என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ குற்ற வழக்குகள்"

    • கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
    • ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.

    இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.

    இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.

    விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.

    பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

    குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.

    இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.

    பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை.
    • பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, 12,170 வழக்குகள் நிலுவை- பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு, அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்கப்படாதது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டு உண்மை தான் என்று நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மொத்தம் 21,672 வழக்குகள் போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு, 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்த நிலையில், அவற்றில் 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

    30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தவிர 12 ஆயிரத்து 170 வழக்குகள், அதாவது 60% வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஓராண்டுக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும் தான். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் 100-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளனவோ, அங்கெல்லாம் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்; 300-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை 20 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளன. இது தேவையான நீதிமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான்.

    தென்காசி மாவட்டத்தில் புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை அங்கு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கான போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்காண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்குத் தான் அக்கறை காட்டுகிறது.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

    அதன்பின் அந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    அவ்வாறு குற்றவாளிகள் தப்பி விடுவதால் தான் குற்றவாளிகள் மத்தியில் அச்சம் குறைந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.

    பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் அக்கறை காட்டும் அழகு இது தானா?

    பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும்.

    அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் தேவையான எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×