search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டோதரி"

    • இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை.
    • மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.

    இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை. மண்டோதரிக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நெடுங்காலமாக திருமணத் தடை உண்டாகியது. அவள் திருமணம் நடைபெறாமல் தடைபட்டு நின்று விட்டது.

    சிவ சக்தியின் அருள் நிறைந்து இருக்கும் இடங்களெல்லாம் அழகு நிறைந்த இடங்களாகும் என்று மண்டோதரிக்கு தெரியவந்தது. இதனால் மண்டோதரி உத்திரகோசமங்கை மங்களநாதன் திருத்தலத்திற்குச் சென்று மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.

    மங்களநாதன் மண்டோதரி முன் தோன்றி மாங்கல்ய தோஷத்தை முற்றிலும் நீக்கி விட்டார். பின்பு மண்டோதரிக்கும் ராவணனேஸ்வரனுக்கும் இனிதே திருமணம் நடைபெறுகிறது.

    மாணிக்கவாசகர் பெயர் பெற்ற தலம்

    உத்தரகோசமங்கை சிவபெருமானுக்கு ஆயிரம் சிவவேதியர்கள் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்களிடம் சிவபெருமான் மண்டோதரிக்கு அருள்புரிந்து வருகின்றேன் `சிவாகம நூலை' காத்துக்கொண்டு இருங்கள் என்று கூறி விட்டு இலங்கை சென்றார்.

    சிவபெருமானிடம் 1000 சீடர்களும், ராவணன் அரக்கனால் உங்களுக்குத் துன்பம் உண்டானால் என்ன செய்வோம் என்றார்கள். அதற்கு சிவபெருமான், எனக்கு துன்பம் ஒன்றும் வராது. அப்படி அவனால் துன்பம் வந்தால் இந்த தெப்பக் குளத்தில் அக்கினி தோன்றும் என்று கூறி மறைந்தார்.

    சிவபெருமான் அசோகவனத்தில் மண்டோதரிக்கு அருள் அளிப்பதற்கு வேண்டி சென்றபோது ராவணன் ஈசனடியார் என்று உணராமல் சினமடைந்து அவரைப் பின்புறம் தலையில் அடித்து விடுகிறான். அதனால் தெப்பக்குளத்தில் அக்கினி தோன்றியது.

    இது கண்ட ஆயிரம் வேதியர்களில் ஒருவர் நீங்கலாக எஞ்சிய 999 வேதியர்கள் ஈசனுக்கு ஆபத்து என்று அலறியவாறு அந்த அக்கினியில் இறங்கி விட்டனர். ஈசன் மண்டோதரிக்கு அருள் வழங்கி விட்டு உத்திரகோசமங்கை திரும்பி வந்தார்.

    ஒரே ஒரு வேதியர் மட்டும் சிவாகம நூலைக் கட்டி அணைத்து நிற்பதை கண்டார். அந்த சிவவேதியர் அக்கினி தெப்பக்குளத்தில் தீ எரிந்தது மற்ற வேதியர்கள் எல்லாம் அக்கினியில் இறங்கி விட்டார்கள் நான் ஆகமநூலை காப்பாற்றினேன் என்று ஈசனிடம் கூறினார்.

    நீ ஆகம நூலை காப்பாற்றிய உம் பக்தியை மெச்சினோம். சிவாகம நூலை தோத்திரப் பாக்களாகப் பாடி நம்மை மீண்டும் வந்து, மாணிக்கவாசகராக கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தோன்றி திருவாசகத்தை எழுதுவாய் என்று சிவபெருமான் கூறி மறைந்தார்.

    அதன்படி மீண்டும் கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோச மங்கை திருத்தலத்தில் மாணிக்கவாசகர் தோன்றி திருவாசகத்தை எழுதினார்.

    இலங்கையில் நடந்த போரில் ராமன் பிரம்மாஸ்திரத்தில் தெய்வீக சக்தியை அதன்கண் ஆவாஹனம் பண்ணினான். அந்த அஸ்திரத்தை ராமன் ஏவினான்.

    ராவணன் இருதயத்தை அது துளைத்தது. பிறகு அது தலையைத் தொட்டது. அவன் கரங்களை துண்டித்தார்.

    ராவணன் தரையில் விழுந்து புரண்டு உயிர்துறந்தான். அன்று நடந்த இறுதிப் போரில் குரங்கு படைகளுக்கும் அசுரப்படைகளுக்கும் கடும்போர் நடைபெற்றது. இருபடைகளிலும் பல கோடிக்கணக்கான போர் வீரர்கள் மாண்டு மடிந்தார்கள்.

    இப்படி இறந்தவர்களின் உடல்கள் மாமிச மலைபோல் குவிந்து கிடந்தது. ரத்தம் பெருகி காட்டாறுபோல ஓடியது. அந்தரத்த ஆறு கடலில் கலந்தது. மாமிசத்தையும், உதிரத்தையும் பேய்கள், பிசாசுகள், இரத்தக்காட்டேரிகள் போன்றவைகள் உண்டு செரிக்காததால் குட்டிக்கரணம் அடித்து விளையாடி கொண்டிருந்ததன.

    இறந்தவர்களின் ஆவிகள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர்களுக்கு பிரம்மஹத்தி தோஷமாகப் பற்றிக் கொண்டது. அதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குறித்த நேரத்துக்குள் ராமேஸ்வரத்தில் வழிபட வேண்டும் என்று மகரிஷிகள் அறிவுறுத்தினார்கள்.

    லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு கைலாசத்தில் இருந்து லிங்கம் கொண்டு வரும்படி ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். ஆனால், நெடுந்தொலையில் உள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டு வருவதற்குக் காலதாமதம் ஆகிவிட்டது.

    விபீஷணனின் வேண்டுகோளுக்கு இணங்கி மண்டோதரியின் குடிக்கோவிலான ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோச மங்கை தலத்தில் மண் எடுத்து வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், உயிர்களின் ஆவி அனைத்தும் நீங்கும் என்று கூறிய அறிவுரையின்படி உத்தரகோச மங்கைக்கு வாலியின் மகன் அங்கதனை ராமர் அனுப்பினார். அங்கதன் அங்குள்ள மண்ணை எடுத்து வந்தான். சீதை சிவன் தலத்தில் உள்ள மண்ணை வைத்து லிங்கம் உருவாக்கி ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து அனைவரும் வழிபட்டார்கள்.

    கைலாசம் சென்று லிங்கத்தை எடுத்து திரும்பி வந்த அனுமன் அங்கு மண் லிங்கம் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு அதை தன வாலால் சுற்றி அகற்ற முயன்றான். வால் லிங்கத்திலிருந்து உருவி அனுமனுடைய முகம் தரையில் இடித்து ரத்தம் வழிந்தது. அதனால் ராமேஸ்வரத்தில் இருக்கும் அனுமன் முகம் எப்பொழுதும் சிவந்திருக்கும்.

    இந்த லிங்கத்தில் அனுமன் வாலால் உருவிய தழும்பு இப்பொழுதும் காணலாம். இந்த லிங்கத்தில் தீபாராதனை காட்டும்பொழுது லிங்கத்தின் பின்புறம் ஒளி தெரியும். உத்தரகோசமங்கை ஸ்தலத்தில் மண்ணெடுத்து உருவாக்கிய லிங்கத்திற்கு ராமலிங்கம் என்று பெயர்.

    இதன் மூலம் ராமேசுவரம் தலத்தில் உள்ள லிங்கம் உத்தரகோச மங்கையில் எடுத்து செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.

    இந்த ராம லிங்கத்திற்கு பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தை ஸ்தாபித்து, அந்த லிங்கத்திற்கு காசிலிங்கம் என்று பெயரிட்டு, அதற்கே முதல் பூஜை செய்ய வேண்டும் என்று ராமர் உத்தரவிட்டாராம்.

    பின்னர் ராமர் தேவிப்பட்டனத்தில் கடலில் ஒன்பது கல்களை ஊன்றி தோஷத்தை கழித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருபத்தி மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ராமர் ஊன்றிய ஒன்பது கற்களை விட்டு பகலில் கடல் தண்ணீர் ஓடிவிடும். மாலையில் தண்ணீரில் கற்கள் மூழ்கிவிடும்.

    எனவே தேவிபட்டணம் இருப்பதி நான்காவது தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோசமங்கை இருபத்தைந்தாவது கடைசி தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாட்டில் இருந்து தெற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு இந்து, காசி சென்று ராமேஸ்வரம் தீர்த்தமாடி இறுதியாக கடைசி தீர்த்தம் உத்தரகோசமங்கையில் ஆடினால் காசி யாத்திரை பூர்த்தியாகி சொர்க்கத்திற்குச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகமாகும்.

    • சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.
    • ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் பழம்பெருமை மிக்கது. ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள்.

    ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து. `நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்' எனக் கூறிச் சென்றார்.

    சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.

    சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக் காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது `அக்னி தீர்த்தம்' எனப் பெயர் பெற்றது.

    அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்க வாசகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    பொதுவாக, ஒரு கோவிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் இது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.

    ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும்தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

    சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.

    அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொரள் பெருக்கமும் ஏற்படும்.

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    ×