search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஹாபுரி"

    • அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
    • நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள்.

    காணிப்பாக்கம் விநாயகர் மகிமை

    காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது.

    அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது, ஒருவர் பார்வையற்றவர், முன்றாமவரால் கேட்க இயலாது.

    அவர்கள் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்றவரும் பார்வையற்றவரும் ஏற்றக்காலில் ஏறி நின்று மிதிக்க, ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.

    வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அதைப்பார்த்த அவர் பயந்து "ஐயோ" என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர். செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார்.

    கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர்.

    உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி பெறுகிய இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.

    மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து, வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம்.

    அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.

    "ஸ்ரீகாணிப்பாக்கம்" வரசித்த விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த "சத்தியப்பிரமாணம்" இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார்.

    இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம்.

    சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை.

    இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

    விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.

    நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப்பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்!

    விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.

    ×