search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ் 2 பொதுத்தேர்வு"

    • நகர்புற மாணவர்களை விட கிராமபுற மாணவர்கள் தான் அதிகம் பேர் தேர்வை எழுதவில்லை என்பது தெரியவந்தது.
    • மாணவர்களின் பள்ளி கல்வியில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கம் குறித்து இதுவரை சரியான ஆய்வு முடிவுகள் இல்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வில் 3 அல்லது 4 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொது தேர்வில் ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இதில் மொழித்தாள் தேர்வை 49 ஆயிரத்து 559 பேர் எழுதவில்லை.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வை எழுதவில்லை. இந்த ஆண்டு இது 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நகர்புற மாணவர்களை விட கிராமபுற மாணவர்கள் தான் அதிகம் பேர் தேர்வை எழுதவில்லை என்பது தெரியவந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தேர்வு பயம், உடல்நிலை சரிஇல்லாதது , வைரஸ் காய்ச்சல் பரவல் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது.

    சில மாவட்டங்களில் பெற்றோருடன் சேர்ந்து மாணவ- மாணவிகள் வேலைக்கு சென்று விடுவதால் அவர்களால் தேர்வுக்கு வர முடியாத நிலை உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அரசு பள்ளியில் எவ்வளவு பேர், தனியார் பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணையில் தேர்வு எழுதாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் பெயிலானவர்கள் என்பது தெரியவந்தள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த பிளஸ்- 1 தேர்வில் 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ்-1 துணைத்தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ் -2 தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்ற பயத்தில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர்கள் பெயர்கள் பள்ளி பதிவேட்டில் இருந்து நீக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. அந்த மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரனோ காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டது. சென்ற ஆண்டு பாதி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முழு அளவிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தப்படுவதால் எங்கே நாம் தேர்ச்சி பெற முடியாமல் போய் விடுவோமோ என்ற பயத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராததால் மாணவர்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற ஆண்டு 12- ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாததற்கான காரணங்களை அறிய மாநில அரசு விரிவான ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கே.தேவராஜன் கூறும்போது, மாணவர்களின் பள்ளி கல்வியில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கம் குறித்து இதுவரை சரியான ஆய்வு முடிவுகள் இல்லை. அத்தகைய ஆய்வு அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்றார்.

    மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவது ஏன்? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும், கல்வி துறை இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் விரிவான முறையில் கலந்து ஆலோசித்து மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை வேண்டும் என முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் தெரிவித்து உள்ளார்.

    • வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.
    • இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு ‘லிஸ்ட்’ அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்விலும் வழக்கமாக 3 முதல் 4 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆவது வழக்கம்.

    ஆனால் நேற்று முன் தினம் தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுத வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி படிப்பின் இறுதி கட்டமான பிளஸ்-2 பொது தேர்வை அதுவும், தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் பரீட்சை எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல் வருமாறு:

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது பிளஸ்-2 படித்து வந்தனர்.

    மீதம் உள்ள மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் பிளஸ்-2 வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்று பயந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டனர். ஆனால் இவர்கள் பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து படிப்பது போல் கணக்கு காட்டி மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் காண்பித்துள்ளனர்.

    இந்த மாணவர்களை இடைநிற்றலாக கணக்கு காட்டினால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழும்.

    இதை மறைக்கவே இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு 'லிஸ்ட்' அனுப்பி உள்ளனர்.

    அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் 'ஹால் டிக்கெட்' பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் வகுப்புக்கே வரவில்லை என்பதை மறைத்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தேர்வுக்கு வரவில்லை என்று கூறி 'ஆப்சென்ட்' பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் காரணம் தெரியவந்துள்ளது.

    மேலும் சில மாணவர்கள் தேர்வு பயம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    குறிப்பாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்த பல மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் பள்ளிகளில் பங்கேற்கவில்லை. பள்ளிக்கே சரியாக வராத இவர்கள் பரீட்சைக்கும் வரவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை என்கிறார்கள் அதிகாரிகள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழலில் 'ஆல் பாஸ்' நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    கொரோனா சரியான நிலையில் கடந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களோடு தேர்வு நடத்தப்படவில்லை. பாதி படத்திட்டத்தோடுதான் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத் தேர்வை சந்தித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. முழு பாடத் திட்டத்தோடு தேர்வு நடைபெறுவதால் பல மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    ஒட்டு மொத்தத்தில் கொரோனா தாக்கம் மாணவர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கிறது. அவர்களை மனதளவில் தயார் செய்திருக்க வேண்டும். பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதுபற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்தபட்சம் இவ்வளவு என்று இருக்க வேண்டும். பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு டி.சி. கொடுக்க வேண்டும்.

    ஆனால் எதுவும் செய்வதில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கே வராத மாணவர்களையும் படிப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இது தவறு. அரசு பள்ளியின் பாலிசியை மாற்ற வேண்டும், என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டதற்கு மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரிய படுத்தப்படும் என்றும் கூறினார்.

    • இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
    • அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தல்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

    தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் போது ஆப்சென்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான் இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரக்கூடிய தேர்வுகளில் இதே அளவு ஆப்சென்ட் இருக்குமா? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகளுடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

    ×