என் மலர்
நீங்கள் தேடியது "மாரியம்மன் வழிபாடு"
- மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும்.
- பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது.
மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் ஒவ்வொரு நேர்த்திக்கடனிலும் கடவுளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு உன்னதம் மறைந்துள்ளது. அதன்படி இன்று வரை பக்தர்களால் கடைபிடிக்கப்படும் நேர்த்திக்கடன்கள் வருமாறு:-

மாவிளக்கு போடுதல்
ரேணுகாதேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன் அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் துளிமாவு என்கிற வெல்லம் நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.
மாவிளக்கு செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் வெல்ல சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர் அதன் மத்தியில் குழிவாக செய்து, அக்குழியில் நெய்விட்டு பஞ்ச திரியிட்டு அதன் நான்கு புறமும் சந்தனம் குங்குமமிட்டு, மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர்.
இந்த விளக்குகளை 2,4,6 என்றபடி தயார்செய்து அன்னையின் சந்நதியில் ஓரிடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழையிலை போட்டு தேவியை மனதில் தியானித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி தீபவிளக்குளை ஏற்றுவர்.
பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு நிவேதனப் பொருட்களை வைத்து திருவிளக்குகளுக்கு நிவேதனம் செய்வர். தீபம் மலையேறும் வரை அன்னையின் சந்நதியில் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவர்.
பின்னர் அன்னைக்கு கற்பூர ஆரத்தி செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்வர். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச்சந்நதியில் படுத்துக் கொண்டு தங்களின் வயிற்றுப் பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வதுமுண்டு.
சிலர் மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் சந்நதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர்.
தீபம் மலையேறியதும் மாவிளக்குகளை ஒன்றாகச்சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள்புரிவாள்.

பொங்கலிடுதல்
பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில்களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும்.
திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடுவதும் உண்டு. சில கோயில்களில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1 முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர்.
பொங்கலிடும் போது பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள் சந்தனம் குங்குமமிட்டு வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர்.
பெரும்பாலும் சர்க்கரை பொங்கலே பிதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தாயாரானதும் அதனைப்பெரிய வாழை இலையில் வைத்து அதனுடன் பலவகைப்பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து படையலை நிறைவு செய்வர். பின்னர் அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.

பால்குடம்
பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறோம். நம்முடைய சிரசில் பால் குடத்தை வைத்தவுடன் நம் எண்ணங்கள் நம் கபாலம் வழியாக பால் குடத்தின் உள்ளே செல்லும். பின் அந்த பாலை தெய்வத்திற்கு அபிஷேகம் செய்தால் நம் எண்ணங்கள், வேண்டுதல்கள் பால் மூலம் தெய்வத்தை சென்றடையும்.
இதன் மூலம் தெய்வம் நம் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றுகிறது. பால் குடம் எடுத்து நம் பக்தியை வெளிப்படுத்துவது மிகச் சிறந்த வழிபாடாகும்.

அக்னி சட்டி / பூவோடு
மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும். மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் பரவலாக எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதனையே தீசட்டி எடுத்தல் பூவோடு எடுத்தல் என்றும் அழைப்பர்.
தீச்சட்டி எடுப்பவர் விரதமிருந்து அம்மன் கோயிலிலோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளிலோ ஸ்நானம் செய்து, மஞ்சளாடை உடுத்தி, வேப்பிலையை இடுப்பில் சொருகிக் கொண்டு அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு தயாராக வைத்திருக்கும், தீச்சட்டியை கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு அதற்கு மேல் வைப்பர்.
தீச்சட்டியானது பக்கவாட்டில் மூன்று துளைகளுடன் இருக்கும் அதன் அடியில் மணல் நிரப்பி, அதில் காய்ந்த மரக்குச்சிகளை இட்டு நெய் ஊற்றி கற்பூரம் ஏற்றி தீயை உண்டாக்குவர். பின்னர் அதனை சுற்றி வறட்டியை அடுக்கி தீயை வளர்ப்பர்.
தீச்சட்டி எடுப்பவர் கையில் தீச்சட்டியுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் வீதிவழியாக எல்லோர் வீடுகளுக்கும் செல்வர். அவரை அம்மனாகக் கருதி அவரது பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் காட்டி வழிபடுவர்.
இறுதியில் மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மன் முன் தீச்சட்டியை வைத்துவிட்டு அம்மனை கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர்.
இவ்வாறு தீச்சட்டி எடுப்பது விழா காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அம்மனுக்கு நேர்ந்துகொண்டு செய்வதுண்டு. பக்தனுக்கு நெருப்பு, அனலாகத் தெரிவதில்லை. பூவாக குளிர்கிறது. அதனாலேயே இதனை பூவோடு எடுத்தல் என்று கூறுகிறார்கள்.
இப்படி பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது. விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உபத்திரவங்கள் நீங்குகின்றன.
- தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று.
- மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மாரியம்மன் வெவ்வேறு பெயர்களில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அருளாசி செய்து வருகிறார். பெயர் வெவ்வேறாக இருந்தாலும், அம்மா என்று அம்மனை வேண்டி அழைத்தால் தன்னுடைய குழந்தைக்கு தேவையான சேவையை செய்வதற்கு ஓடோடி வருபவராக விளங்குகிறார்.
அது போலத்தான் மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட் டில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்துக்குட்பட்டது வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாநகரை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தார். அப்போது, மதுரையின் கிழக்கே தற்போது கோவில் அமைந்துள்ள பகுதி மகிழம் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
அதனை திருத்தி, அருகே வைகை ஆற்றில் கிடைத்த அம்மனை தெற்கு கரையில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக அறியப்படுகிறது.
மாரியம்மன், துர்கையும் என வெவ்வேறு வடிவமாக இருந்தபோதும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும் வகையில், மாரியம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கி வைத்திருக்கிறார். துர்கை அம்மனின் இடது காலுக்கு கீழே எருமைத்தலை உள்ளது.
மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள் போருக்கு செல்லும் முன் வீர தீரத்துடன் செயல்படவும், போரில் வெற்றி பெறவும், அம்மனை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பிற்காலங்களில் இந்த அம்மனே மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாகவும், தெப்பக்குளம் மாரியம்மன் ஆகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மதுரை மன்னராக திருமலை நாயக்கர் இருந்த போது, தற்போது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனையை கட்டுவதற்கான மணல் இங்கிருந்து தோண்டப்பட்டது. அப்படி மணலை தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை, சதுர வடிவ தெப்பக்குளமாக மாற்றினார்.
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் மரங்களுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது.

தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு சுரங்கக் குழாய்கள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த தெப்பம் தோண்டும்போது கிடைத்த விநாயகர் சிலையே மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகராக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தைப்பூசத் தன்று மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இத்தெப்பத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மதுரைக்கு வருவார்கள்.
இங்கு அம்மனே பிரதானம் என்பதால், வேறு பரிவாரத் தெய்வங்கள் இல்லை. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் உள்ளனர்.
அம்மைநோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீராத நாள்பட்ட நோய்கள், குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் தீர பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் செய்து நேர்த்தி செய்கின்றனர். வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் அம்மனுக்கு அக்னிச்சட்டி, பால் குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை நிறை வேற்றுகின்றனர்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகினால் சகல நோய்களும் நீங்கும் என்பதால், பக்தர்கள் தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பக்தர்கள் எலுமிச்சை தீபமேற்றியும் வழிபடுகின்றனர். உள்ளம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்களின் சங்கடங்களை தீர்த்தருளும் மகாசக்தியாக விளங்குகிறார் தெப்பக்குளம் மாரியம்மன்.
- மாரியம்மன் கோவிலில் காணப்படும் புற்றுகளுக்கு புற்று மாரியம்மன் என்று பெயர்.
- ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும்.
மாரியம்மன் வழிபாட்டுடன் நாக வழிபாடு தொடர்பு உடையதாக திகழ்கிறது. பொதுவாக மாரியம்மன் கோவில்களில் புற்று காணப்படும். மாரியம்மனே பாம்பாக வந்து அருள் புரிவதாக மக்கள் நம்புகின்றனர். மாரியம்மன் புற்றில் உறைவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்குக் குடையாக இருப்பது பாம்பு தான். மாரியம்மன் கோவிலில் காணப்படும் புற்றுகளுக்கு புற்று மாரியம்மன் என்று பெயர். இக்கோவில்களில் புற்றுகளுக்கு தனியாக பூஜைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.
மாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தையும், புற்றையும் இணைக்கும் ரகசிய வழி ஒன்று இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சென்னை அடுத்த பெரியபாளையம் கோவிலில் கருவறைக்கும் புற்றுக்கும் இடையே அடிக்கடி நாகம் சென்று வருவதை இன்றும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.
புற்றின் துவாரத்தின் வழியாகப் படமெடுத்து ஆடும் பாம்பை தரிசிப்பது நல்ல சகுனமாக கருதுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியாக நாகபஞ்சமி என்றும், ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தியான நாக சதுர்த்தி அன்றும், பெண்கள் புற்று வழிபாடு செய்கின்றனர்.
புற்றுக்கு பால் விடுதல், பொங்கல் வைத்தல், மூட்டை முதலியவற்றை புற்றுக்குள் இடுதல் ஆகியவை புற்று வழிபாட்டில் முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.
மாரியம்மன் வழிபாடு, சக்தி வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ளது. நாக வழிபாடும் சக்தி வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ளது. சக்தியின் ஒரு வடிவமாகப் பாம்பு கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வங்கள் பலவற்றிற்கும் குடையாக வீற்றிருப்பது பாம்பு தான்.