search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ செலவு"

    • மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
    • மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர்.

    சென்னை:

    70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் பி.எம்.ஜெய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

    2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரியவந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தினால் பரவலாகப் பலர் இதில் பயன் பெற முடியும்.

    தற்போதைய திட்டத்தில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.

    மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப்புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    மூத்த குடிமக்களிலேயே மாற்றுத்திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5,177 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
    • சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.

    செல்போன் பயன்படுத்துவோர் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    அதே சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.

    இதன்மூலம் கஷ்டப்படக்கூடிய நபர்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடிகிறது. அதேபோன்ற ஒரு செயலில் கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார்.

    புற்றுநோய் பாதித்து அவதிப்பட்டு வரும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காகவே அவர் யூடியூப்பில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார்.

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பான் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவிகா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜனின் சொற்ப வருமானத்திலேயே அவரது குடும்பம் இயங்கி வருகிறது. இதனால் தனது மகளுக்கு சைக்கிள் கூட வாங்க வழியில்லாமல் இருந்திருக்கிறார்.

    இதன் காரணமாக சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார். இதனால் சைக்கிள் வாங்குவது சிறுமியின் கனவாக இருந்துள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரேமா. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    அந்த பெண்ணின் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இதனால் அந்த பெண்ணுக்கு சிகிச்சை பெறக்கூட போதிய பணம் இல்லை. இதனையறிந்த சிறுமி தேவிகா, அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக யூடியூப்பில் "தேவுஸ் வேர்ல்ட்" என்ற பெயரில் கணக்கை தொடங்கினார். அதில் தனது கனவு மற்றும் தனது வீட்டின் அருகே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெண் பற்றிய தகவல்களை பதிவிட்டார்.

    மேலும் சிறுமி தேவிகா தனக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைத்த சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணின் சிகிச்சைக்கு வழங்கினார். சிறுமி தேவிகாவின் இந்த செயலை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா அறிந்தார்.

    அவர் சிறுமியை நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் சிறுமியின் செயல்பாடு குறித்து கலெக்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

    அதன்பிறகே சிறுமியின் செயல் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து பலரும் சிறுமிக்கு பண உதவி செய்தனர். மேலும் பலர் சிறுமிக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தனர். மொத்தம் சிறுமிக்கு 12 சைக்கிள்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் விற்றார்.

    நிதியுதவி மற்றும் சைக்கிள்களை விற்று கிடைத்த பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிதியை சிறுமி திரட்டியிருக்கிறார். அவற்றை புற்றுநோயால் பாதித்து அவதிபட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்காக வழங்கியிருக்கிறார்.

    தனது ஆசையைப்பற்றி சிந்திக்காமல், பரிசாக கிடைத்த சைக்கிள்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு வழங்கிய மாணவி தேவிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
    • அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான பண பலன்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இவர்களின் குறைகளைக் கேட்ட கலெக்டர் அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

    ×