search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ ஜெகன்னாதர் கோவில்"

    • உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966-ம் ஆண்டு பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்டது.
    • பக்தி வேதாந்த அகடமியின் மூலம் நவீன காலத்திற்கு உகந்த யோகப்பயிற்சியை கற்றுத்தருதலையும் செய்து வருகின்றனர்.

    ஹரே கிருஷ்ண இயக்கம் என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமாக விளங்கும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966-ம் ஆண்டு பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்டது.

    முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியினை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

    அவரது தெளிவான கருத்துக்கள் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் இதயத்தில் உட்புகுந்து பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து, இந்த இயக்கம் மிகவும் குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்று உலகெங்கும் பரவியது.

    இயக்கத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பின்பற்றி, கிருஷ்ண பக்தியை மக்களிடம் எடுத்துச்செல்லும் சுயநலமற்ற திருப்பணியை மேற்கொண்டனர்.

    ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட பல்வேறு புத்தகங்கள் லட்சக்கணக்கில் பல்வேறு மொழிகளில் வினியோகம் செய்யப்பட்டன. அந்த புத்தகங்கள் உலகின் பல்வேறு அறிஞர்களாலும், பண்டிதர்களாலும் விரைவில் அங்கீகரிக்கப்பட்டன.

    ஸ்ரீல பிரபுபாதரால் தொடங்கப்பட்ட இஸ்கான் தொடர்ந்து உலகெங்கிலும் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து, கல்வியறிவு போன்ற எந்த பேதங்களும் இன்றி மனித குலத்தின் மேன்மைக்காக ஆன்மீக ஞானத்தைப் பரப்பி வரும் இந்த இயக்கம், தற்போது நூற்றுக்கணக்கான நாடுகளிலும், பல்வேறு நகரங்களிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றது.

    கோவை பீளமேடு கொடிசியா வளாகம் அருகில் ஸ்ரீ ஜெகன்னாதர் கோவில் (இஸ்கான்) உள்ளது. இந்த ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு அறப்பணிகளை செய்து வருகிறார்கள்.

    ஹரி நாம சங்கீர்த்தனம், பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களை வினியோகித்தல் பணியை செம்மையாக செய்து வருகின்றனர். மேலும் பக்தி வேதாந்த அகடமியின் மூலம் நவீன காலத்திற்கு உகந்த யோகப்பயிற்சியை கற்றுத்தருதலையும் செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மீகப்பயிற்சி, இல்லங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    ஞாயிறு விருந்து

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பஜனை, கீர்த்தனை, ஆரத்தி, ஆன்மீகப் பிரசங்கம் நடைபெறுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சுவையான பிரசாத விருந்து வழங்கப்படுகிறது. இஸ்கானின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணருக்குப் புதிய கோவில் அமைக்கும் பணியும், -பகவான் ராதாகிருஷ்ணருக்கு பிரம்மாண்டமான கோவிலுக்கான ஆரம்பகட்டப்பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

    நாம் தற்போது வாழ்ந்துவரும் இந்த கலியுகம் சண்டையும், சச்சரவுகளும் நிறைந்தது. இதனை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உடல் ஆரோக்கியமின்மை, வியாதிகள், மனசஞ்சலங்கள், குடும்பப் பிரச்சினைகள், சமுதாயப் பிரச்சினைகள், தேசப் பிரச்சினைகள், அதிக குளிர், அதிக வெப்பம், புயல், மழை போன்றவை அதிகரித்தவண்ணம் உள்ளன. மக்கள் மத்தியில் பல்வேறு வசதிவாய்ப்புகள் உள்ளபோதிலும் எவரும் மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ வாழ்வதில்லை.

    சுயநல ஆசைகளுடன் வாழும் பலரும் உண்மையில் மிருகத்தினைப்போல் வாழ்ந்து வருகின்றனர்.

    பெறுவதற்கு அரிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள் இதனை முழுமையாக உபயோகித்து, நாம் யார்? கடவுள் யார்? நாம் ஏன் துன்பப்படுகிறோம்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம். இவற்றை உணர்வது தன்னுணர்வு எனப்படும்.

    இந்த தன்னுணர்வை அடைய பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த கலியுகத்தில் உள்ள மக்கள் மற்ற யுகங்களைக் காட்டிலும் குறைந்த புத்தி மற்றும் ஆயுளைப் பெற்ற துரதிருஷ்டசாலிகளாக இருப்பதால், அவர்களுக்கென்று ஓர் எளிமையான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது அதுவே ஹரிநாமசங்கீர்த்தனம்.

    இந்த சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவதன் மூலம் முக்தியடைவது எளிது. இதுவே எல்லா வேதங்களின் கூற்றுமாகும். பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. எனவே கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை காதுகளுக்குக் கேட்கும்படி உச்சரியுங்கள். ஆனந்தம் அடையுங்கள்:

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

    கோவையில் உள்ள இஸ்கானின் முக்கிய விழாக்கள்:

    தேர்த்திருவிழாஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடைபெறும். உலகப்புகழ்பெற்ற, புராதனமான பூரிஜகன்னாதர் ரதயாத்திரையைப் பின்பற்றி இங்கு இந்த திருவிழா நடைபெறுகிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் கோவையில் இந்த விழாவை நடத்துகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கவுர பூர்ணிமா விழா நடத்தப்படுகிறது. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் முன்னோடியான பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த திருநாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.

    நரசிம்ம ஜெயந்தி மே மாதம் கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், தன்னுடைய பக்தரான பிரகலாததனை காக்க அவதரித்த திருநாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.

    ஸ்ரீராதாகோவிந்தர் ஊஞ்சல் உற்சவம் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது பக்தர்களே ஊஞ்சல் சேவையைச் செய்து பேரானந்தமடையலாம்.

    ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் கோலாகலமாக நடைபெறுகிறது. பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் அவதரித்த திருநாளாக இது கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீதாமோதர ஆரத்தி விழா அக்டோபர், - நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. ஒருமாத காலத்திற்குத் தொடர்ந்து நடைபெறும் இந்த உற்சவத்தில், பகவான் தாமோதரருக்கு நெய்விளக்கு ஆரத்தியைச் சமர்ப்பிக்கலாம். இந்த மாதத்தில் செய்யும் ஒவ்வொரு பக்தித்தொண்டும், 10ஆயிரம் மடங்கு பலன் அளிக்கவல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    ×