search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதம் 1000 ரூபாய்"

    • பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
    • இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன. குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக் கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியோர்கள் பலர் இதில் பயன் அடைய உள்ளனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் கிடைக்கும் வகையில் அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் குடும்ப தலைவி யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளை தேர்வு செய்வது, அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

    வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.

    அதனை அடிப்படையாக வைத்து குடும்ப தலைவிகள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் ரூ.1000 பணம் அவரவர் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

    இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறுகையில், 'மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு யார்-யார் தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வருமானத்தை கணக்கிடுவது முக்கியம் என்பதால் அதை அடிப்படையாக வைத்தும், ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்தும் பணம் வழங்கப்படும்.

    எனவே அந்த விதிமுறைகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதை படித்து பார்த்து ஒவ்வொரு குடும்ப தலைவிகளும் ரூ.1000 பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அந்த மனுக்களை பரிசீலனை செய்து அரசு பணம் ஒதுக்கும். அவை வங்கி கணக்கு மூலம் குடும்ப தலைவிகளுக்கு சென்றடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×