search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி ரெயில்வே"

    • ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 12 மீட்டர் அகலத்துடன் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
    • கிண்டி, பரங்கிமலை, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பழைய நடை மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன.

    சென்னை:

    சென்னையில் ரெயில் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. அப்போது கடற்கரை- தாம்பரம் வழித் தடத்தில் உள்ள ரெயில்வே நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பாக ஒவ்வொரு பிளாட்பாரங்களுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட்டன.

    அந்த காலத்தில் 3 மீட்டர் அகலத்துடன் இந்த நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது பயணிகள் வருகை அதிகரிப்பு ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் ஆகிய காரணங்களால் நூற்றாண்டை கடந்த இந்த நடை மேம்பாலங்கள் போதுமானதாக இல்லை.

    இதனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 12 மீட்டர் அகலத்துடன் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    கிண்டி, பரங்கிமலை, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பழைய நடை மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் தற்போது கிண்டி ரெயில் நிலையத்தில் உள்ள பழைய ரெயில்வே நடை மேம்பாலம் இடிக்கப்பட்டு வருகிறது.

    புதிதாக ரெயில்வே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி ரெயில் நிலையத்தையும், மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு நடை மேம்பாலம் அமைப்பது சவாலான பணியாகவே இருந்தது. இதனால் படிப்படியாக இடித்தனர். முதலில் கீழ் பக்கம் இருந்த டிக்கெட் கவுண்டரை இடித்துவிட்டு மேல் தளத்தில் கட்டி புதிய நடை மேம்பாலத்துடன் இணைத்தனர்.

    பழைய நடை மேம்பாலம் 2 விரைவு ரெயில் பாதைகளையும், புறநகர் மின்சார ரெயில் பாதைகளையும் கடந்து செல்லும்படி அமைந்திருந்தது. இந்த நிலையில் மேற்கு பகுதியில் புறநகர் மின்சார ரெயில் வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டது. அதன் அருகே மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்தது.

    எனவே தற்போது மேற்கு பக்கம் ஜி.எஸ்.டி. சாலையும், கிழக்கு பக்கம் ரேஸ் கோர்ஸ் சாலையையும் இணைத்து புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு சாலைகளுக்கும் செல்ல வேண்டிய பாதசாரிகள் இந்த புதிய நடை மேம்பாலம் வழியாக எளிதில் செல்ல முடியும்.

    அந்த காலகட்டத்தில் கட்டப் பட்ட பழைய நடை மேம்பால தூண்கள் ரெயில்வே பாதையின் அருகில் இருந்தது. இதனால் ரெயில்களில் படிக்கெட்டில் தொங்கியபடி செல்பவர்கள் ஆபத்தில் சிக்கியதும் உண்டு.

    கடந்த 2018-ம் ஆண்டு படிக்கட்டில் அதிகமானோர் தொங்கியபடி சென்றதில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கட்டுமானத்தில் இடிபட்டு விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.

    தற்போது புதிய நடை மேம்பாலம் அகலமாகவும், தேவையான அளவு இடை வெளிகளில் தூண்கள் அமைத்தும் கட்டப்பட்டு இருப்பது பயணிகள் பயணத்துக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் இன்னும் 30 நாட்களில் முழுமையாக அகற்றப்பட்டுவிடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இனி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருந்து புறநகர் ரெயில் நிலையத்தில் இருக்கும் எந்த பிளாட் பாரத்துக்கும் செல்ல முடியும். மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் செல்ல முடியும். பாதசாரிகள் ஜி.எஸ்.டி. சாலைக்கும் சிரமமின்றி செல்லலாம்.

    ×