என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Veethi ula ஆன்மிக களஞ்சியம்"
- சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் மணக்குள விநாயகர்.
- ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி அன்று உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கம்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. திருச்சி என்றதும் உச்சிப் பிள்ளையார் நினைவுக்கு வருவார். மதுரை என்றதும் தாய் மீனாட்சி கண்முன் வந்து நிற்பாள்.
அது போலத்தான் புதுச்சேரி என்று சொன்னதுமே மணக்குள விநாயகர் `பளீர்' என எல்லாரது மனதிலும் தோன்றுவார். புதுச்சேரியின் நாயகனே இவர்தான்.
புதுச்சேரி மக்களின் உயிரோடும், உணர்வோடும் இவர் இரண்டற கலந்துள்ளார். இதனால் புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் மணக்குள விநயாகரை தங்கள் குல தெய்வமாகவும், கண் கண்ட தெய்வமாகவும் கருதுகிறார்கள்.
மணக்குள விநாயகருக்கு முதல் வழிபாடு செய்யாமல் அவர்கள் எதையுமே செய்வதில்லை. குடும்பத்தில் திருமணம் நடைபெற இருந்தால் முதல் அழைப்பிதழை மணக்குள விநாயகருக்குத்தான் கொடுப்பார்கள்.
குழந்தை பிறந்தால் தீட்டுக் காலம் முடிந்ததும், கோவிலுக்கு தூக்கி வந்து விடுவார்கள். மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கடலை போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள். பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டி மணக்குள விநாயகர் சன்னதி முன்பு படுக்க வைப்பார்கள். இதன் மூலம் தங்கள் குழந்தைக்கு விநாயகர் அருளாசி கிடைத்து விடுவதாக நம்புகிறார்கள்.
இது மட்டுமல்ல புதிதாக வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, நிலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வணிக ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தாலும் சரி, புதிதாக கடை தொடங்குவதாக இருந்தாலும் சரி, மணக்குள விநாயகர் முன்பு ஆஜராகி விட்டுத்தான் எதையும் செய்வார்கள்.
விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர் கள், பெண்கள் என்று எல்லாருமே மணக்குள விநாயகரை முன் வைத்தே எதையும் செய்வது உண்டு. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளும் விலக்கல்ல.
புதுச்சேரி அரசியல்வாதிகளில் 99 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்வதில் தொடங்கி பதவி ஏற்பது வரை ஒவ்வொரு தடவையும் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வந்து ஆசி பெற்ற பின்பே செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
அது போல புதுச்சேரியில் முதல்-மந்திரியாக இருப்பவர்கள் தலைமை செயலகத்துக்கு செல்லும் போது, மணக்குள விநாயகரை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு போக தவறுவது இல்லை.
புதுச்சேரியில் உள்ள இந்துக்கள் மட்டும்தான் இப்படி மணக்குள விநாயகரிடம் மனதை பறிகொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களுக்கு நிகராக மணக்குள விநாயகரை வணங்கி ஆசி பெற்று செல்வது மிகச் சிறந்த மத ஒற்றுமைக்கு எடுத்துக் கட்டாக உள்ளது.
மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வரும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அர்ச்சனை செய்தும் வழிபட தவறுவதில்லை. சில கிறிஸ்தவர்கள் சூறைத் தேங்காய் எல்லாம் உடைப்பது உண்டாம்.
புதுச்சேரி முதல்-மந்திரியாக இருந்த ஒரு தலைவர் தான் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், முக்கிய நாட்களில் தன் மகளை மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு அனுப்பி வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். இதன் மூலம் மணக்குள விநாயகர் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொருவரையும் சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் என்பது புரிகிறது.
அதனால்தான் புதுச்சேரியில் வாகனம் வாங்குபவர்கள் முதலில் அதை நேராக மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு ஓட்டி வந்து பூஜை போடுவார்கள். அந்த வகையில் தினமும் குறைந்தபட்சம் 100 மோட்டார் சைக்கிள்களுக்கு பூஜை போடப்படுகிறது.
விசேஷ நாட்களில் 200-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக் கிள்கள், 50-க்கும் மேற்பட்ட கார்கள் வந்து விடும் என்று கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
அவ்வளவு ஏன்.... வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்வதாக இருந்தாலும் புதுச்சேரி மக்கள் மணக்குள விநாயகரைப் பார்த்து வணங்கி விடைபெற்றுச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மணக்குள விநாயகரை நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தும்பிக்கையானும் புதுச்சேரி வாழ் மக்களை கண்ணை, இமை காப்பது போல காத்து வருகிறார்.
திருத்தங்கத்தேர்
5-10-2004ல் சுமார் 70 லட்சம் மதிப்பில் நகாசு வேலைப்பாடுடன் கூடிய புதிய தங்கத் தேர் செய்யப்பட்டு விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி தினத்தில் ஸ்ரீவிநாயகர் உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கமாக இருக்கிறது. உபயதாரர் விரும்பும் நாட்களில் கட்டணம் செலுத்தினால் வெள்ளித்தேரும், தங்கத் தேரும் கோவிலின் உட்பிரகாரத்தில் மூன்று முறை உலா வரும் உற்சவம் நடைபெறுகின்றது.
விநாயகர் அந்த நேரங்களில் வீதியுலா வந்து விண்ணவரையும், மண்ணவரையும் மகிழ்விக்கின்றார். விக்கினங்கள் நீக்கும் விநாயகரை நினைத்து எந்த நற்காரியங்கள் செய்தாலும் இடையூறு நீங்கப் பெற்று, காரிய சித்தி ஏற்படும் என்பது திண்ணம்.
மூலவர் தங்க கவசம்
13-06-2008 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் அருள்மிகு மணக்குள விநாயகர் மூலவருக்குத் தங்கக் கவசம் சார்த்தும் விழா முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.
மூலவருக்கு `தங்கக் கவசம்' சுமார் 10 கிலோ எடையில் உருவானது. 916.7 தங்கத்தில், ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களால் அது அமையும் பக்தர்கள் விருப்பத்திற்கிணங்க ரூ.3 ஆயிரம் மட்டும் செலுத்தி தமது குடும்பத்தாருடன் தனியே நவகலாசாபிஷேகம் செய்து மூலவர் தங்கக் கவசம் சார்த்தி வழிபடவும் வகை செய்யப்பட்டுள்ளது.
உற்சவர் தங்க கவசம்
02-03-2011 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மணக்குள விநாயகர் உற்சவ மூர்த்திக்கு தங்கக் கவசம் சார்த்தும் விழா பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. உற்சவருக்கு தங்கக் கவசம் சுமார் 5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டது. கூடுதாக ஒரு வில்வமாலை சுமார் 1 கிலோ எடையில் உருவாக்கப்பட்டது. 916.7 தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களாக அந்தக் கவசம் இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்