என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மிககளஞ்சியம்"
- ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
- சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழாம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் ஒன்பதாம் நாள் இரவில் `கிண்ணித் தேர்' என்னும் அற்புத ஸ்ரீசக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வந்தது' என்று ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தமது `சென்னை நகர வரலாறு' என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அற்புதக் கிண்ணித் தேர் காலத்தால் பழுதுபட்டு விட்டதால், சுமார் 22 அடி உயரத்தில் புதிதாக ஒரு நூதனக் கிண்ணித் தேர் செய்து முடிக்கப்பட்டு 24.5.1987 அன்று கரிக்கோலம் வெள்ளோட்ட விழாவும், பிரம்மோற்சவம் 7-ம் நாள் 7.6.1987 அன்று காலை பூந்தேராகவும், 9-ம் நாள் 9.6.1987 அன்று இரவு கிண்ணித் தேராகவும் ஸ்ரீஅம்பாள் கொலுவீற்று திருவீதி உலா வருவதைப் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதைப் பக்தர்கள் வந்து நேரில் பார்த்தால்தான், அதன் மகிமையை உணர முடியும்.
இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதி சண்முகாச்சாரியாரால் மதிப்பீடு வரைப்படங்கள் அமைக்கப்பட்டு, பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி, பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீரிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிண்ணித் தேர் விழாவினை முதல் கவர்னர் பிட் நிறுத்தினார். சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21.9.1790-ல் பக்தர்களோடு தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பரவசப்பட்டார்.
ஸ்ரீசக்ரத் திருத்தேர்
தேர் திருவிழாவில் ஓர் சமுதாய தத்துவம் அடங்கியுள்ளது. தேரை இழுக்க ஒருவரால் முடியாது. எனவே, பலருடைய ஒத்துழைப்பும் முழுமையாக தேவை. சும்மா கையை வைத்து இருந்தால் தேர் நகராது.
பலரும் முழுமையாக செயல்பட்டாலும் பலரும் பலதிசையில் இழுத்தாலும் தேர் நகராது ஒரு முகப்பட்டு ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆக அப்படி இழுத்தாலும் ஒரு நொடிப் போழுதில் நிலையை அடைவதில்லை. காலம் தேவைப்படுகின்றது.
அதுபோலவே, சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா கொண்டாடினர்.
சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீசக்ரத்தேர் மிகவும் அழகும் சக்தியும் வாய்ந்த திருத்தேராக காட்சி அளிக்கின்றது.
பிரம்மோற்சவத்தில் இரவில் ஒலிக்கும் வெண்கல ஓசை `ஓம் ஓம்' என்ற பிரணவ ஓசையை நம் செவியில் இனிய இசையாக ஒலிக்கும் என்பதை நேரில் கண்டவர் கூறுவர்.
தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், யட்சர்களும் கின்னரர்களும், கந்தருவர்களும் வசிப்பார்கள். உருத்திர கணிகைகளும், ரிஷிகளும் வசிப்பார்கள்.
இவர்களின் சிற்பகங்கள் தேரின் அடிப்பாகத்தினைச் சுற்றிலும் இருக்கும். மேலும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் இவர்கள் அதிதேவதைகளாக இருப்பர்.
தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம்.
`விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்'
உச்சியிலிருக்கும் கலசம் சோடசாந்தம். அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம். அதற்கு அடுத்த கீழ் அடுக்கு மத்தகஸ்தானம். அடுத்த அடுக்கு புருவ மத்தியஸ்தானம். நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் முன் மூன்று துளைகள் மூன்று கண்கள் பின்புறம் உள்ளது. சிகையும் இட, வலக்காதுகளும் ஆகும்.
இறைவன் எழுந்தருளும் கேடய பீடம் முகம். குதிரைகள், சூரிய, சந்திர கலைகள் சாரதி அக்னி கனல் இவை நாசி (மூக்கு) ஆகும். அடுத்த கீழ் அடுக்கு கண்ட ஸ்தானம். அதை அடுத்த கீழ் அடுக்கு இருதய ஸ்தானம். அதற்கடுத்த நாபிஸ்தானம். அதை அடுத்து குண்டலி ஸ்தானம்.
சக்கரங்கள் தசவாயுக்கள்.
இறைவி இதற்கு கர்த்தா `தான் ஒருத்தியே' என்று உணர்த்தி இவ்வாறு அமைந்த பிண்ட தத்வ சரீரமாகிய ரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனதை உந்தி குண்டலினியில் இருந்து நாபிக்கும், நாபியில் இருந்து கண்டத்திற்கும் அதில் இருந்து வாயிக்கும் முறையே ரத குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்கள் வழியாகவும் நடுவழியாகவும் மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவத்திற்கும் ஏற்றி வயப்பட்டு சும்மாயிருந்தபடி இருக்கும் நித்ய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது.
மேலும் தேரானது திரிபுராதிகளை சிவன் சிரித்து எரித்து ஆன்மகோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கு அறிகுறியாக உள்ளது. இவ்வளவு தத்துவமுள்ள தேரில் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் வருவதை தரிசிப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் கோடி புண்ணியங்களும் உண்டு.
- ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் இளமையிலேயே ஞானம் கைவரப் பெற்று பஞ்சகர்மாக்களை உபதேசம் செய்தார்.
- மாதா-பிதா மனம் நோகாது அவர்கள் வாழும் வரை பேணி பாதுகாத்து அவர்களுக்கும் இவ்வையகத்திற்கும் புகழ் சேர்ப்பது.
கி.பி. 1604-ம் ஆண்டு விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு பின் ஆந்திரப் பிரதேசத்தில் பிரம்மஸ்ரீ பரிபூரணாச்சாரியாரின் பிரக்குராம்பா தம்பதியர்கள் செய்த தவப்பயனால் ஈன்றெடுத்த தவப் புதல்வர் ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்.
கர்நாடக மாநிலத்தில் நந்தி கொண்டா என்ற கிராமத்தில் ஸ்ரீவீரபோஜாச்சாரியார் வீரபாப்பம்மாள் தம்பதியரால் வளர்க்கப்பட்டவர் `ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவர்' இளமையிலேயே ஞானம் கைவரப் பெற்று பஞ்சகர்மாக்களை உபதேசம் செய்தார்.
மாதா-பிதா மனம் நோகாது அவர்கள் வாழும் வரை பேணி பாதுகாத்து அவர்களுக்கும் இவ்வையகத்திற்கும் புகழ் சேர்ப்பது.
இறை வழிபாடு- தெய்வ சிந்தனையின் காரணத்தால் பாப காரியங்களினின்றும் விடுபட்டு அன்பும் அறமும் அருளோடு பெற்று வாழ்வது.
பிற உயிர்களை கொல்லாமல் (ஜீவ ஹிம்சை) கொல்லாமையை கடைப்பிடிப்பது.
பித்ரு கடன் இறைவனடி சேர்ந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபடல்.
பசித்தவர்களுக்கு பசி நீக்குதல் அன்னம் பாலிப்பு.
இவை ஐந்தும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்று எடுத்துக்கூறினார்.
சென்னை வருகை
1629-ம் ஆண்டில் சென்னை மாநகரம் வந்தார். சென்னை மாநகரில் சூளை அவதான பாப்பையர் வீதியில் தங்கிருந்த வீரசுப்பையா சுவாமிகள் தன் தத்துவ யோக விளக்கத்தால் மக்களை கவர்ந்தார். கந்தசாமி பிள்ளை, சிவப்பிரகாசம் பிள்ளை இருவரும் சுவாமிகளிடம் அருட்தீட்சைப் பெற்று வீர கந்தையா என்றும் வீர சுப்பையா என்றும் குருவின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டனர்.
சூளை பகுதியில் ஒரு மடம் வீர சுப்பையா மடமும், வியாசர்பாடியில் வீரகரப்பாத்திர வீரய்யா சுவாமிகளும் சமாதி அடைந்துள்ளனர். இன்றும் அம்மடங்கள் உள்ளன.
ஸ்ரீவிராட் போத்தலூரி வீரப்பிரம்மேந்திரர் சுவாமிகள் அருளிய காலக்ஞான நூல் உலகம் வாழ வழிகாட்டியாக உள்ளது. ஜீவன் முக்தராக இன்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
- கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கொல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின.
- சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாக காண்கிறோம்.
கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின. மும்பாதேவியின் பெயரால் மும்பையும், காளியின் பெயரால் கல்கத்தாவும், சென்னம்மன் பெயரால் சென்னப்பட்டினமும் விளங்குகின்றன.
கி.பி. 17-ம் நூற்றாண்டில் வழங்கிய `மராட்டா டவுன்' என்பதே இன்றுள்ள முத்தியால்பேட்டையும், பவழக் காரத் தெருவுமாகும். சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாகத் காண்கிறோம்.
கி.பி. 1639-ல் ஆங்கிலேயர் விலைக்கு வாங்கிய சென்னக் குப்பம், வடவாறு குப்பம், மதராஸ் குப்பம். இவைகளையடுத்த நெய்தல் நிலங்கள் யாவும் யாருமற்ற காடுகளாக இருந்தன. இக்காட்டினுள் சிறு புதர்களை அழித்துக் குறும்பர்கள் பூந்தமல்லி வரையில் களிமண் கோட்டைகள் கட்டி வசித்தனர்.
இந்நிலப்பகுதியை நோ மேன்ஸ் லேண்ட் என ஆங்கிலேயர் தம் குறிப்பில் கூறியுள்ளனர்.
கடற்கரைக் குப்பங்களில் பட்டினவர் வசித்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய- கட்டு மரங்களையும், துடுப்புகளையும், படகுகளையும், பாய்மரங்களையும், நங்கூரங்களையும் செய்து தர 5 தொழிலாளர்கள் சென்னம்மன் கோவில் மாட வீதிகளில் வாழ்ந்தனர்.
5 தொழிலாளர்களை `பஞ்ச புத்திரர்' என்றும் `விசுவகருமர்' என்றும் கூறினர். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தம் குல தெய்வமாக விசுவ கருமர்கள் தாமே பூசித்துப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள்.
`சென்ன' - என்னும் சொல்லிற்கு - முருகு, அழகு, இளமை, வலிமை, கம்பீரம் எனப் பல பொருள் உண்டு.
கடவுள் பெயரையே குழந்தைகளுக்கு இடும் வழக்கம் அன்றும் இன்றும் என்றும் உள்ளது. சென்னப்ப நாய்க் கனுக்கும் அவனது தங்கை சென்னம்மாவுக்கும் பெயரிடக் காரணமாயிருந்தவள் சென்னைக் குப்பத்தின் காளியம்மனே.
இக்காளியம்மனுக்கு பட்டின வரும், விசுவகர்மர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி `சென்னம்மன்' ஆயினாள்.
புராணங்களில் சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகாம்பாளை `நெய்தல் நிலக்காமாட்சி' என்று கூறப்பட்டுள்ளது.
கேட்ட வரங்கொடுக்கும் தேவியாக விளங்கியதால்- நெய்தல் நிலக் காமாட்சியைச் செல்வரும், வறியவரும், கல்லாரும் கற்றாரும `சென்னம்மனை' வணங்கிச் சென்றார்கள்.
இக்குப்பத்தின் தேவியருளால் பிறந்த ஒரு செல்விக்கு `சென்னம்மா' என்று பெயர் அச்சென்னம்மா கீழ்த்திருப்பதியில் கோவில் திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகின்றது.
சென்ன பட்டினம் காவிரிப்புகும் பட்டினம் போன்று சங்க காலப் பட்டினமாகும். பழைய கற்கால ஆயுதங்களும் பொருட்களும் சென்னை கிண்டியருகே அரசினரால் கண்டெடுக்கப்பட்டது.
சென்னம்மனுக்குச் சார்த்தும் சிவப்பு புடவை திருவிழா காலங்களில் ஊர்வலத்துக்காகக் காளிக்கு கட்டும் ஒரு வகை ஆடையைக் குறிப்பதே சென்னை எனும் சொல்.
`சென்னை' `கூறை நாடு' வாங்கி வந்தேன் எனில் இடவாகு பெயராக அவ்விடங்களில் குறும்பரால் நெய்த துணி களையே குறிக்கும்.
`சென்னை' ஆடைகளையும்- புடவைகளையும் நெய்து விற்கவே காஞ்சியில் இருந்தும் வாலாஜாவில் இருந்தும் நெசவாளர்களைச் சிந்தாதிரிப்பேட்டையில் குடியேற்றினர் ஆங்கிலேயர். இன்றும் அன்று வந்த பட்டு நூற்காரர் எனும் இனத்தவரை சிந்தாதிரிப்பேட்டையில் காணலாம்.
பேரிச் செட்டி மார் தம் சரக்குகளை விற்க பேரிகை (சென்னை) கொட்டி மக்களை அழைப்பர். வேலூரில் பேரிகாளிகாம்பாள் கோவில் பேரிப்பேட்டை விசுவ கருமர் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.
காளி கோவில் விழா வினையும், கோவில் மூர்த்தியின் புறப்பாட்டினையும் அறிவிக்கும் டமாரத்தைச் சென்னை என்றே கூறினார்கள் பக்தர்.
சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகோவிலை ஆங்கிலேயர்
1. கல்யாண டெம்பிள்
2. கவுளியான பகோடா
3. காரணேஸ்வரி டெம்பிள்
4. காமீஸ்வரி பகோடா என்றும் அழைத்தனர்.
சென்னம்மாள்- அழகான அம்மை
சென்ன புரி- அழகான கோட்டை
இத்தகைய எடுத்துக் காட்டுகள் மூலம் சென்னை மாநருக்கு பெயர் கொடுத்தது காளிகாம்பாள் என்பது உறுதியாகிறது.
- குழந்தையில்லாதவர்கள் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
- கிருஷ்ணஜெயந்தி அன்று நடக்கும் உறியடி திருவிழா மிகவும் பிரபலம்.
திண்டுக்கல் நகரில் யாதவ மேட்டுராஜக்காபட்டி என்ற இடத்தில் கடந்த 1984-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் பஜனைமடம் அமைக்கப்பட்டது. நாளடைவில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த இடத்தில் கிருஷ்ணனுக்கு கோவில் எழுப்பவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஏனெனில் இங்கு வந்து பஜனை நடத்தும் பக்தர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்து வந்தன.
குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலும், வணிகர்களுக்கு தொழில் விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் நிலவி வந்தது. குறிப்பாக குழந்தையில்லா பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அவ்வாறு பல ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் குழந்தையை இந்த கோவிலில் கிருஷ்ணன் முன்பு படுக்கவைத்து முதன்முதலாக உணவு கொடுப்பார்கள்.
அவ்வாறு கொடுக்கும்போது அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி நீண்டநாள் வாழும் என நம்பப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய இந்த கிருஷ்ணன் கோவிலில் முதன்முதலாக 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
உறியடி திருவிழா
ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி அன்று இங்கு நடத்தப்படும் உறியடி திருவிழா மிகவும் பிரபலமாகும். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
கிருஷ்ணஜெயந்தி நாளில் இப்பகுதிகளை சேர்ந்த பல்வேறு குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு, கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்வதும், மறுநாள் உறியடி திருவிழா நடத்தி அதில் இப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள்.
இதுமட்டுமின்றி கிருஷ்ணபரமாத்மாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
- ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர்.
- சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர்.
புத்தி, பலம், புகழ், உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை, நோயற்ற வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார். நவக்கிரஹங்களும் ஆஞ்சநேயரின் வாலில் ஆவாஹனம் ஆகி உள்ளார்.
நவகிரஹ தோசங்கள பில்லி சூன்யங்கள் செய்வினை கோளாறுகள் ஆகிய தோஷங்களையும் தீர்ப்பவர். குழந்தை பேறு இல்லாமை தீராத வியாதி திருமணத்தடை மேலதிகாரிகள் தொல்லை குடும்ப வாழ்க்கை பதவி உயர்வு மற்றும் ஏவல் பேய் பிடித்தவர்களுக்கு நிவர்த்தியும் உண்டாகும்.
ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பழம், தேங்காய், தயிர்சாதம், வெண்ணெய், உளுந்துவடை நிவேத்தியம் செய்யலாம். பசுநெய் தீபம் ஏற்றலாம். துளசிமாலை ஸ்ரீ ராம நாம வடைமாலை பழ மாலைகள் பவள மல்லி மாலைகள், வெற்றிலை மாலை சாத்துபடி செய்யலாம்.
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர். ஆயிரம் யோசனை தூரம் கடலைத் தாண்டியவர் அஞ்சனாகுமாரர். சிரசை வாயில் புகுந்து வெளியே வந்தவர். மைநாக மலையினால் கௌரவிக்கப்பட்டவர். சமுத்திராஜனால் ஆதரிக்கப்பட்டவர்.
நிழல் இழுக்கும் சிம்ஹீயைக் கொன்றவர் கையினால் அடித்தே லங்கினியை வீழ்த்தியவர். அசோகவனத்தை அழித்தவர். ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர். வாலில் வைத்த தீயினால் இலங்கையை அழித்தவர். லஷ்மணரை காப்பாற்ற நிமிடத்தில் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மகாத்மாவான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிப்போம். நமது இடர்களை களைந்து சகல மேன்மைகளையும் பெறுலாம்.
- ஆயிரம் யோசனை தூரத்தை விளையாட்டாக தாண்டியவர்.
- தேவாதி தேவர்களின் சகல ஆயுதங்களையும் பெற்றவர்.
ஸ்ரீஅனுமன் அஞ்சனா தேவியின் குமாரன். வீரம் பல படைத்தவன். ஜானகி பிராட்டியின் துயரத்தை போக்கடித்தவன். வானர தலைவன். அட்சய குமாரனை சம்ஹரித்தவன். இலங்கைக்கு பயம் ஊட்டியவன். மனம் போகும் வேகமும் வாயுவுக்குச் சமமான வேகம் உடையவன். இந்திரியங்களை ஜெயித்தவன். புத்திமான்களில் சிரேஷ்டன்.
வாயுகுமாரன் வானர சேனைத் தலைவன். ஸ்ரீராமதூதன். சமுத்திரத்தின் ஆயிரம் யோசனை தூரத்தை விளையாட்டாக தாண்டியவர். சீதாதேவியின் துக்கம் என்ற அக்கினியை அவளிடமிருந்து விலக்கியவர். மிகச் சிறந்த முகத்தை உடையவரும் மேருபர்வதம் போல் மனோகரமான தேகத்தை உடையவர். பாரிஜாத மரத்தின் அடியில் வசிப்பவர். வாயுவின் புத்திரன்.
ஸ்ரீராமனுடைய கதையை சொல்லுமிடங்களில் கையை அஞ்சலி பந்தம் செய்து கொண்டிருப்பவர். ஆனந்த பாஷ்யத்தினால் தளும்பிய கண்களை உடையவர். ராட்சசர்களுக்குயமன் போன்றவர். ஸ்ரீ சிவ பெருமானிடம் இருந்து நெற்றிக்கண்களை பெற்றவர்.
ஸ்ரீமஹாவிஷ்னுவின் அவதாரமாகிய ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீநரசிம்மா, ஸ்ரீவராகா, ஸ்ரீகருடன் அவதாரங்களை பெற்றவர். தேவாதி தேவர்களின் சகல ஆயுதங்களையும் பெற்றவர். அஹி, மஹி, மயில் வாகனன் போன்ற அசுரர்களை கொசுக்களை போன்று அழித்தவர். மும்மூர்த்திகளும் ஆஞ்சநேயரை இவ்வுலத்தில் உனக்கு நிகர் நீயே என்று போற்றி புகழ்ந்துள்ளனர்.
நவகிரஹங்களின் தோஷங்களை நீக்குபவர். சகல விதமான தோஷங்களையும் நீக்கி சகல சௌபாக்கியங்களையும் கொடுப்பவர். ஸ்ரீபஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமி நாமம் ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி ஸ்ரீபஞ்சமுகராம ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிப்போம். நலம் பல பெறுவோம்.
- கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார்.
- அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள்.
சுயம்பு மூர்த்தி யான பவானி அம்மன் கவசம் பெற்று முன்புறம் அமர்ந் திருக்கிறாள். பின்புறம் சிலை வடிவில் சுதையில் அவள் அழகான உருவம் வடிவமைக் கப்பட்டதைக் காணலாம்.
ஐந்து தலைநாகம் திருக்குடை கவிழ்க்க அன்னை சந்நிதி கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.
பட்டுப்புடவை பளபளக்கும் மேனி, பரந்தமுக அழகில் எடுப்பான மூக்கு, அதில் மின்னித் துடிக்கும் மூக்குத்தி, எழிலார்ந்த சிரிப்பு நம் இதயத்தை அப்படியே கொள்ளை கொள்ளும். நம்மையெல்லாம் காக்கும் கருணைக் கடலாகிய அவளுக்கு நான்கு கரங்கள்.
வலது முன்புற கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம். இந்த கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.
பெரியபாளையத்தமன் உருவம் அமைந்திருக்கும் விதம் மிகவும் அலாதியானது. அரை உருவுடன் சங்கு சக்கர தாரிணியாக அமர்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் அருள் பாலிக்கும் அமுத கலசமும் கொண்டு தோற்றமளிக்கும் அன்னையின் திருக்கோலத்தை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது.
கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார். அன்னையின் மடியருகே அமைந்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் சுயம்புவின் தோற்றம் காலத்தில் மிகமிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் நின்று பெரிய பாளையத்தில் அருளாட்சி செய்து வருகிறாள் பவானி என்னும் இந்த பெரிய பாளையத்தமன். இந்த சக்தியின் சக்தியை சக்தியால் உணர்ந்து சக்தியும் பெற்றோர் பலர்.
கவி காளிதாசனுக்கு அருட்கவி பாடிட அருளிய வளும், அலையும் மனத்தால் அமைதி இழந்து நின்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், காளிதாசருக்கும் அமைதி வழிகாட்டி ஞானம் தந்தவளும் அன்னை பவானியே!
ஓங்கார வடிவம் கொண்ட அன்னை பவானி ஆங்காரம் கொண்டோரையும், முறை தவறி அறநெறி பிறழ்வோரையும் வதம் செய்து அடக்கி மோன நிலையில் இருக்கிறாள்.
நோயுற்று அல்லலுறுபவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்தால் அவர்கள் நோயும், பாவமும் நிச்சயம் அகலும். தீமையைப் போக்கி நன்மையை நிலைநாட்டும் அன்னை தன் அருட்பார்வையாலும், தான் அணிந் திருக்கும் மஞ்சளாலும், தன்மேல் பட்ட தண்ணீராலும், தீர்க்க முடியாத பல நோய்களை எல்லாம் தீர்த்து அருள்கிறாள்.
கோழி சுற்றி விடும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளில் "கோழி சுற்றி விடும் பிரார்த்தனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது "இது உயிருக்கு உயிர் கொடுக்கும்'' பிரார்த்தனை ஆகும்.
வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அல்லது விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக பெரியபாளையத்தம்மனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். உடல்நலம் சரியானதும் மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒன்றை கோவிலில் விட்டு விடுவார்கள்.
கோழி என்றால் தாயே இந்த உயிரை ஏற்றுக் கொள் என்று சுற்றி விடுவார் கள். ஆடு, கோழிகளை சுற்றி விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு என்றே பரசுராமர் சன்னதி அருகில் தனி இடம் உள்ளது. அங்கு விடப்படும் ஆடு, கோழிகள் பவானி அம்மனுக்கு சொந்தமானதாக மாறி விடும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியபாளையம் கோவிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. ரத்தம் ஆறாக ஓடும் வகையில் கூட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. உயிர்ப்பலி தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
அதற்கு பரிகாரமாக கோவில் சார்பில் ஒரு கோழியை உயிருடன் சுற்றி விட்டனர். அதைப் பார்த்து பக்தர்களும் ஆடு, கோழிகளை சுற்றி விடத் தொடங்கி விட்டனர். ஆடி மாத சிறப்பு நாட்களில் இங்கு ஏராளமானவர்கள் கோழி சுற்றி விடுவதை காணலாம்.
- தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள்.
- சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது.
வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்து கிறார்கள்.
இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப்பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள்.
4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீது படும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.
வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டு பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.
மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.
பரசுராமர் பாவம் தீர வழிபட்ட தலம்
முனிவர் ஜமத்கனி உத்தரவை ஏற்று தன் தாய் ரேணுகாதேவியை பரசுராமர் வெட்டி கொன்ற தகவலை முன்பக்கங்களில் படித்து இருப்பீர்கள். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.
இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந் துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது. இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.
சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.
இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
தோஷம் போக்கும் சென்னை ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்
சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மாரியம்மன் ஆலயங்கள் ஆங்காங்கே உள்ளன.அதில் ஒன்று சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகாதேவி ஆலயம், மின்ட் சாலையும் என்.எஸ்.ஜி. போஸ் சாலையும் இணைக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் 250 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். அதற்கு காரணம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும் ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டுமே பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.
அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஓளியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல படைவீடு தலத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயமும் மிகவும் புகழ் பெற்றதாகும்.
- உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார்.
- பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் பவானி அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புற்றுக்குள் சுயம்புவாக தோன்றி விட்டாள். அந்த இடத்தை மூலமாக கொண்டு கோவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சி பெற்றுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த கோவில் கருவறை மற்றும் ஒரு மண்டபத்துடன் மட்டுமே இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை பெருக, பெருக கோவிலும் வளர்ச்சி அடைந்தது. கோவிலை சுற்றி மிக அழகான பிரகார மண்டபம் கட்டி உள்ளனர்.
கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் சித்திபுத்தி விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும்.
அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்' தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.
இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம்.
அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும். கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று கோவில் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும்.
பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
கோவில் மூலஸ்தானம் மீதும், முன் பகுதியிலும் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. என்றாலும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் பிரமாண்ட ராஜகோபுரம் இருந்தால் பக்தர்கள் மனம் மகிழ்ச்சி பெறும்.
கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள நடைபாதை கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிக்காதபடி வேறொரு இடம் கொடுத்து விட்டு அங்கு மிக உயரமான ராஜகோபுரம் கட்டினால் பாளையத்தம்மன் கோவிலுக்கு அது ஒரு முத்திரையாக இருக்கும்.
பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்!
சென்னைவாசிகளுக்குப் பெரியபாளையத்தை பற்றித் தெரியாமல் இருக்காது. அருள்மிகு பவானி அம்மன் என்னும் சக்தி வாய்ந்த நாயகி, இங்கே குடி கொண்டு தன் அரசாட்சியை செலுத்தி வருகிறாள்.
மஞ்சளின் மணம் துலங்க... வேப்பிலையின் வாசம் விளங்க... இவள் குடி கொண்டிருக்கும் பெரிய பாளையம் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும்... அருள் மழை சுரக்கும்.
பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிப்பதற்கு அவள் சந்நிதியை நாடி நித்தமும் வரும் பக்தர்கள் ஏராளம். தன் அருளுக்குப் பாத்திரமாகும் அடியவர்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு, அவர்களைக் குறை இல்லாமல் வாழ வைத்து வருகிறாள் பவானி அம்மன்.
சாதாரண நாளில் கூட பக்தர்களின் கூட்டம் இங்கு விழி பிதுங்கும் என்றால், ஆடி மற்றும் தை முதலான விசேஷ காலங்களில் இங்கு கூடும் கூட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு, பவானி அம்மனுக்குத் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
பவானி அம்மன் கோயில் கொண்ட இந்த பெரிய பாளையத்தில் விசேஷமான சிவாலயம் ஒன்றும் இருக்கிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்கள் எவருக்கும் தெரியாது என்பது துரதிர்ஷ்டமே! இத்தனைக்கும் சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள், இந்த சிவாலயத்தை தாண்டித்தான் அம்மனின் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைக்க முடியும்.
ஆனால், இந்த சிவாலயம் அமைந்திருக்கும் விவரம் பலருக்கும் தெரியாது. ஓரளவு நல்ல பராமரிப்பிலேயே இந்த ஆலயம் இருந்து வருவது, பாராட்டத்தக்கது.
பவானி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் முன்பாக, பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூர்ணாம்பா சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். அருமையான சிவாலயம். இந்த தலத்து இறைவனை புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர்.
புண்ணிய நதியாம் ஆரணி நதிக்கு அந்த பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், இந்த பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில்.
சிறியது என்றும் சொல்ல முடியாது. பெரியது என்றும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கச்சிதமான ஆலயம். ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள், ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவ தலம்.
உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் மெயின் ரோடு அமைந்திருக்கும் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விசேஷ நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.
இந்த ஐமுக்தீஸ்வரர் லிங்க வடிவத்தை மாபெரும் தவ சிரேஷ்டரான வால்மீகி முனிவர், பிரதிஷ்டை செய்து வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. பாரத தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார்.
பொங்கிப் பிரவாகிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைந்து தவம் புரிந்தார். மாபெரும் முனியின் மாதவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார்.
வால்மீகி முனிவர் மகிழ்ந்தது. 'யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவா... எனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
எம்பெருமானும் மனம் கனிந்தார். லிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, 'வால்மீகி ஆசிரமம்' என்ற பெயரும் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.
தவிர, பஞ்சபூதங்களான ப்ருத்வி (மண்), நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் 'ஐமுக்தீஸ்வரர்' என இறைவன் அழைக்கப்பட்டாராம்.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமானை நேரில் கண்டு வணங்குவதற்காக ஒரு முறை கயிலாயம் சென்றனர். அப்போது, கயிலயங்கிரியைக் காவல் காத்து வரும் நந்திதேவரின் முறையான அனுமதி பெறாமலேயே ஐந்து பேரும் உள்ளே நுழைந்து விட்டார்கள்.
நந்திதேவரின் கோபத்துக்கு ஆளான தங்களுக்கு உள்ளே சாபம் காத்திருக்கிறது என்பது தெரியாமலேயே கயிலைவாசனின் முன்னால் போய் பயபக்தியுடன் நின்றார்கள்.
அது- கயிலை வாசன் கடும் தவத்தில் இருக்கும் நேரம்... அந்த வேளையில் எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறினால் அவ்வளவுதான்! பாவம், பஞ்சபூதங்களுக்கு இந்த விவரம் தெரியாது போலும்!
''இறைவா... கயிலைவாசா... நீலகண்டா... எம் பெருமானே... உன்னைத் துதித்து உன் அருள் பெற வேண்டியே, பஞ்சபூதங்களாகிய நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். எங்களுக்கு இரங்கி, அருள் புரிந்து எங்களைக் காத்தருள்வாய் காலகண்டா'' என்று தொழுதார்கள்.
அருளை எதிர்பார்த்துச் சென்றவர்களின் வாழ்வில் இருள்தான் படர்ந்தது. சில விநாடிகள் கழித்துக் கயிலை வாசன் கண் திறக்கும்போது, அந்த உக்கிரத்தை பஞ்சபூதங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவனின் கோப முகத்தைப் பார்த்து ஏகத்துக்கும் நடுங்கி விட்டனர். தாங்கள் ஏதோ தவறு இழைத்து விட்டோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
இறைவன் அவர்களைப் பார்த் துத் திருவாய் மலர்ந்தருளினார்: ''பஞ்சபூதங்களே... தவறு புரிந்து விட்டீர்கள். நந்திதேவரை அலட் சியம் செய்து, அவரின் அனுமதி இல்லாமல் என்னைத் தரிசிக்க வந்ததே தவறு.
என்னைத் தரிசிக்க வேண்டிய காலம் அல்லாத வேளையில் உள்ளே புகுந்து என் பணிக்கு இடையூறு விளைவித்து விட்டீர்கள். அனுமதி இல்லாமல் குரங்குகள் போல் கயிலாயத்தில் நுழைந்த நீங்கள் குரங்கு வடிவிலேயே பூலோகத்தில் அலைவீர்கள்'' என்று சபித்தார்.
பஞ்சபூதங்கள் அதிர்ந்து போனார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த குரலில், ''இறைவா... எங்களின் தவறை நாங்கள் உணர்ந்து விட்டோம். நந்தி தேவரின் அனுமதி இல்லாமல் முறை தவறிய வேளையில் கயிலாயத்துக்குள் புகுந்தது எங்களின் பிழை.
இதற்காக வருந்துகிறோம். எங்களின் விதிப்படி தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொள்கிறோம். பூலோகத்தில் குரங்குகளாகவே திரிகிறோம்.
என்றாலும், இந்த சாபம் எங்களுக்குச் சற்று கடுமையாக இருக்கிறது. எனவே, குறுகிய காலத்திலேயே நாங்கள் பழைய உருவை அடைய ஒரு விமோசனத்தையும் தந்தால் நன்றி உடையவர்களாக இருப்போம்'' என்றனர். பஞ்சபூதங்களின் பரிதவிப்பில் மனம் இரங்கினார் இறைவனார்.
'தொண்டை நாட்டிலே உத்தர வாகினியாக ஆரணி நதி பாயும் பிரதேசத்தில், வால்மீகி முனிவர் பூஜித்த சுயம்பு லிங்க வடிவம் தாங்கிய திருக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு வந்து என்னை வழிபடுங்கள். சாபம் நீங்கும்!'' என்றருளினார்.
சாப விமோசனம் பெற்ற திருப்தியில் கயிலாயத்தை விட்டுப் புறப்பட்ட பஞ்சபூதங்கள் பூலோகத்துக்கு வந்தனர். இறைவனார் அருளியபடி, ஆரணி நதிக் கரை வந்து, அங்கு வால்மீகி முனிவர் வணங்கிய சுயம்பு வடிவத்தை வணங்கி, சாபம் நீங்கப் பெற்றனர்.
பஞ்சபூதங்கள் இங்கு குரங்கு வடிவில் தங்கி இருந்து, இறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட நிகழ்வை விளக்கும் சுதைச் சிற்பம் ஒன்று ஆலயத்துக்குள் காணப்படுகிறது. அதாவது, லிங்க பாணத்தில் நெற்றிப் பகுதியில் ஐந்து குரங்குகள் காணப்படுகின்றன.
இதே நிகழ்வை விளக்கும் விதமாக ஒரு லிங்க வடிவமும் (சிலா) ஆலயத்துக்குள், அம்பாள் சந்நிதிக்கு அருகில் தரிசனம் தருகிறது. பல்லவ ராஜாக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தை கட்டி யதாகச் செய்தி. இதைக் கடந்ததும் கொடி மரம், பலிபீடம், நந்திதேவர் மண்டபம். கடந்து உள்ளே போனால் ஐமுக்தீஸ்வரர் மற்றும் அன்ன பூர்ணாம்பாவை தரிசிக்கலாம்.
பிராகார வலத்தில், ஐயப்பன் சந்நிதி, பலிபீடம்- மயில் வாகனத்துடன் கூடிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகனார் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி, யாகசாலை மண்டபம்... இப்படி நீள்கிறது பிராகார வலம். தவிர பிராகார வலத்தின்போது ஐமுக்தீஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் துர்கை, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு, தல விருட்சமான வில்வத்தையும் காணலாம்.
இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்தடுத்து சந்நிதிகள். மேற்குப் பார்த்தவை. இரு தெய்வங்களுக்கும் பொதுவான மகா மண்டபம். இங்கே ஆலய வாகனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மூஞ்சூறு, மயில், ரிஷபம், பிரதோஷ ரிஷபம் என்று வாகனங்கள் பளிச் சென்று காணப்படுகின்றன.
ஈசன் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப் பக்கமாக ஒரு மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவாலயத்துக்கு உண்டான அனைத்து விக்கிரகங்களும் இங்கு தரிசனம் தருகின்றன.
- புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
- சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் வளையல் விற்பதற்காக சென்னைக்கு வருவார்கள். வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து செல்வார்கள்.
பெண்களின் கையில் வளையல் பொட்டு விட்டவுடன் மங்களகரமாக வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இதற்காகவே அவர்கள் பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.
ஒரு சமயம், ஒரு வளையல் வியாபாரி, சென்னையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடை பயணமாக ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி ஆறு பகுதி வந்ததும் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கும் இங்கும் தேடினார். வளையல் மூட்டை கிடைக்கவில்லை.
அப்பொது அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது.
ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நீண்டநேரம் பொராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை.
அதற்கு மேலும் அங்கு நிற்க துணிவு இல்லாத அவர் ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த பொது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பவானி அம்மன் தோன்றினாள்.
`நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா. அங்கு வந்து என்னை தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு' என்று உத்தரவிட்டாள்.
திடுக்கிட்டு விழித்த வளையல்காரருக்கு வியர்த்துக் கொட்டியது. மறுநாளே வளையல், மஞ்சள், குங்குமம் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டார்.
பெரியபாளையம் வந்ததும், அந்த புற்றைப் பார்த்தார். அந்த பகுதி ஊர் மக்களை அழைத்து, அம்மன் கனவில் உத்தரவிட்டதை கூறினார்.
அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக, அந்த புற்றை அகற்றிவிட்டு, அதில் வயல் உண்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். வளையல் வியாபாரி சொன்னதும் கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற தொடங்கினார்கள்.
பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.
அதோடு புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து பொனது.
இதைப் பார்த்து அந்த பகுதி மக்களுக்கு கூடுதல் பயம் வந்துவிட்டது. நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்தனர். அதற்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதன் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது.
உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று போனது.
இதையடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம். இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பெரிய பாளையத்து பவானியம்மன், தன்னை நம்பி, நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரம் களை வாரி, வாரி வழங்கி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாள்.
- தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்து கிறார்கள்.
- பாளையம் என்றால் படை வீடு என்று பொருள்.
பாளையம் என்றால் படை வீடு என்று பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள்.
பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனை வழிபாடு செய்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தியுடன் அம்மனின் பெயரைக் கூறி வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது.
இங்கு மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு ஒன்று உண்டு. அது அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான்.
பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப் பதாகதத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.
உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளை யத்து அம்மனை நினைத்தப் படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய்பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்து கிறார்கள்.
இப்படி பெரியபாளையத்து அம்மன் பெருமைகளை சொல்லிக் கொண்டே பொகலாம்.
ஜலமூர்த்தி அவதாரம்
பெரியாபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அஷ்ட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார்.
வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ளது தண்ணீர். தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வாழ்வினை அளிப்பவள் என்று கருதப்படுகிறார்.
இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா பொன்ற கொள்ளை நோய்களில் இருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப் பட்டுள்ளதால், பக்தர்கள் ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
- முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
- உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.
மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும்.
ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.
ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.
உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.
முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
அதனால் முருகனைக் "குறிஞ்சிக் கிழவன்" "மலைகிழவோன்" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.
முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு.
மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.
"முருகு" என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.
"மு" என்பது திருமாலையும் "ரு" என்பது சிவபெருமானின் அம்சத்தையும் "க" என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.
தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும்,
தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும்,
தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு,
தமிழ் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.
ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும்,
இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.
முருகனை வணங்கினால் எல்லாக் கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.
மகனுக்கு செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவ பெருமானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால்
சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால்
தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.
முருகன் தன் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகளை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்து அருளும் தன்மை வாய்ந்தவன்.
முருகனை அடைந்தால் அவன் நம் துன்பத்தை அழிப்பான்.
முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என எப்போதும் கூறித் தியானிப்பவர்கள்
என்றும் குறையாத பெரும் செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருேபாதும் எத்தகைய துன்பமும் அணுகாது.