search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாழ்வார்"

    • குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார்.
    • சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

    அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகக்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

    இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல; சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.

    சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.

    பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.

    பெரியாழ்வார் அதிர்ச்சி

    ஒரு நாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டு கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கி கொண்டது. ஆண்டாள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் கவனித்துவிட்டார்.

    உடனே, அந்த மாலையை பெருமாளுக்கு சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் அவரது கனவில் தோன்றி, முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை தான். அவள் சூடி களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு சாற்ற வேண்டும் என்று அருளினார்.

    இதனாலேயே ஆண்டாளுக்கு சூடி கொடுத்த சுடர்கொடியாள் என சிறப்பு பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு சாற்றப்பட்டு வருகிறது.

    ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்றுபொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.

    திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்து, தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதிகொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். அதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்றபோதிலும், 108 எம்பெருமான்களில் யாரை திருமணம் செய்ய விரும்புகிறாய்? என்று கேட்டார். அப்போது ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்து கூறினார். கடைசியில் ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்கு பிடித்து இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள்.

    ஆண்டாள் விருப்பப்படி அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்து சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார்.

    பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய் போனதை கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்து கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாளை ரங்கமன்னராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ×