search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை பொக்கிஷங்கள்"

    • யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை.
    • சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று சுதந்திரத்துக்கு முன்பு பாரதி பாடியது சுதந்திரத்துக்கு பிறகு எட்டுத்திக்கும் சென்று களவாடப்பட்ட நமது கலைச் செல்வங்களை மீட்டு கொண்டு வாருங்கள் என்று மாற்றி பாடி இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

    காலத்தால் அழிக்க முடியாத நமது கலைப் பொக்கிஷங்களான பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. பாராட்டுக்கள்.

    அந்த வரிசையில் இப்போது கும்பகோணம் அருகே சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்த 3 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலையும், டெக்சாஸ் அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடா ஹில்ஸ் ஏல மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

    களவாடி கடல் கடந்து கொண்டு செல்லப்பட்ட கலை செல்வங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருவது வரவேற்கத் தக்கது. இதற்காக சிரத்தை எடுத்து செயல்படும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

    சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இந்த 3 சிலைகளும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போய்விட்டது. அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்புதான் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதில்தான் எங்கோ இடிக்கிறது! அதாவது கோவில் பூட்டை உடைத்து திருடவில்லை. விலை உயர்ந்த ஒரிஜினல் சிலையை எடுத்துவிட்டு போலி சிலையை வைத்துள்ளார்கள். இது யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை. 60 ஆண்டுகளாக வெளியே தெரியாத... இல்லை... இல்லை. வெளியே சொல்லாத ஒரு உண்மை இப்போது வெளியே சொல்லப்பட்டுள்ளது.

    இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று சிலை கடத்தல் பிரிவின் நெருக்கடி அல்லது குற்றம் நிகழ்ந்தது பற்றிய குறுகுறுப்பாக இருக்கும். இனி சிலையை மீட்பதோடு பிரச்சினை தீர்ந்து விட்டது என்று கருதாமல் சம்பந்தப்பட்டவர்களையும் அடையாளம் காண முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேடல், மீட்பு என்பதெல்லாம் முழுமை அடையும்.

    ஏனெனில் இந்த சிலைகள் சாமானிய ஒன்றிரண்டு பேரால் எடுத்து செல்லப்பட்டிருக்காது. போலி சிலைகள் தயார் செய்வது, கோவிலில் இருந்து எடுப்பது, போலி சிலையை வைப்பது, எடுக்கப்பட்ட சிலைகளை விமானத்தில் கொண்டு செல்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அவர்களையும் கண்டுபிடித்து `காப்பு' போட்டால்தான் சிலைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அது மட்டுமல்ல நமது முந்தைய நாகரீகங்களை அகழ்வாராய்ச்சிகள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

    நம் கண் முன்னால் இருக்கும் நமது பாரம்பரிய நாகரீகத்தையும், கலையையும் காப்பாற்றி பாதுகாக்க வேண்டியதும் நமது கடைமையல்லவா? அந்த கடமையில் தவற கூடாது.

    ×