search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் உயிரிழப்பு"

    • திடீரென்று மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது.
    • மினி பஸ் கவிழ்ந்து பலியான நால்வரில் 2 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமம். ஆரம்பம், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தபோதிலும், கல்லூரி படிப்பிற்கு மாணவ, மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

    அதிலும் குறிப்பாக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மம்சாபுரத்திற்கு இயக்கப்பட்ட போதிலும் ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் இயக்கப்படுவதால் அதனை நம்பியே மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் இருந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மம்சாபுரத்தில் இருந்து இன்று காலை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்தபோது திடீரென்று அந்த மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சல் போட்டார்கள். டிரைவர் பஸ்சை நிறுத்த போராடியும் முடியாமல் போனது. கடைசியில் அந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்து நடந்ததும், பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர். பஸ் கவிழ்ந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, விபத்து பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    உடனடியாக மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்தன. அக்கம்பக்கத்தினர் பஸ்சுக்குள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இருந்தபோதிலும் இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்களான சதீஷ்குமார், வாசுராஜ், ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் நிதிஷ்குமார் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

    மேலும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலர் 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியவாறு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி காலை நேரங்களில் மம்சாபுரம் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
    • விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    வடக்கு மத்திய நைஜீரியாவில் நேற்று காலை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு மாடி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிளாட்டு மாநிலத்தின் புசா புஜி பகுதியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    இந்த கோர விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 132 மாணவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 22 மாணவர்கள் உயரிழந்துள்ளனர். 

    விபத்து குறித்து, நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் கூறுகையில்," விபத்து ஏற்பட்ட உடனே சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    உடனடி மருத்துவ கவனிப்பை உறுதி செய்வதற்காக, ஆவணங்கள் அல்லது கட்டணம் இல்லாமல் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக, பிளாக் மாநில தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.

    பள்ளியின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அருகே பள்ளி அமைந்துள்ளதே விபத்து ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற 12க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. அங்கு, கட்டிடங்கள் இடிந்து விழுவது சகஜமாக உள்ளது.

    கட்டிட பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தத் தவறியதாலும், மோசமான பராமரிப்பு காரணமாகவும் இதுபோன்ற பேரழிவுகமக ஏற்படுவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • கடந்த 7-ந்தேதி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
    • மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 மாணவர்கள் கடந்த 5-ந்தேதி உயிரிழந்தனர். 11 மாணவர்கள் மற்றும் காவலாளி என 12 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள அரசு காப்பகம் மற்றும் வீடுகளுக்கு திரும்பினர்.

    இதற்கிடையே கடந்த 7-ந்தேதி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், "குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகபாதுகாப்பு த்துறையின் நன்னடத்தை அலுவலர் நித்யா (பொறுப்பு) பதவி ஏற்றார். 3 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×