என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணகி கோவில்"
- தமிழகத்தில் இருந்த பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை கேரளா பறித்துக் கொண்டதைப் போல மேலும் சில பகுதிகளை அபகரிக்கும் முயற்சி என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
- கண்ணகி கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வண்ணாத்தி பாறை என்ற பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் 4,830 அடி உயரத்தில் இந்த கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்ல கேரள வனப்பாதை பகுதியே உள்ளது. வருடம்தோறும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் கேரள அரசு இந்த கோவிலுக்கு செல்ல தமிழர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. மற்ற நாட்களில் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
ஏனெனில் இப்பகுதியை கேரள அரசும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கோவிலில் எந்தவித பணிகளும் செய்ய முடியாமலும், பக்தர்கள் செல்ல பாதை வசதி கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 1 மாதமாக கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப்பகுதியில் டிரோன்களை பறக்க விட்டு ஆய்வு செய்து வருகிறது. சில இடங்களில் எல்லை கற்களையும் நட்டு வைத்ததால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்த பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை கேரளா பறித்துக் கொண்டதைப் போல மேலும் சில பகுதிகளை அபகரிக்கும் முயற்சி என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
கண்ணகி கோவிலுக்கு செல்ல பலியன்குடி வழியாக சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் தினந்தோறும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். இதன் மூலம் தமிழர்களின் பெருமை மேலும் உலகுக்கு தெரிய வரும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனிடையே கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு செல்லும் பழியன்குடி மற்றும் நெல்லுக்குடி வனப்பாதைகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பம் காசி விஸ்வநாத பெருமாள் கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது கோவில் அறக்கட்டளை செயலாளர் ராஜ கணேசன், பொருளாளர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இக்கோவிலை விரைந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.