search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியபாளையத்தம்மன்"

    • தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் செய்யப்படும் அம்மன் வழிபாடுகள், பிரார்த்தனைகள் மற்ற பகுதி மக்களுக்கு வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.
    • வேப்பிலை ஆடையுடன் பெரியபாளையத்தம்மன் கோவில் பிரகாரத்தில் 3 தடவை சுற்றி வருவார்கள்.

    தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன் கோவில்கள் உள்ளன. இதில் சில கோவில்களே மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன.

    இந்த தலங்களிலும் குறிப்பிட்ட சில தலங்களே சக்தி தலங்களாக உருவெடுத்துள்ளன. இந்த தலங்கள் ஒவ்வொன்றிலும் அம்பிகையின் அவதார வரலாறு ஐதீகமாக பின்னணியில் உள்ளது.

    ஒவ்வொரு அவதாரமும், அவதார நோக்கமும் வேறு, வேறாக உள்ளன. இதன் காரணமாகத்தான் பராசக்தியானவள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான பெயர்களில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.

    பெரும்பாலும் அந்தந்த தலத்தில் அமர்ந்துள்ள அம்பிகையின் வரலாறுக்கு ஏற்ப வழிபாடுகள் இருக்கும். அந்த வழிபாடுகள் எப்படி தோன்றி இருக்கும் என்பதை சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், அம்பிகையே அந்த பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் உருவாக்கிய உண்மை தெரியவரும்.

    சில அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி சென்றால் பிடிக்கும். சில அம்மனுக்கு மொட்டை போட்டு மாவிளக்கு பிரார்த்தனை செய்தால் பிடிக்கும்.

    சில அம்மன்கள் பொங்கலிட்டு வழிபடுவதை விரும்பும். அன்னதானம் செய்பவர்களையும், கூழ்வார்ப்பவர்களையும் அம்மன் காப்பாள் என்பது பொதுவான நம்பிக்கை.

    இப்படி தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் செய்யப்படும் அம்மன் வழிபாடுகள், பிரார்த்தனைகள் மற்ற பகுதி மக்களுக்கு வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

    இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட வழிபாடாக வேப்பஞ்சேலை வழிபாடு உள்ளது.

    இது பிரச்சினைகளை வேரறுக்கும் மகத்துவம் நிறைந்த வழிபாடாகும்.

    அம்மனின் மனதை குளிர வைத்து அவள் அருளை வாரி வாரி வழங்க வைக்கும் வழிபாடாகும்.

    இத்தகைய சிறப்பான ஒரு வழிபாடு பெரியபாளையம் கோவிலில் மட்டுமே காலம், காலமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் வேறு ஒரு எந்த ஆலயத்திலும் அற்புதமான இந்த அபூர்வ வழிபாட்டை பக்தர்கள் காண முடியாது.

    வேப்பஞ்சேலை வழிபாடு என்றால் என்ன? அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரியுமா?

    உடம்பில் எந்த உடையும் அணியாமல், உன் தலத்தை சுற்றி வருகிறேன், தாயே.... என் பிரார்த்தனையை நிறைவேற்று என்று வேண்டிக் கொள்வதே இந்த வழிபாட்டின் அடிப்படையாகும்.

    எந்த ஒரு பிரச்சினைக்காகவும் இந்த வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்ளலாம்.

    அப்படி வேண்டி கொள்ளும் பெண்கள் உடலில் துணிகளை களைந்து விட்டு, அதற்குப் பதில் முழுக்க முழுக்க வேப்ப இலைகளால் உடலை சுற்றி மறைத்துக் கொள்வார்கள். அந்த வேப்பிலை ஆடையுடன் பெரியபாளையத்தம்மன் கோவில் பிரகாரத்தில் 3 தடவை சுற்றி வருவார்கள்.

    இதுதான் வேப்பஞ்சேலை வழிபாடாகும்.

    இந்த வேப்பஞ்சேலை வழிபாடு எப்படி தோன்றியது தெரியுமா? அதிலும் வரலாற்று பின்னணி உள்ளது.

    நீங்கள் பெரியபாளையம் கோவில் வரலாறு, ரேணுகாதேவி அவதார வரலாற்றை படித்து இருப்பீர்கள்.

    பரசுராமரை இழந்து துடித்த ரேணுகாதேவி தீ மூட்டி அதில் குதித்ததையும், வருண பகவான் மழை பொய்வித்து அவளை காப்பாற்றியதையும் படித்து இருப்பீர்கள்.

    தீயில் குதித்ததால் உடைகளை இழந்து காயம் அடைந்த ரேணுகாதேவி வேப்ப மரத்தின் இலைகளை கயிற்றில் கட்டி, ஆடையாக்கி அணிந்து கொண்டாள். அதை பிரதிபலிக்கும் வகையில்தான் வேப்பஞ்சேலை வழிபாடு தோன்றியது.

    உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல், வேப்ப இலை ஆடை உடுத்தி, தன்னைச் சுற்றி வரும் பெண்களை காணும் போது, பெரியளையத்தம்மனின் மனம் பனிக்கட்டிப் போல உருகும். தன் பக்தை ஒருத்தி அதிகபட்ச பக்தியை காட்ட செய்யும் வேப்பிலை ஆடை வழிபாட்டை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.

    அதோடு அந்த பக்தை எதை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்கிறாளோ, அதை எந்தவித தங்கு தடையின்றி நிறைவேற்றி கொடுக்கிறாள். நிறைய பெண்கள், அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அது வெற்றிகரமாக முடிந்ததும் வேப்பஞ்சேலை வழிபாடு செய்வதுண்டு.

    இதுவரை லட்சக்கணக்கான பெண்கள் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்து பலன் பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தெல்லாம் பவானி தாயின் பக்தைகள் வேப்பஞ்சேலை அணிந்து பலன் பெற்று சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியபாளையத்தம்மனே உருவாக்கிய வழிபாடு என்பதால் வேப்பஞ்சேலை பிரார்த்தனைக்கு 100 சதவீத வெற்றி கிடைக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். ஒரு பெண் வேப்பஞ்சேலை அணிந்து, பெரியளையத்தம்மனை சுற்றி வந்து விட்டால், அவள் பிரச்சினைகள் அன்றோடு தீர்ந்து விட்டது என்று அர்த்தம்.

    சில பெண்களுக்கு குடிகார கணவரால் தினமும் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கலாம்.

    சில பெண்களுக்கு மகன் அல்லது மகள்களால் பிரச்சினை ஏற்படலாம்.

    சிலர் வேலை கிடைக்காமல் தவிக்கலாம். சிலர் புத்திர பாக்கியத்துக்காக ஏங்கலாம்.

    சிலருக்கு எல்லா செல்வமும் இருந்தாலும், மன நிம்மதி என்பது கடுகு அளவு கூட இல்லாமல் இருக்கலாம்.

    இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு நாள் வேப்பஞ்சேலை வழிபாட்டில், அந்த பிரச்சினைகள் தூள்... தூளாக பறந்தோடி விடும்.

    இதனால்தான் வேப்பஞ்சேலை அணிந்து பெரியபாளையத்தம்மனை சுற்றி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    முன்பெல்லாம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தான் வேப்பஞ்சேலை வழிபாடு நடந்து வந்தது. பிறகு பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்யத் தொடங்கினார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் எல்லா நாட்களிலும் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்து வருகிறார்கள். இதனால் வேப்பஞ்சேலை பிரார்த்தனையை நிறைவேற்ற நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இப்போதும் நீங்கள் சாதாரண நாட்களில் பெரியபாளையம் கோவிலுக்கு சென்றால், ஏராளமான பெண்கள் வேப்பஞ்சேலை கட்டி கூப்பிய கரங்களுடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவதை காண முடியும். அந்த பெண்களின் முகத்தைப் பார்த்தால், ''தாயே என் பிராத்தனையை உடனே நிறைவேற்றினாய். உனக்கு நன்றி காணிக்கை செலுத்துகிறேன்.... தாயே...'' என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றும்.

    இந்த வழிபாடு பற்றி கேள்விப்படும் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

    வேப்பஞ்சேலை ஆடையை எப்படி தயார் செய்வது?

    வேப்பஞ்சேலை ஆடையை மாற்றிக் கொள்ள கோவிலில் சரியான இடவசதி இருக்குமா?

    வேப்பஞ்சேலையை எப்படி உடுத்துவது?

    இப்படியெல்லாம் சந்தேகங்கள், கேள்விகள் மனதில் எழுவதுண்டு.

    கவலையேப்படாதீர்கள். வேப்பஞ்சேலை ஆடையை பக்தர்கள் யாரும் தயாரிக்க வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை.

    வேப்ப இலைகளை சேகரித்து நாமே கயிற்றில் கட்டி தொகுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.

    நீங்கள் விரும்பினால், உங்களால் முடிந்தால், நிறைய வேப்ப இலை தழைகளை சேகரித்து கயிற்றில் நெருக்கமாக கட்டி வேப்பஞ்சேலை தயாரித்து எடுத்துச் செல்லாம்.

    முடியாவிட்டால், கோவில் சுற்றுப் பகுதியில் விற்பனை செய்யப்படும் வேப்பஞ்சேலைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

    ஒரு வேப்பஞ்சேலையை 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

    துணிகளை மாற்றி விட்டு, வேப்பஞ்சேலையை கட்டுவதற்கு என்றே கோவில் நிர்வாகம் சார்பில் ஏராளமான அறைகள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பான, முழுக்க முழுக்க பெண்களே பயன்படுத்தும் அந்த அறைகளில் பக்தைகள் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளலாம்.

    சில பெண்களுக்கு வேப்பஞ்சேலையை எப்படி கட்டிக் கொள்வது என்ற சந்தேகம் எழலாம். அதற்கு உதவவும் பணியாளர்கள் உள்ளனர். அந்த பணியாளர்கள் கயிற்றால் வேப்பஞ்சேலையை நன்கு கட்டி விடுவார்கள்.

    அதன் பிறகு ஆலயத்தை 3 தடவை சுற்றி வந்து, பெரியபாளையத்தம்மனை வணங்கி விட்டு, மீண்டும் அறைக்கு சென்று வேப்பஞ்சேலையை களைந்து விட்டு, உடை மாற்றலாம்.

    முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே இந்த பிரார்த்தனையை செய்து வந்தனர். சமீப காலமாக சிறுவர், சிறுமியர்களும், ஆண்களும் கூட இந்த வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்கிறார்கள்.

    இந்த பிரார்த்தனை செய்வதற்கு வயது வரம்பு இல்லை. எந்த வயதினரும் செய்யலாம். பயன்பெறலாம்.

    ×