என் மலர்
நீங்கள் தேடியது "புதுவை அரசு ஊழியர்கள்"
- இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் வருகிற 12-ந் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முன் மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மிஷன் ஜீரோ திட்டத்தின் கீழ் உயிரிழப்பினை தடுக்க வருகிற 12-ந் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும்.ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளின் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்.
அனைத்து நிர்வாக செயலாளர்கள், டி.ஜி.பி., துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது.
- சிலர் வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகி விடுவது உண்டு.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் நீண்ட நாட்களாக உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது. அரசு துறைக்கும் தகவல் தெரிவிப்பது கிடையாது. சிலர் வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகி விடுவது உண்டு.
சிலர் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய துறைக்கு செல்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைவதும் உண்டு.
இது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலர் சரத்சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வரும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி பணிக்கு வராத அரசு ஊழியர் விவரங்களை உடனடியாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என கூறப்படுகிறது. அந்த விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில், பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. மேலும் அவர்களது பணிக்காலம் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.
- புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்துமா என அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதனால் அர சுக்கு ஆண்டிற்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.