search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுஷ்மான் பாரத் திட்டம்"

    • நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?

    முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.

    இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

    கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.

    வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×