search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயிரங்கால் மண்டபம்"

    • தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    • நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில். இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம்.

    அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம். இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

    கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

    ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிட கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.

    நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது. இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

    மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது. கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.

    நான்காவது பிரகாரத்தை அடுத்து கோயிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன. இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோவில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.

    உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.

    இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன. இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும், ஐந்து சபைகள் நடராஜர் கோவிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.

    நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது. ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.

    இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    கோவிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.

    கோவிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் ஒரு தனியான கோவில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.

    சிவராத்திரியின்போது நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

    ×