search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீராபென் மோடி"

    • தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.
    • உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    இஸ்லாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    • என் வாழ்வில் நல்லவற்றுக்கெல்லாம் என் பெற்றோர்தான் காரணம் ஆவார்கள்.
    • என் அம்மா தனிச்சிறப்பானவர் மட்டுமல்ல, எளிமையுமானவர்.

    அம்மா-

    இந்த மூன்றெழுத்து மந்திரத்தின் முன் மயங்காத மனிதர்கள் உலகில் இல்லை. அப்படி இருக்கிறபோது, பிரதமர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து விட முடியுமா, என்ன?

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் 100-வது பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. அப்போது தனது தாயாருடனான நினைவலைகளை பிரதமர் மோடி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    அதில் அவர் தனது தாயின் உன்னதமாக பக்கத்தை, அவரது தியாக வாழ்க்கையை காட்டி இருந்தார்.

    அதில் இருந்து சில துளிகள்....

    அம்மா... இந்த வார்த்தைக்கு இணையாய் அகராதியில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. இது, அன்பு, பொறுமை, நம்பிக்கை இன்ன பிற முழு அளவிலான உணர்ச்சிகளின் சங்கமம் ஆகும். உலகமெங்கும் எந்த பாகுபாடுமின்றி அனைவரும் தங்கள் தாயின் மீது தனிப்பாசம் வைத்திருக்கிறார்கள். ஒரு தாய், தன் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மட்டுமின்றி, அவர்களின் மனங்களையும், ஆளுமையையும், தன்னம்பிக்கையையும் வடிவமைக்கிறாள். அப்படிச் செய்யும்போது, தாய்மார் தன்னலமின்றி தங்கள் சொந்தத்தேவைகளையும், விருப்பங்களையும் தியாகம் செய்கிறார்கள்.

    என் வாழ்வில் நல்லவற்றுக்கெல்லாம் என் பெற்றோர்தான் காரணம் ஆவார்கள்.

    என் அம்மா தனிச்சிறப்பானவர் மட்டுமல்ல, எளிமையுமானவர்.

    எல்லா தாய்மார்களையும் போலத்தான் நானும் என் அம்மாவைப்பற்றி எழுதுகிறபோது, உங்களில் பலரும் அவரை எனது வார்த்தைகளுடன் தொடர்புபடுத்திப்பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல, இதை நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தாயின் உருவத்தையும் நீங்கள் பார்க்க முடியும்.

    ஒரு தாயின் தவம்தான், ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது. அவரது பாசம்தான், ஒரு குழந்தையை மனித மதிப்பீடுகளாலும், கரிசனைகளாலும் நிரப்புகிறது. தாய், ஒரு தனி நபரும் அல்ல, ஒரு ஆளுமையும் அல்ல. தாய்மைதான் தாயின் குணம்.

    கடவுள்கள், பக்தர்களின் இயல்புக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்கள் என்று அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அதுபோலத்தான், தாய்மார்களையும், அவர்களது தாய்மையையும், நாம் நம் சொந்த இயல்பு மற்றும் மனநிலைக்கு ஏற்ப அனுபவிக்கிறோம்.

    என் அம்மாவுக்கு தனது சொந்தத்தாயின் பாசம் கிடைத்தது இல்லை. இளம்வயதிலேயே என் பாட்டி, ஸ்பானிஷ் புளூ என்ற தொற்று நோய்க்கு பலியாகி விட்டார். தன் தாயின் முகமோ, அவரது மடியில் இருந்து அனுபவித்த சுகத்தையோ கூட என் அம்மாவால் நினைத்துப்பார்க்க முடியாது.

    தனது ஒட்டுமொத்த குழந்தைப்பருவத்தையும் தாயின்றி கழித்தவர், அம்மா. அவர் பள்ளிக்கும் போனதில்லை. அவரது குழந்தைப்பருவம், வறுமையும், ஏழ்மையும் நிறைந்ததுதான். அதுதான் கடவுளின் விருப்பம் என்று அம்மா நம்பினார். ஆனால் தன் தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாதது, அவருக்கு எப்போதுமே வலியைத் தந்திருக்கிறது.

    குழந்தைகளான நாங்கள் எங்கள் படிப்பினை விட்டுவிட்டு வீட்டு வேலைகளில் தனக்கு உதவ வேண்டும் என்று அம்மா ஒருபோதும் எதிர்பார்த்தது இல்லை. எங்களிடம் அவர் உதவி கேட்டதும் கிடையாது. ஆனால் அவரது கடின உழைப்பைப் பார்த்து நாங்கள் தாமாகவே முன்வந்து உதவுவது எங்கள் தலையாய கடமை என நினைத்தோம்.

    வீட்டுச்செலவுகளை கவனிப்பதற்காக அம்மா, சில வீடுகளுக்கு சென்று பாத்திரங்களை துலக்கித்தருவார். கூடுதல் வருமானம் வேண்டும் என்பதற்காக ராட்டை சுற்றுவார். பருத்தியை உரித்தெடுப்பது, நூல் நூற்பது என எல்லாவற்றையும் செய்வார். வாழ்வில் அம்மா, எதைப்பற்றியும் குறை சொன்னதில்லை. யாரைப்பற்றியும் குறை கூறியதில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததும் இல்லை. இன்றைக்கும் அம்மா பெயரில் எந்தச்சொத்தும் இல்லை. அவர் தங்க நகைகளை அணிந்து நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு சின்னஞ்சிறு அறையில் எளிமையான வாழ்வு வாழ்வதைத்தான் விரும்பினார். என் அம்மாதான் என் ஆதர்ச சக்தி.

    2001-ம் ஆண்டு நான் குஜராத் முதல்-மந்திரி பதவி ஏற்பதற்கு முன்பாக அவரது ஆசியை நாடி நின்றேன். அப்போது அம்மா என்னிடம், நீ எதற்காக அரசாங்கத்தில் வேலை செய்யப்போகிறாய் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் சொல்ல விரும்புவது ஒருபோதும் லஞ்சம் வாங்காதே என்பதுதான் என்று சொன்னார்.

    ஒருமுறை நான் எனக்கு மாபெரும் ஆசிரியையாக அமைந்த அம்மா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் பொதுவெளியில் கவுரவிக்க விரும்பினேன். ஆனால் அம்மா, நான் ஒரு சாதாரண நபர்தான். நான் உன்னைப் பெற்றெடுத்திருக்கலாம். ஆனால் உனக்கு கற்பித்து, வளர்த்தெடுத்தவர் கடவுள்தான் என்று கூறி மறுத்துவிட்டார்.

    நாங்கள் வாத் நகரில் வாழ்ந்தது, மண்குடிசைதான்.

    மழைக்காலத்தில் வீட்டின் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகும். அம்மா, அந்த மழைநீரை வீட்டில் இருந்த வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்து நிரப்புவார். இப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலையிலும், அம்மா மன உறுதியின் அடையாளமாக இருப்பார்.

    என் அம்மாவின் வாழ்க்கைக் கதையில் இந்தியாவின் தாய் சக்தியின் தவம், தியாகம், பங்களிப்பு என எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன். அம்மாவையும், அம்மாவைப்போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பார்க்கிறபோது, நமது இந்தியப்பெண்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்று கண்டுகொள்கிறேன்.

    ஒவ்வொரு இழப்பின் கதையையும் தாண்டி, போற்றுதலுக்குரிய ஒரு தாயின் கதைதான், அம்மாவின் வாழ்க்கைக்கதை. ஒவ்வொரு போராட்டத்திலும் அம்மாவின் மன உறுதி மேலானது.

    உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா. உங்கள் வாழ்கையைப் பற்றி பொதுவெளியில் எழுதும் தைரியத்தை இதுவரை நான் பெற்றதில்லை.

    உங்கள் பாதங்களில் பணிகிறேன் அம்மா!

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி தனது தாயைப் பற்றி உருக்கமாய் பகிர்ந்து கொண்டிருந்தார்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி பற்றிய நினைவலைகளை அண்டை வீட்டார் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுபற்றிய ஒரு பார்வை இது:-

    கீர்த்தி பென் படேல்:- ஹீராபா (எல்லோரும் இப்படித்தான் செல்லமாய் அழைக்கிறார்கள்) 70 ஆண்டு காலம் இங்கே வாழ்ந்திருக்கிறார். அவரை கிட்டத்தட்ட தினமும் சந்திப்போம். அவர் தாழ்மையானவர், எளிமையானவர். நான் இன்று என் அம்மாவை இழந்த வலியை உணர்கிறேன். எங்கள் அனைவருக்கும் அவர் ஆசி வழங்கி இருக்கிறார். அவர் எங்கள் ராஜமாதா.

    தாராபென் படேல்:- ஹீராபா எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலத்தான். அவர் எல்லோருடனும் நல்லிணக்கத்துடன் இருந்து வந்தார்.

    ரமேஷ் பிரஜாபதி:- அவர் பிரதமரின் தாயாராக இருந்தபோதும் ஒரு சாதாரண பெண்மணிபோலத்தான் இருந்தார். எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். எல்லோருடனும் கலந்துவிடுவார். ஏழைகள் மீது கரிசனை வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் சொல்வார்.

    கோகிலாபென் படேல்:- அவர் எப்போதுமே எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். தீபாவளிதோறும் எங்கள் ஒவ்வொருவரையும் அவர் வாழ்த்தி மகிழ்வார். நான் மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். அவரோடு நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் எங்களுக்குப் பெருமை.

    இவ்வாறு அவர்கள் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


    நரேந்திர மோடி - ஹீராபென் மோடி

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்... அம்மா!" என்று பதிவிட்டுள்ளார்.



    • பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அகமதாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

    தாயார் ஹீராபென் மோடி, அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பிரதமரின் தாயார் இன்று காலை மறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி
    • இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.

    அகமதாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து சென்று தாயாரைப் பார்த்தார்.

    அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார். ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலமானார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைகிறார். மேற்கு வங்காளத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வாக்கு சாவடிக்கு வந்தார்.
    • பிரதமரின் தாயார் வாக்களிக்க குடும்ப உறுப்பினர்கள் உதவி செய்தனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் காந்திநகர் அருகே ரேசன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வருகை தந்தார். பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தமது வாக்கை அவர் பதிவு செய்தார்.

    முன்னதாக அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நேற்று பிரதமர், தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×