search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி ராஜா"

    • வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது.
    • ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜனதா கடந்த 2-ந்தேதி 195 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது.

    அதன்படி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வி அடைந்தார். தற்போது வயநாட்டில் அவர் மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்று இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாட்டின் அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் மதசார்பின்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காகவும், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதற்காகவும் பா.ஜனதாவை எதிர்த்து போராடி வீழ்த்துவதே இந்தியா கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.

    ஆனால் எல்லா மாநிலங்களிலும் இதே நிலை இல்லை. கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. பா.ஜனதா எந்த ஆதாயமும் பெற அனுமதிக்க முடியாது. கடந்த முறையும் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்டது.

    வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. காங்கிரஸ் முடிவு எடுக்கலாம். ஆனால் ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு டி.ராஜா கூறி உள்ளார்.

    • மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும், வெளிப்படையாக பேசியதும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகள்.
    • நாங்கள் எல்லாம் தனித்தனி கட்சிகள். சில பிரச்சினைகளில் சிறிய மனமாச்சர்யங்கள் இருக்கலாம்.

    பாட்னா:

    கடந்த 23-ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

    காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், வருங்காலத்தில் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்றும் அறிவித்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்தார்.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, டெல்லியில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாட்னாவில் நடந்த கூட்டம் மூலம் மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதையும், பா.ஜனதாவை தோற்கடிக்க உறுதி பூண்டிருப்பதையும் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் கூட்டாக முடிவு எடுக்க முடியும் என்று காண்பித்துள்ளோம்.

    அக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும், வெளிப்படையாக பேசியதும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகள்.

    கூட்டத்துக்கு பிறகு ஆம் ஆத்மி எடுத்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. சொல்லப்போனால், அது நேர்மறையான அறிகுறி. அப்படித்தான் பார்க்க வேண்டும்.

    நாங்கள் எல்லாம் தனித்தனி கட்சிகள். சில பிரச்சினைகளில் சிறிய மனமாச்சர்யங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை கடப்போம். ஒன்றாக சேர சம்மதித்துள்ளோம். ஏனென்றால், நாடு சவாலான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது, அரசியல் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும் என்று நம்புகிறோம். அந்த அணியில் இருப்பது பற்றி ஆம் ஆத்மிதான் முடிவு செய்ய வேண்டும்.

    பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஒரு பிரச்சினை இல்லை. 1990-களில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை எப்படி தேர்வு செய்தோமோ, அதுபோல் தேர்வு செய்வோம்.

    தொகுதி பங்கீடு, வியூகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் விவாதிப்போம்.

    கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பா.ஜனதா விரக்தியில் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அக்கட்சிக்கு தெரிந்து விட்டது. எனவேதான், எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஜய் மக்கான், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஆம் ஆத்மியை விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரகடனங்கள், இணக்கத்துக்கான வார்த்தைகளாக தெரியவில்லை. ஒற்றுமையை சீர்குலைத்து, பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் திட்டமிட்ட அணுகுமுறையாக தோன்றுகிறது.

    ஊழல் வழக்குகளில் சிறை செல்வதை தவிர்க்கவே அவர் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். கோவா உள்பட பல மாநிலங்களில் ஊழல் பணத்தில்தான் ஆம் ஆத்மி போட்டியிட்டது. காங்கிரசின் வெற்றிவாய்ப்பை குறைத்து, பா.ஜனதாவுக்கு உதவி செய்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×