search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீவு"

    • வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு.
    • வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!

    பாடசாலைச் சிறுவர்களுக்கு விடுமுறை என்றால் மகிழ்ச்சி. "டேய்! நாளைக்குப் பள்ளிக்கூடம் லீவுடா" என்று மகிழ்ச்சி பொங்க நண்பனிடம் கூறுகிறான் இக்காலத்துப் பள்ளிச் சிறுவன்.

    லீவ் என்பது ஆங்கிலச் சொல். இந்தச் சொல் ஆங்கிலேயரின் சார்பினாலே தமிழ் மொழியில் புதிதாகப் புகுந்தது. லீவ் என்னும் சொல்லுக்குத் தமிழில் விடுமுறை நாள் என்று ஒரு சொல்லை வழங்குகிறார்கள்.

    ஆங்கிலேயரின் தொடர்பு இல்லாத பண்டைக் காலத்திலே, தமிழ் சிறுவன் பள்ளிக்கூட விடுமுறை நாளை வாவு என்று சொன்னான்.

    "அடே! நாளைக்கு வாவுடா. பள்ளிக்கூடம் இல்லை" என்று அக்காலத்துச் சிறுவன் கூறினான்.

    வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு. வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!

    உவா என்னும் சொல்லுக்கு நேரான பொருள் விடுமுறைநாள் என்பது அன்று; பௌர்ணமி, அமாவாசை என்பவை தான் அதற்கு நேரான பொருள்.

    அதாவது முழுநிலா நாளுக்கும், நிலா முழுதும் மறைந்த நாளுக்கும் உவா என்பது பொதுவான பெயர். பண்டைக் காலத்தில் பௌர்ணமி, அமாவாசை என்னும் சொற்கள் வழக்கத்தில் இல்லை.

    முழு நிலா நாளை வெள்ளுவா அல்லது வெளுத்த உவா என்றும், நிலா முழுவதும் மறைந்த நாளைக் காருவா அல்லது கறுத்த உவா என்றும் அக்காலத்தில் பெயர் வழங்கினார்கள்.

    பண்டைக் காலத்தில், ஆங்கில ஆட்சிக்கு முன்னே, உவா நாட்களில் அதாவது கறுத்த உவாவாகிய அமாவாசை, வெளுத்த உவாவாகிய பௌர்ணமி நாட்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. ஆகவே, அக்காலத்துப் பள்ளிச் சிறுவர் விடுமுறை நாட்களை உவா நாள் என்று கூறினார்கள். பேச்சு வழக்கில் உவா என்னும் சொல் வாவு என்று திரிந்து வழங்கப்பட்டது.

    -அறம் இளம்பரிதி

    ×