search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரத பலன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிர்ஜல ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளை பெற்றதாக கூறுவார்கள்.
    • நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.

    ஒரு சமயம் முரன் என்னும் அசுரன், பிரம்மாவை நோக்கி பல்லாயிரம் வருடம் தவம் செய்தான். அந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடம் இருந்து பல அரிய வரங்களைப் பெற்றான்.

    எப்பொழுதுமே பணம், பதவி, அதிகாரம் ஆகியவை சேரும் இடத்தில், பிரச்சினைகளும் வந்துசேரும். பெரும் தவத்தின் பயனாக, தான் பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தினான், முரன். அவன் மூன்று உலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களை துன்புறுத்தினான்.

    காட்டில் உள்ள ஒரு பலம் வாய்ந்த சிங்கத்தைக் கண்டு எளிய விலங்குகள் நடுங்குவது போல், பிரம்மா கொடுத்த வரத்தின் காரணமாக, முரனைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் நடுங்கினர். முரனுக்கு அழிவு பெண்ணால் மட்டும் தான். மற்ற வழியில் அவனுக்கு அழிவு ஏற்படாது என்பது அவன் பெற்றிருந்த வரம்.

    இந்த நிலையில் தேவர்களும், முனிவர்களும் பிரம்மலோகம் சென்றனர். பிரம்மன் வசிக்கும் அந்த உலகத்தை 'சத்திய லோகம்' என்றும் கூறுவார்கள். அங்கு பிரம்மா அமர்ந்திருந்தார்.

    அவரிடம், "சுவாமி.. எங்கள் நிலையை பாருங்கள். முரனை அழிக்கும் வழி என்ன என்று கூறுங்கள்" என்றார். பிரம்மா, "அவனை படைத்தவன் நான். வரமும் நான்தான் கொடுத்தேன். அவனை அழிக்கக்கூடிய ஆற்றலைப் பற்றி நீங்கள் திருக்கயிலாயம் சென்று கேளுங்கள்" என்றார்.

    தேவர்களும், முனிவர்களும் திருக்கயிலாயம் சென்றபோது, அங்கு சிவ பெருமான் யோகத்தில் இருந்தார். யோகத்தில் இருந்த சிவபெருமானை பார்த்து அவர்கள், "இறைவா.. முரன் எங்களை துன்புறுத்துகிறான். இதற்கு நீங்கள்தான் சரியான வழி காட்ட வேண்டும்" என்றனர்.

    அதற்கு சிவபெரு மான், "நீங்கள் வைகுண்டம் செல்லுங்கள். உங்களுக்கு அங்கு நல்ல வழி காத்திருக்கிறது" என்றார். அதன்படி தேவர்களும், முனிவர்களும் வைகுண்டம் சென்று, "நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, எங்களுக்கு வழிகாட்டு" என்று திருமாலை வணங்கி துதித்தனர்.

    அவர் தனது கதாயுதத்துடன் முரனை எதிர்த்து யுத்தம் செய்தார். முரன் ஆயிரம் ஆண்டுகள் கடும் யுத்தம் செய்தான். இனி முரன் அழியக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கருதி, அங்கிருந்த ஒரு குகையில் சென்று பகவான் யோக சயனத்தில் இருந்தார்.

    அந்த யோக சயனத்தின் பொழுது ஒரு பெரிய ஒளி அவர் உடலில் இருந்து தோன்றியது. அதே நேரத்தில் முரனும் அந்த குகையின் உட்புறம் வந்தான். அந்த ஒளி, ஒரு பெண்ணாக மாறி முரனை எரித்தது. இதே நேரத்தில் தேவர்களும், முனிவர்களும் குகையின் அருகே வந்து மகாவிஷ்ணுவை துதி செய்தனர். அந்த பெண்ணே 'ஏகாதசி'. அவள் தோன்றிய தினமே 'ஏகாதசி திதி' என்றும் சொல்கிறார்கள்.

    சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்

    விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்

    லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்

    வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்!

    தேவர்கள் மேற்கண்ட துதியை சொல்லி, திருமாலை வழிபட்டனர். அப்போது அவர், "முரன் அழிந்த இந்த ஏகாதசி அன்று, யார் என்னை வழி படுகிறார்களோ, அவர் களுக்கு சகல செல்வத்தையும் அருள்வேன்" என்றார். ஏகாதசி அன்று நாம், பகவான் நாமத்தைச் சொல்ல வேண்டும்.

    ஏகாதசி அன்று விரதம் இருந்து மறுநாள் காலை துவாதசி அன்று உண்பதை 'பாரணை' என்பார்கள். அன்று உணவில் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்து உண்பார்கள். துவாதசி அன்று பகலில் உறங்கக்கூடாது.

    ஏகாதசி அன்று விரதம் இருக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தீராத நோய் உள்ளவர்கள், சிறு குழந்தைகள், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர், தேன், வேக வைத்த கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். மேலும் இவற்றை கோவிந்தன் நாமத்தை சொல்லி உண்பதால் விரத பங்கம் ஏற்படாது.

    வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளை சேர்த்து, ஆண்டு ஒன்றுக்கு 24 அல்லது 25 ஏகாதசி வரும். இவற்றில் மிக விசேஷமானது வைகுண்ட ஏகாதசி ஆகும். ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்பார்கள். இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.

    ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு, 'நாம் விரதம் எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கிறோமே' என்ற ஏக்கம் உண்டாயிற்று. மற்றவர்கள் ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் பொழுது, தான் மட்டும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு ஏற்பட்டது.

    வேத வியாசரிடம் சென்று "மகரிஷியே.. என் சகோதரர்களும், என் தாயாரும், என் மனைவியும் ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் இருக்கும் விரதத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு எப்பொழுதும் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளதால், என்னால் விரதம் இருக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றான்.

    அதற்கு வேதவியாசர் "பீமா.. உன் மனதில் பகவான் இருக்கிறார். உனது எண்ணம் தெரியும். பொதுவாக 24 ஏகாதசி என்று சொன்னாலும் மொத்தத்தில் 25 ஏகாதசிகள் வரும். இப்பொழுது நான் உனக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

    ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி அன்று, நீ ஜலம் (நீர்) கூட அருந்தாமல் உபவாசம் இரு. அப்படி இருந்தால், உனக்கு இந்த வருடம் முழுவதும் ஏகாதசி உபவாசம் இருந்த பலன் கிடைக்கும்" என்றார். அதனால் ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்றும், 'பீம ஏகாதசி' என்றும் அழைப்பார்கள்.

    இந்த ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளைப் பெற்றதாக கூறுவார்கள். அதனால் ஏகாதசி விரதம் வருடம் முழுவதும் இருக்க முடியாதவர்கள், இந்த ஒரு நாள் ஏகாதசி விரதம் இருந்தால் போதும். வருடம் முழுவதும் இருந்த பலன் கிடைக்கும். நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
    • சைத்ர மாத சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி.

    பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். இந்த உடல் யந்திரத்தை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்னும் 10 இந்திரியங்கள் இயக்குகின்றன. உடல் இயக்கமான கை, கால், உள்ளுறுப்புகள் போன்றவை கர்மேந்திரியங்கள்.

    ஒரு பொருளின் தன்மையை நமக்கு விளக்கும் கண், காது, மூக்கு போன்றவை ஞானேந்திரியங்கள். இவற்றோடு மனம் என்னும் கண்ணுக்குத் தெரியாத இந்திரியம் நம்மை வழிநடத்துகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல 11 என்கிற எண்ணிக்கை அடிப்படையில் அமையும் இந்த திதி ஓய்வுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி என்று பொருள்.

    ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர். பெயர் மட்டுமல்ல ஒவ்வோர் ஏகாதசியும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை. ஏகாதசி புராணம் என்னும் நூல் ஒவ்வோர் ஏகாதசியின் சிறப்பையும் பட்டியலிடுகிறது. அவ்வாறு சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.

    இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.

    முன்னொருகாலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை பரம உத்தமமான மன்னன் புண்டரீகன் ஆண்டுவந்தான். அவன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருப்பார்கள். அவன் அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான்.

    லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். தங்களின் சாபம் எப்போது நீங்கும் என்று தவித்திருந்தவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட லலித், லலிதா ஆகிய இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப் பின்பற்றினர்.

    அந்த நாளில் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்

    காமதா ஏகாதசி சிறப்புகள்

    1. ஏழு ஜன்மப் பாவம் தீரும்

    2. ஆன்மா சுத்தமாகும்

    3. சாபங்கள் தீரும்

    4. மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை

    5. எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்

    6. தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்.

    7. தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்.

    • கந்தசஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
    • தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும்.

    நாம் ஆறுமுகநாவலரின் "விரதம்" என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் "மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்" என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்தசஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது.

    இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மூலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மூலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக் கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதிமையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

    உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

    சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.

    ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச்சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

    விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

    ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

    ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூஜை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

    இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

    விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜை, ஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணை, வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

    விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூஜை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும், தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

    உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

    உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

    ×