என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட செயலாளர்கள்"
- தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முடிவு.
- புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்ட சபை பொதுத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க. வியூகம் வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கேற்ப கட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு வசதியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்து இருந்தார். இந்த குழுவில் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழு அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கூடி தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தது.
அது மட்டுமின்றி எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை நிலவுகிறது என்பதையும் கேட்டறிந்தனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களை தனியாக அழைத்தும் கட்சி நிலவரங்களை கேட்டு வந்தார்.
இளைஞரணி அமைப்பாளர்களிடம் விவரங்கள் கேட்டறிந்து வந்தார். மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? கட்சிக்காரர்களுக்கு அமைச்சர்கள் உதவுகிறார்களா? மதிக்கிறார்களா? என்று பல்வேறு தகவல்களை கேட்டறிந்து வைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் கட்சியை மேல்மட்ட அளவில் சீரமைக்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பல்வேறு முடிவுகளை மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் முடி வெடுத்திருந்தார்.
அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில் சென்னையில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும், மற்ற மாவட்டங்களில் 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்தது.
அதாவது ஒரே பாராளுமன்ற தொகுதிக்குள் மாவட்டங்கள் அமையும் வகையில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலை முதலில் ஏற்றுக் கொள்ளாமல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால் இப்போது 2026-ம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு வசதியாக கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளார்.
அதன் முதல் நடவடிக்கையாக தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் என்று இருப்பதை 76 மாவட்டங்களாக பிரித்துள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் மத்திய மாவட்ட மும், திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்க ளும், விழுப்புரத்தில் மத்திய மாவட்டம் என 4 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.
இதன் மூலம் தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்திருந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி வழங்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்காக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், வானூர் ஆகிய 2 தொகுதிகளை பிரித்து விழுப்புரம் மத்திய மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டத்துக்கு டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ. மாவட்ட செய லாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரும் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்தான்.
இதேபோல் திருப்பூரில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்களாக செயல் பட்ட தி.மு.க.வில் கிழக்கு, மேற்கு ஆகிய 2 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இதில் தெற்கு மாவட் டத்தில் இருந்த காங்கேயம், தாராபுரம் ஆகிய 2 தொகு திகளை பிரித்து மேற்கு மாவட்டம் உருவாகி உள்ளது. இந்த மாவட்டத் துக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாவட்ட செயலாளராகி உள்ளார்.
வடக்கு மாவட்டத்தில் இருந்து பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய 2 சட்டசபை தொகுதிகளை பிரித்து கிழக்கு மாவட்டமாக்கி அதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலளாராகி உள்ளார். அவர் வகித்து வந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இல.பத்மநாபன் தொடர்கிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ.விடம் இருந்த மதுரை மேற்கு தொகுதி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி வசம் வந்துள்ளது.
இதேபோல் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக் கப்பட்டு வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதே போல் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ.வுக்கு பதில் பட்டுக்கோட்டை பழனி வேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செய லாளராக இருந்த முபாரக் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு கே.எம்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்த மைதீன்கானுக்கு பதிலாக பேட்டை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. நியமிக்கப் பட்டுள்ளார்.
இன்னும் தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கரூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அமைப்பு ரீதியாக தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ஏற்ப அடுத்தடுத்த நாட்களில் அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தெரிகிறது.