search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவர்லட் கார்"

    • காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது.
    • தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

    3 முறை தமிழக முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராஜர்.

    காமராஜரின் இறப்புக்கு பின்பு அவரது எளிமையான வாழ்க்கையை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் நிறுவப்பட்டது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், அவர் பயன்படுத்திய 'செவர்லட்' கார்.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் காரை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவர் பயன்படுத்துவதற்காக டி.வி.எஸ். கம்பெனி நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இலவசமாக வழங்கினார். இந்த காரை தான் காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை பயன்படுத்தி வந்தார். காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.

    கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து எடுத்துவரப்பட்ட அந்த கார் கிருஷ்ணகிரியில் உள்ள பழுது பார்க்கும் ஆலையில் வைத்து புனரமைக்கப்பட்டது.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் கார் 1952 ஆம் ஆண்டு மாடல் கொண்டதாகும். காரின் கதவுகள், இருக்கைகள், என்ஜின் போன்றவை ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு துருப்பிடித்த பாகங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. காரின் கதவுகளுக்கு இடையே வரும் சில்வர் கிரில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்டர் செய்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஓடாமல் இருந்த கார் என்ஜின் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    தற்போது புதுப்பொலிவுடன் காமராஜர் பயன்படுத்திய கார் அவரை போலவே கம்பீரமாக தோற்றமளிக்கிறது. தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் வலம் வந்த செவர்லட் கார் கிருஷ்ணகிரியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    ×