுத் திறனாளிகள் கவனிப்பார்கள்.
இளம் தலைமுறையாக உள்ள அரசு ஊழியர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மாவட்டத்துக்கு ஒன்று அமைக்கப்படும்.
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 702 பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் இப்போது கூடுதலாக 191 படைகள் உருவாக்கப்படடு 893 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 702 நிலைக் குழுக்களின் எண்ணிக்கையும் இப்போது 906 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு கணக்கு வேண்டும். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிக அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன. இதேபோல வேறு சிலரும் மனு கொடுத்திருந்தனர்.
இவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் அதற்கு அங்கிருந்து பதில் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால், ஜனநாயக நாடு என்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
- தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தாம்பரத்தில் நெல்லை ரெயிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபற்றிய விசாரணை, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமே என்னிடம் கூறப்பட்டது. வருமான வரித்துறையும், தேர்தல் செலவின பார்வையாளரும் சேர்ந்து சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபற்றிய தகவல்களை அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனிடம் நேரடியாக தெரிவிப்பார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் (பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக) ஒரு பகுதியில் உள்ள சிலர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். அவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவார். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களை கண்டிப்பாக வாக்களிக்க வலியுறுத்தப்படும். பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடிந்தால் அதையும் செய்வார்கள். பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால், ஜனநாயக நாடு என்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
'சுகி, சுமோட்டா' மற்றும் பல இணையதளங்களிலும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். அனுமதி பெறாமல் விளம்பரம் செய்தால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதையொட்டி தமிழகத்திற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியபடி நடக்காமல் பணியில் மெத்தனமாக இருக்கும் பறக்கும் படை அதிகாரிகள் சிலர் மீது இடைக்கால பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பணியில் தொடருவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 6.32 கோடி வாக்காளர்களில் நேற்று வரை 4.36 கோடி வாக்காளர்களுக்கு அதாவது 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
சி.விஜில் செயலி மூலம் இதுவரை 3605 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 74.52 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த மையம் தபால் வாக்கிற்கு என அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
எடுத்துக்காட்டுக்கு சென்னையில் பணிபுரியும் ஒருவரின் வாக்கு கன்னியாகுமரியில் இருந்தால் சென்னையிலிருந்து ஒரு அதிகாரி கன்னியாகுமரிக்கு சென்று அந்த தபால் வாக்கு சீட்டுகளை அளித்துவிட்டு வருவார்.
தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்தும் ஒருங்கிணைந்த மையமான திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அளிக்க எந்தவித தடையும் இல்லை.
தொடர்ச்சியாக செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதி பெற தேவையில்லை. இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா்.
- நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா்.
சென்னை:
தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும். கூடுதல் பாதுகாப்பு தேவைக்கு அண்டை மாநிலங்களில் உள்ள போலீசாரை அவா்களுக்குரிய செலவினங்களை ஏற்று, பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து மாநில காவல் துறை இயக்குநா்களுக்கும் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. யாருக்கெல்லாம் தபால் வாக்குகள் வந்து சேரவில்லையோ அவா்களுக்கு தபால் வாக்குகள் விரைந்து கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை தங்க க்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ள மையங்களில் பதிவு செய்யலாம். 17-ந்தேதி (புதன்கிழமை) அந்தந்த மையங்களில் இருந்து, பிற தொகுதிகளுக்கு உரிய தபால் வாக்குகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த தபால் வாக்கு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் மட்டுமே ஜூன் 4-ந்தேதி காலை 8 மணிக்கு (வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம்) முன்பு வரை தபால் வாக்குகளை அனுப்ப அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.
- அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
குறைவான எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் உள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். கூடுதல் எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருக்கும் மற்ற மாவட்டங்களில் கூடுதலாக ஒரு அலுவலர் பணியாற்றுவார்.
வாக்குப்பதிவு அன்று ஏதாவது தனியார் நிறுவனம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி. 'கோடை' சேர்த்து 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம்.
எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு ஜூன் 4-ந்தேதிக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த முடியுமா? என்றால், தேர்தல் கமிஷன்தான் அதில் முடிவெடுக்கும். ஒருவேளை விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள தேவையான வாக்கு எந்திரங்கள் தயாராக உள்ளன. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம்.
பாராளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை. எனவே தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் 17-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம்.
சென்னை:
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிக்கும் இன்று வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அடையாள மை உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உரிய போலீசாரும், துணை ராணுவ படையினரும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் இங்கு நடைபெறும் வாக்குப்பதிவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக 10 வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டல குழு என்ற வீதத்தில் 6 ஆயிரத்து 137 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் உடனடியாக சென்று பழுது பார்த்து கொடுப்பார்கள். பழுது பார்க்க முடியாத எந்திரங்களாக இருந்தால் புதிய எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
வாக்குப்பதிவின்போது விவிபேட் எந்திரத்தில் தவறான ஓட்டு காண்பிக்கப்படுவதாக இருந்தால், அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் யார் வேண்டுமானாலும் முறையிடலாம். புகாரில் உண்மை இருந்தால் அந்த எந்திரம் மாற்றப்படும்.
புகார் தவறாக இருந்தால் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம். அவரிடம் ஓட்டளிப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் வாக்குச்சீட்டில் டெண்டர் ஓட்டு போடலாம். அந்த சீட்டை கவரில் போட்டு தனியாக வைப்பார்கள். ஓட்டு எண்ணிக்கையின்போது வெற்றி தோல்விக்கு ஓரிரு வாக்கு வித்தியாசம் வந்தால் இந்த டெண்டர் ஓட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்காக சாய்வு தளம் செய்து தரப்பட்டு உள்ளது. அவர்கள் வரிசையில் காத்திருக்க தேவை இல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடும்போது முதலில் சட்டசபைக்காக விரலில் மை வைக்கப்படும். அடுத்ததாக பாராளுமன்ற ஓட்டுக்காக இன்னொரு விரலில் மை வைக்கப்படும்.
இந்த தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக விழிப்புணர்வு பிரசாரம் நிறைய செய்து உள்ளோம். வாக்காளர்கள் அனைவரும் தங்களது கடமையை நிறைவேற்றும் வகையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து நாளை வாக்களிக்க வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.
18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். சுமார் ஒரு லட்சம் மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படும்.
மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன. இ.வி.எம்., விவிபேட் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கி உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
- வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது.
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55 சதவீத வாக்குப்பதிவும், 11 மணி வரை 24.37 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
சென்னை அண்ணாநகர் உள்பட சில பூத்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும் என்ஜினீயர்கள் விரைந்து சென்று அதை சரி செய்தனர்.
சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர் என்ற தகவல் வந்தது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளோம்.
வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது. எனவே வாக்காளர்கள் முழுமையாக வந்து ஓட்டு போடலாம். ஒரு சில பிரச்சனைக்காக சில இடங்களில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தகவல் வந்தது. அவர்களிடம் மாவட்ட அதிகாரி பேசி வருகிறார். ஓட்டு போடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டு உள்ளோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.