search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபசு விழா"

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன. ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

    அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

    எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான். 

    ×