என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிரேதாயுகம்"
- பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார்.
- அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு.
கிரேதாயுகம், திரேதாயுகம் துவபராயுகம், கலியுகம் என்ற 4 யுகங்களுக்கு முன்னர் மணியுகம் ஒன்று இருந்ததாகவும் அதில் தான் அன்னை ஆதிபராசக்தி தோன்றியதாகவும் அதில் தான் அனைத்து கடவுள்களையும் ஆதிபராசக்தி படைத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. இந்த மணியுகத்தில் சிவபெருமானுக்கும், பிரம்மாவுக்கும் தலா ஐந்து தலைகள் இருந்ததாக தலவரலாறு கூறுகிறது.
இதனால் பிரம்மனுக்கு கர்வம் அதிகரித்தது. தவமிருக்கும் முனிவர்களிடம் எல்லாம் சென்று சிவனைப் போல என்னாலும் வரம் தரமுடியும் ஆகையால் சிவனை விடுத்து என்னை நோக்கி தவமிருங்கள் என்று கூறி வருகிறார்.
இதை ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைக்கிறார். ஆகையால் சிவபெருமானிடம் பிரம்மனின் 5 தலைகளில் ஒரு தலையை வலது கையால் கிள்ளி எடுத்து விடுங்கள் என்று கூறுகிறார்.
அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டு அந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்.
ஒருநாள் பார்வதி, பிரம்மன் இடத்திற்கு சென்று வேண்டுமென்றே வணங்குகிறேன் நாதா என்கிறார். இதை கேட்ட பிரம்மன் அனைவருக்கும் படியளக்கும் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதிக்கு தன் கணவர் யார் என்று அறியாமல் என்னைப் பார்த்து "நாதா" என்கிறார் என்று கூறியபடி பலமாக சிரிக்கிறார். இது தான் பிரம்மனின் கர்வத்தை அடக்க சரியான தருணம் என்று பார்வதி, சிவபெருமானிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்.
இதற்காக காத்திருந்த சிவபெருமான் கோபம் கொண்டு பிரம்மனின் 5 தலைகளில் ஒருதலையை தன் வலது கரத்தால் கிள்ளி எடுத்து விடுகிறார்.
வலியால் துடித்த பிரம்மன், சிவனைப் பார்த்து என்னிடம் இருந்து கிள்ளிய தலை உன் கரத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளட்டும், நீ திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து உண்பாய் அது மட்டுமல்லாமல் திருவோட்டில் போடப்படும் உணவுகளை உன் கையில் ஒட்டிக் கொண்டுள்ள என் தலையே சாப்பிட்டு விடும். உன் பசியாற சுடுகாட்டு சாம்பலை உட்கொண்டு காடு மேடெல்லாம் அலைந்து திரிவாய் என்று சாபமிட்டு விடுகிறார்.
சரஸ்வதியும், தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியைப் பார்த்து "உன் அழகு உருவம் மறைந்து வயதான கிழவியாக மாறக்கடவது"அது மட்டுமல்லாமல் கொக்கு இறகை தலையில் சூடிக்கொண்டு உடலெங்கும் கந்தல் ஆடை அணிந்து அலைந்து திரிவாய்" என சாபம் கொடுக்கிறார்.
பதிலுக்கு சிவபெருமானும், பார்வதியும், பிரம்மா மற்றும் சரஸ்வதியை பார்த்து, "உங்கள் இருவருக்கும் தனி கோவில்கள் இன்றி, விழாக்கள் இன்றி இருக்கக் கடவது" என சாபம் இட்டு விடுகின்றனர். அவரவர் சாபத்திற்கேற்ப அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
பார்வதி தேவி பல இடங்களில் அலைந்து திரிந்து திருவண்ணாமலை சென்றடைகிறார். அங்கு துர்வாச முனிவரிடம் தன்நிலையை பற்றி எடுத்துக் கூறுகிறார்.
அனைத்தையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த முனிவர் அம்மனை பார்த்து, "இங்கிருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் 3 முறை மூழ்கி எழுந்தால் சாப விமோசனம் கிடைத்து பழைய உருவம் அடைவீர்கள் பின்பு கிழக்கு நோக்கி சென்று மலையரசன் ஆட்சி செய்யும் மலையரசன் பட்டிணத்திற்குச் (தற்போதுள்ள மேல்மலையனூர்) சென்று அங்கு கோவில் கொள்ளுங்கள். அப்போது சிவபெருமான் அங்கு வருவார். அவருக்கு தங்கள் மூலம் சாப விமோசனம் கிடைக்கும்" என்று வழிவகை கூறுகிறார்.
அதன்படி பார்வதி தேவி பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவுடன் பழைய உருவம் கிடைக்கிறது. பின்பு கிழக்கு நோக்கி தனது பரிவாரங்களுடன் மலையரசன் பட்டிணம் என்கிற மேல்மலையனூருக்கு வருகிறார். வரும் வழியில் இரவாகி விடுகிறது. அதனால் தாயனூர் என்கிற இடத்தில் தங்கி விடுகிறார்.
அப்போது தன்னுடன் வந்துள்ள பூதகணங்கள் பசிக்கிறது என்கின்றன. உடனே அங்கு பனை மரங்கள் வைத்திருப்போரிடம் பதநீர் கேட்கிறார். அவர்கள் தரமறுக்கிறார்கள். உடனே இங்கு பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார். அதன்படி அங்கு பனைமரங்கள் மறைந்து விட்டன (இன்றும் இங்குள்ள ஏரியில் பனை மரங்கள் இல்லாமல் இருப்பதை காணலாம்.)
விடிந்ததும் அங்குள்ள பெரிய ஏரியில் குளிப்பதற்காக தான் கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தை கழற்றி ஓரிடத்தில் வைக்கிறார். பின்பு ஏரியில் இறங்கி நீராடிவிட்டு கரை ஏறும்போது கையில் இருந்த மோதிரம், காலில் இருந்த மெட்டி ஆகியவை காணாமல் போயிருந்ததை அறிகிறார். அதனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நமக்கு ஏற்பட்ட இந்த நிலை எந்த மக்களுக்கும் நேரக்கூடாது என நினைத்து இந்த ஏரியில் விழல்கள் (புற்கள்) முளைக்காமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிட்டு விடுகிறார். அன்றில் இருந்து இன்று வரை இங்குள்ள ஏரியில் விழல்கள் (உயரமாக வளரும் ஒரு வகை புல்) வளருவதில்லை.
தன்னுடைய கூந்தலை துடைக்கும்போது அதில் இருந்து ஒரு சடைமுடி கீழே விழுந்து ஒரு ஆண் உருவம் எடுத்து நிற்கிறது. அம்மன் அவரை ஆசிர்வதித்து "நீ இக்கரையில் ஜடாமுனீஸ்வரனாக கோவில் கொண்டு விளங்குவாய். நான் தங்க போகும் மலையரசன் பட்டிணம் (மேல்மலையனூர்) என்கிற இடத்தில் எனக்கு பூஜை செய்பவர்களுக்கு குலதெய்வமாக இருந்து அருளாசி வழங்குவாய் என்று கூறிவிட்டு தான் தங்கிய இடத்திற்கு சென்றார்.
தான் கழற்றி வைத்த ஆரம் ஒரு பெண்ணாக உருமாறி அம்மனை வணங்கி நின்றது. அம்மா, இன்றில் இருந்து நீ! முத்தாரம்மன் என்ற பெயரில் அருளாசி வழங்குவாய். எனக்கு மேல்மலையனூரில் பூஜை செய்பவர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் உனக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள் என்று ஆசி வழங்கி விட்டு மலையரசன் பட்டிணத்துக்கு (மேல்மலையனூர்) சென்று அங்குள்ள பூங்காவனத்தில் புற்றில் பாம்பாக உருமாறி நின்றார்.
(அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு) திடீரென புற்று உருவானதைக் கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த வீரன், சூரன், உக்கிரன் (இவர்கள் மீனவ இனத்தை சேர்ந்தவர்கள்) என்பவர்கள் அஞ்சி நடுங்கினர். அங்கு பார்வதிதேவி தோன்றி மகன்களே பயப்படாதீர்கள், எனக்கு நீங்கள் தினமும் பூஜை செய்து வாருங்கள். உங்கள் வம்சத்தை நான் காப்பேன் என்று கூறி மறைந்தார்.
அன்றில் இருந்து அந்த புற்றின் மீது மழை, வெயில்படாமல் இருக்க 4 குச்சிகளை நட்டு அதன் மீது வேப்பிலை பரப்பி பந்தல் போட்டனர். புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு வந்தனர். இதைப் பார்த்த அரண்மனைக் காவலர்கள் மலையரசனிடம் தெரிவிக்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த மன்னன் அந்த புற்றை அகற்றுமாறு கட்டளை இட்டான்.
முதலில் 2 பேர் சென்று புற்றை இடிக்க கடப்பாரையை ஓங்கினர். அவர்களை 2 பூதங்கள் விழுங்கி விட்டன. அங்கிருந்த அரண் மனைக்காவலர்கள் ஓடிச்சென்று மன்னனிடம் நடந்ததைக் கூறினர்.
அவன் மீண்டும் அரண்மனைக காவலர்கள் அனைவரையும் புற்றை இடிக்க அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று புற்றை இடிக்க முயற்சித்த போது மீண்டும் பூதங்கள் தோன்றி தகவல் சொல்ல ஒரு காவலனை தவிர அனைவரையும் விழுங்கி விட்டது. அந்த காவலன் ஓடிச்சென்று நடந்தவற்றை கூறினான்.
மன்னனே நேரடியாக வந்து புற்றை இடிக்க முற்பட்ட போது சகோதரர்கள் வீரன், சூரன், உக்கிரன் மூவரும் மன்னரை வணங்கி நம்மை காப்பதற்காகவே ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி வந்துள்ளார். தாங்களும் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை வைத்து அம்மனுக்கு தொண்டு செய்யுங்கள் என்று கூறினர்.
அதன்படியே மன்னரும் கடவுள் நம்பிக்கை கொண்டு நான்கு குச்சிகளை கொண்ட பந்தலை எடுத்து விட்டு கல்தூண்களைக் கொண்டு மண்டபம் எழுப்பினார். இன்றும் புற்றுக்கு மேல் உள்ள 4 கல்தூண் மண்டபம் மலையரசன் கட்டிய மண்டபம் என்றே முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள கோபுரம், முன்பு உள்ள கல்மண்டபம் ஆகியவை முற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டதென்று அதன் கட்டிட அமைப்பு மற்றும் கல்தூண்களில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பல இடங்களில் அலைந்து திரிந்த சிவபெருமானிடம், மகாவிஷ்ணு, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி மேல்மலையனூரில் குடிகொண்டுள்ளார் அங்கு சென்றால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதன்படி சிவபெருமான் மேல்மலையனூருக்கு வருகிறார்.
மகாவிஷ்ணு அவரின் வருகையை தன் தங்கையான பார்வதிதேவியிடம் சிவபெருமான் இங்கு வந்து பிச்சை கேட்கும்போது "அவரை உள்ளே தங்க வைக்காமல் மயானத்தில் தங்குமாறு கூறிவிடு".
பின்பு நவதானியங்களைக் கொண்டு சுண்டல்,கொழுக்கட்டை ஆகியவற்றை செய்து அதை பிசைந்து 3 கவளங்களாக (உருண்டைகள்) ஒரு தட்டில் வைத்துவிடு, மறுநாள் காலையில் சிவன் தங்கி இருக்கும் மயானத்திற்கு அந்த உணவை எடுத்துச் செல், முதல் உருண்டையை சிவன் கையில் உள்ள திருவோட்டில் போடு, அதை அந்த பிரம்மனின் தலை சாப்பிட்டு விடும் 2-வது உருண்டையையும் அதில் போடு அதையும் அந்த தலை சாப்பிட்டு விடும் 3-வது உருண்டையை திருவோட்டில் போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்துவிடு, உணவின் சுவையில் மயங்கிக் கிடக்கும் பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து கீழே இறங்கி அந்த உணவை சாப்பிடத் தொடங்கும் அப்போது நீ! ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை உன் வலது காலால் மிதித்து விடு என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி அம்மனும் செய்வதாக தெரிவிக்கிறார்.
சிவபெருமான் அம்மன் குடிகொண்டுள்ள இடத்திற்கு வந்து "தாயே பிட்சாந்தேகி" என்று கேட்கிறார். உடனே வெளியில் வந்து விநாயகரிடம், உன் தந்தை இங்கு வந்துள்ளார். அவருக்கு சாபவிமோசனம் கிடைக்க இருப்பதால்
நீ உட்காரமல் நின்று கொண்டு காவல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படியே விநாயகரும் ஒப்புக்கொண்டு நின்றிருந்தார். பின்பு அம்மன், சிவபெருமானிடம் உணவு சமைத்து எடுத்து வரும்வரை அருகில் உள்ள மயானத்தில் தங்கி இருக்குமாறு கேட்கிறார். சிவபெருமானும் ஒப்புக்கொண்டு மயானம் செல்கிறார்.
அங்கு இருந்த சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசிக் கொள்கிறார். பின்பு பசிக்காக ஒரு பிடி சாம்பலை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். ஆனால் பிரம்மனின் தலை அந்த சாம்பலை உட்கொள்ளவில்லை. தன் அண்ணனான மகாவிஷ்ணு கூறியபடியே பார்வதி தேவி 3 உருண்டைகளை தட்டில் வைத்து மயானம் நோக்கி புறப்பட்டுச்செல்கிறார். அங்கு சென்ற அவர் தட்டில் இருந்த முதல் உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுகிறார்.
அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடுகிறது. 2-வது உருண்டையையும் திருவோட்டில் போடுகிறார், அதையும் அந்த தலை சாப்பிட்டு விடுகிறது. 3-வது உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுவது போல் பாவனை செய்து கீழே இறைத்து விடுகிறார்.
உணவின் சுவையில் மயங்கி கிடந்த பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து சிவபெருமான் கையைவிட்டு கீழே இறங்கி உணவை தேடித்தேடி சாப்பிடத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பார்வதி தேவி ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை தன் வலது காலால் மிதித்தார். பிரம்மனின் தலை, வலியால் துடித்தும் விடாமல் அம்மன் தன் காலில் அழுத்தினார்.
சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதால் ஆனந்த தாண்டவம் ஆடியபடி சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார். ஆங்கார உருவம் எடுத்ததால் பார்வதி தேவியை அங்காளபரமேஸ்வரி என்றும், ஆனந்தாயி என்றும் பூங்காவனத்தில் தங்கியதால் பூங்காவனம் என்று அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் ஆனந்ததாண்டவம் ஆடியதால் தாண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் வந்து இங்கு வந்து தங்கிய இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரிய உருவமாகவும் அம்மனின் வலது பக்கத்தில் சிவபெருமான் (தாண்டேஸ்வரராக) ரிஷப வாகனத்தில் அமர்ந்து சிறிய உருவமாக காட்சி தருகிறார்கள். கருவறையில் அம்மனும், சிவபெருமான் உருவ வடிவத்தில் (மற்ற இடங்களில் லிங்க வடிவில்) அருள்பாலிப்பது வேறு எங்கும் காணமுடியாத காட்சி ஆகும்.
ஆவேசமடைந்த அங்காள பரமேஸ்வரி அம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை.கடைசியில் மகாவிஷ்ணுவை அணுகுகின்றனர். அவரும் அழகான தேரை உருவாக்கி அதில் அமர வைத்து பூங்காவனத்தை வலம் வந்தால் அம்மனின் சினம் குறையும் என ஆலோசனை கூறுகிறார். அவர்களும் ஒப்புக்கொண்டு செல்கின்றனர்.
அதன்படி தேவலோக சிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து தேர் உருவாக்க சொன்னார்கள். அதன்படி 4 வேதங்கள் தேர் சக்கரங்களாகவும், தேவர்கள் ஒரு பகுதியினர் தேரின் அடிபீடமாகவும் தேர்க்கால்களாகவும், சங்கிலியாகவும் மாறுகின்றனர். மேகங்கள் தேர் சீலைகளாகவும், மகாவிஷ்ணு தேர் கலசமாகவும், குடையாகவும் மாறி அழகான தேராக காட்சி தருகின்றனர்.
இதை பார்த்த அங்காளபரமேஸ்வரி அம்மன் அதன் மீது ஏறி அமர்கிறார். மற்ற தேவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து அம்மன் குடிகொண்டுள்ள பூங்காவனத்தை வலம் வந்து நிலை நிறுத்துகின்றனர். அம்மனின் சினம் முற்றிலும் தனிந்து விடுகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அம்மனும் அவர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
இதை நினைவுபடுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வாகை, பனை புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு புதியதாக தேர் உருவாக்கப்பட்டு மாசி பெரு விழாவின் 7-ம் நாள் வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்