search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசி விஸ்வநாதர். கோவில்"

    • திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
    • பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார்.

    இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார். இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துணித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார்.

    சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.

    திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. .

    அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார். காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன. ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.

    பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும்? சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள்தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது. இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம்.

    மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன. புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர். விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டுசிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன் ஓடும்போது அவன்எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.

    பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரையேறினான்.

    இரண்டாவது அதிசயம்! இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணி கர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர். நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர்.

    நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவேதான் காசிக்கு விடும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர். கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.

    இவ்வரலாற்றினால் நாம் கங்கை நீராடும் முறைக்கு விளக்கம் அறிகின்றோம். மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன், திருவிக்கிரமராக ஓங்கி வளர்ந்து உலகளந்து விட்டு, மற்றொரு காலை தேவலோகம் வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப் பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில் புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.

    சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.

    ×