search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீத்தார் கடன்"

    • குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
    • ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

    பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில், நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு, வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

    அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டு திகழ்கிறது. அந்தத் தேரில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்தத் தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் பதினைந்து நாட்களில், சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கிறார்கள். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் "அமை' என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் "அமாவாசை' என வழங்கப்படுகிறது.

    பித்ருக்களான முன்னோர்களில் சௌமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்று மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும்போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

    ஒருசமயம் கௌசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள்.

    ஆனால் கௌசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார்.

    பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் "திருப்பூந்துருத்தி' என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார்.

    கௌசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன், ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார். முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கௌசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

    ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

    ஆடி அமாவாசையன்று நீர்க்கடனைச் செலுத்துவதற்கு சில புகழ்பெற்ற தலங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடற்கரை அக்னி தீர்த்தம் மிகவும் சிறப்பானதாகும். இங்கு சங்கல்பம் செய்துகொண்டு கடலில் நீராடி, அங்குள்ள வேதவிற்பன்னர் உதவியுடன் திலதர்ப்பணம் செய்தால் பெரும் புண்ணியம் கிட்டும் என்பர். மேலும் முக்கடல் கூடும் கன்னியாகுமரி, திருப்புல்லானி, வேதாரண்யம், கோடியக்கரை தனுஷ்கோடி, கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரையான சில்வர் பீச் போன்றவையும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.

    இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறை, விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாற்றங்கரை, நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரை ஆகியவை புகழ்பெற்றவையாகும்.

    குளக்கரையில் பிதுர் பூஜை செய்வதும் போற்றப்படுகிறது. கும்பகோணம் மகாமகத் தீர்த்தக் குளக்கரையில் பிதுர்பூஜை செய்வதைக் காணலாம். அதேபோல் கும்பகோணம் சக்கரப் படித்துறையும் சிறப்பானது. திருவெண்காடு சிவன் கோவிலில் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் நீராடி அருகிலுள்ள அரசமரத்தடியில் அமைந்துள்ள ருத்ரபாதம் பகுதியில் திதி தர்ப்பணங்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

    மயிலாடுதுறை செல்லும் வழியில் பூந்தோட்டம் அருகேயுள்ள செதலபதி திருத்தலமும், திருக்கடையூர் திருத்தலமும், திருச்சி சமயபுரம் கோவிலும், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலும் பிதுர்பூஜைக்கு ஏற்ற தலங்களாகத் திகழ்கின்றன.

    மேற்சொன்ன தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலுள்ள திருத்தலத்திற்குச் சென்று பிதுர்பூஜையை முறைப்படி செய்து, ஏழை, எளியவர்களுக்கு முடிந்த அளவு அன்னதானம் செய்தால், முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    ×