என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜோஷிமத் வீடுகள்"
- புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது.
- கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது.
புதுடெல்லி :
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மோசமாக பாதிக்கப்பட்ட 42 குடும்பத்தினருக்கு தலா ரூ.1½ லட்சம் இடைக்கால நிவாரண உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர், நில சந்தை மதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், ஜோஷிமத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவுக்கு புதைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது.
இதுகுறித்து 'இஸ்ரோ'வின் தேசிய தொலை உணர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது.
ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் இம்மாதம் 8-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நிலம் தாழ்வடைவது தீவிரமடைந்து 12 நாட்களிலேயே 5.4 செ.மீ. அளவுக்கு ஜோஷிமத் புதைந்துள்ளது.
புதைந்த பரப்பளவும் அதிகரித்துள்ளது என்றாலும், அது பெரும்பாலும் ஜோஷிமத் நகரின் மத்திய பகுதியாக உள்ளது.
இவ்வாறு தாழ்ந்த பகுதி, ஒரு வழக்கமான நிலச்சரிவின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. அதன் உச்சிப்பகுதி, ஜோஷிமத்-ஆலி சாலை அருகே 2 ஆயிரத்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தாழ்வடைந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தளமும், நரசிங்கபெருமாள் கோவிலும் முக்கிய இடங்களாக உள்ளன.
இதற்கிடையில் ஜோஷிமத் நகரின் நிலை, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் நடத்தினார். அதில் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஆர்.கே.சிங், பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று விளக்கி கூறினா்.
- ஜோஷிமத் நகரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஓட்டல் கட்டிடங்கள் சரிந்த நிலையில் உள்ளன.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
புதையும் நகரமாக மாறிய ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஓட்டல் கட்டிடங்கள் சரிந்த நிலையில் உள்ளன. இதையடுத்து அப்பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக நகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 2 பெரிய ஓட்டல்களை இடிக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை எனக்கூறி, கட்டிடங்களை இடிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பத்ரிநாத் தாம் மாஸ்டர் திட்டத்தின்படி இழப்பீடு வழங்கக்கோரி ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி தாமி ஜோஷிமத் அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார்.
அப்போது தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்-மந்திரியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் நிவாரணம் வழங்க சமோலி மாவட்ட கலெக்டர் தலைமையில் 19 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர், ஆபத்தான கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியினை அதிகாரிகள் தொடங்கினர்.
முதற்கட்டமாக சரிந்த நிலையில் காணப்பட்ட ஓட்டல் மலாரி விடுதி உள்பட 2 ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு, போலீசார் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
- ரிஷிகேஷ்-கர்ணபிராயங்க் ரெயில்வே சுரங்க பாதை திட்டம் முக்கிய காரணமாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
அந்த நகரம் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. அங்குள்ள 678 வீடுகள் வசிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு மாநில அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 82 குடும்பங்கள் இடமாற்றப் பட்டுள்ளன.
இந்நிலையில், ஜோஷிமத் நகரத்தை போலவே மேலும் 5 இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தெஹ்ரி மாவட்டத்தில் நரேந்திர நகர் தொகுதியில் உள்ள பகுகுணா நகரில் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு ரிஷிகேஷ்-கர்ணபிராயங்க் ரெயில்வே சுரங்க பாதை திட்டம் முக்கிய காரணமாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த திட்டத்தால் அப்பகுதியில் உள்ள அடாலி, குலர், வியாசி, கவுடியாலா மற்றும் மலேத்தா ஆகிய கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஹரிஸ்சிங் கூறுகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் சுரங்கபாதையில் வீடுகள் குலுங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் வீடுகளில் உறங்க முடியாமல் குழந்தைகளுடன் வெளியே வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார்.
இதுகுறித்து முதல்-மந்திரி புஸ்கர்சிங் தாமி அரசிடம் உள்ளூர் நகராட்சி உதவி கேட்டுள்ளது. இந்நகரில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு பிற இடங்களுக்கு வெளியேற தொடங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த நகர மக்களுடன் உரையாடினர். அப்போது தங்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதேபோல ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரெயில் பாதையில் சுரங்கபாதை அமைக்கும் பணி காரணமாக ஸ்ரீநகரில் ஹெடல்மொஹல்லா மற்றும் நர்சரி ரோடு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் பாகேஷ்வரின் கப்கோட் பகுதியில் உள்ள கர்பகத் கிராமத்திலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். அந்த கிராமத்திற்கு மேலே நீர்மின் திட்ட சுரங்கபாதைக்கு மேலே உள்ள மலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பல இடங்களில் நீர்கசிவு ஏற்படுகிறது.
இது அந்த கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சுரங்கபாதையில் இருந்து நீர் கசிவு ஏற்படும் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பள்ளங்கள் உருவாக தொடங்கி இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
உத்தரகாசியில் உள்ள மஸ்தடி மற்றும் பட்வாடி ஆகிய கிராமங்களும் ஆபத்தான இடங்களாக மாறி வருவதாக கூறப்படுகிறது. மஸ்தடி கிராமம் ஏற்கனவே 1991-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்த கிராமம் மாவட்ட தலைநகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இதேபோல ருத்ரபிரயாக் நகரத்தில் உள்ள மரோடா கிராமத்திலும் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஜோஷிமத் சிறிது சிறியதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஜோஷிமத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டுமான பணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர அழகிய கிராமமான ஜோஷிமத் சிறிது சிறியதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளால் வீடுகள், கட்டிடங்கள், மண்ணில் புதைந்து வருகிறது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகரில்3,900 வீடுகள் மற்றும் 400 வணிக வளாக கட்டிடங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான கட்டுமான பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள் தோறும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் ஜோஷிமத் நகரம் புதைவு மண்டலமாக மாறி வருகிறது. இந்த நகரில் 30 சதவீத பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள காந்திநகர், சிங்தார், மனோகர் பாக், சுனில் ஆகிய 4 பகுதிகளில் உள்ள 100 வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சுவர்கள் 2-ஆக பிளந்து உள்ளதால் 678 வீடுகள் பாதுகாப்பு இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இடிந்து விழும் நிலையில் இருந்த வீடுகளில் இருந்து 82 குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றபட்டு 16 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர்.
தற்போது மேலும் 27 குடும்பத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிர்வாகம் சிவப்பு குறியிட்டு உள்ளது.
அங்குள்ள பொதுமக்கள் தற்காலிக முகாம்கள் அல்லது வேறு இடத்தில் வாடகைக்கு எடுத்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு பிரியமனம் இல்லாமல் கனத்த இதயத்துடன் வெளியேறி வருகின்றனர். இதுவரை 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையை சேர்ந்த 8 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகளில் ஆய்வு நடத்தினர். அவர்கள் மோசமான நிலையில் இருக்கும் வீடுகள் குறித்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.
இந்த நிபுணர் குழுவினர் அதிகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் உள்ள வீடுகள் பற்றியும் அதை உடனடியாக இடிக்கும் படியும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
அதன் படி நிபுணர் குழு அதிகாரிகள் முன்னிலையில் மோசமான வீடுகளை இடிக்கும் பணி இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கையினை உத்தரகாண்ட் அரசு மேற்கொண்டு உள்ளது.
இந்த நகரில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என அம்மாநில முதல்-மந்திரி புஸ்கர்சிங் தாமி தெரிவித்து உள்ளார்.
ஜோஷிமத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டுமான பணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்