search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிநவீன கேமராக்கள்"

    • முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுவோர் அடிக்கடி கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு கேமராக்களே பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிர்பயா பாதுகாப்பு மற்றும் சென்னை மாநகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார். சென்னை மாநகர் முழுவதும் 1750 முக்கிய இடங்களில் 5250 கேமராக்களை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் மூலமாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பது கட்டுப்பாட்டு அறையின் சிறப்பம்சமாகும்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக புதிய தொழில் நுட்பத்தின்படி கேமராக்கள் கண்காணிக்கப்படுவதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள் குற்ற செயல்களை பகுப்பாய்வு செய்து எச்சரிக்கை தகவல்களையும் உடனுக்குடன் அளிப்பதால் போலீசார் விரைந்து செயல்பட முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

    செயின் பறிப்பு, பெண்களை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், கடத்தல் சம்பவங்கள், பொருட்களை சூறையாடுதல், வாகன திருட்டு உள்ளிட்ட அனைத்து குற்றசெயல்களில் ஈடுபடுவோரையும் கண்டுபிடிப்பதற்கு வசதியாக கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேமராவில் பதிவாகும் அவசர காட்சிகளை கூட செயற்கை தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன் ஆய்வு செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பம்சமாகும்.

    இப்படி கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்து தேவைப்படும்போது பார்ப்பதற்கும் வசதி உள்ளது. அதே நேரத்தில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த காட்சிகளை சென்னை மாநகரில் உள்ள 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் தங்களது அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்படி பெண்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு திட்டத்தால் போலீசார் தங்களது பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×