search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புராணகதைகள்"

    • பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான்.
    • பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார்.

    ஒருசமயம் அரசர் குலத்தை சேர்ந்த தானாவதி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று சொல்லி பிரம்மதேவனை நோக்கி தவம் மேற்கொண்டார். அந்த கடும் தவத்தினை பார்த்த பிரம்மதேவர் தானாவதிக்கு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தினை அளித்தார்.

    பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான். அனைத்து கலைகளையும், வேதங்களையும் கற்ற மகிஷாசுரன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். மகிஷாசுரனின் தவத்தை கண்டு அவன் முன் தோன்றிய சிவபெருமான் அவன் கேட்ட வரங்களை எல்லாம் அளித்தார்.

    மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணமே வரக்கூடாது. அதுமட்டுமில்லாமல் பெண் வயிற்றில் பிறக்காத பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கு சிவபெருமானும் தந்தோம் என்று அருளினார்.

    சிவபெருமானிடம் வரத்தை வாங்கிய மகிஷாசுரன் இனி தனக்கு மரணம் நேர வாய்ப்பில்லை என்று ஆணவத்தில் மகேந்திரிகிரி பர்வதம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். சுயநலத்துடன் மகிஷாசுரன் பல கொடுமையான செயல்களை எல்லாம் செய்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் இறைவனாகிய சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இந்த சமயத்தில் கயிலாயத்தில் பார்வதி தேவி, விநாயகர், முருகன் இருக்கும்போது சிவபெருமான் ஒரு நாள் திறந்த கண்களுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சிவபெருமானின் ஆழ்ந்த தியானத்தை கண்ட விநாயகர் தனது அன்னையான பார்வதிதேவியிடம் தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார். தியானம் என்றால் கண்களை மூடிக்கொண்டு தானே செய்வார்கள்.

    இதைக்கேட்ட பார்வதி தேவி, விநாயகரிடம் உனது தந்தையின் கண்ணொளியில் தான் அண்டசராசரங்கள் இயங்குகிறது. உன்னுடைய தந்தை கண்களை மூடினால் இந்த அண்டமும் இருண்டுபோகும் என்று கூறினாள். அப்போது குறுக்கிட்ட முருகப்பெருமான் தாயிடம் அப்படியானால் தந்தை ஒருமுறை கண்களை மூடி காட்ட சொல்லுங்கள் என்றார். உலகம் எப்படி இருட்டாகும் என்பதை நானும் பார்க்கிறேன் என்றார் முருகன்.

    இதை எப்படி தந்தையிடம் சொல்வது என்று சொல்கிறார் விநாயகர். உடனே பார்வதிதேவி அதை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டாம். நானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு பார்வதிதேவி, சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூடினார். உடனே இந்த அகில உலகமும் இருளில் மூழ்கியது. சிவபெருமான் சக்தியின் கைகளை விலக்கிக்கொண்டு கண்களை கோபத்துடன் திறந்தார். என்ன விளையாட்டு இது, என்று கோபத்துடன் கேட்டார் சிவபெருமான்.

    சிவபெருமானின் கோபத்தை கண்ட பார்வதிதேவி அப்படியே குனிந்து நின்றார். பிள்ளைகள் கேட்டதனால் தான் நான் இவ்வாறு செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மிகுந்து கோபத்துடன் பார்வதிதேவியை பார்த்து நீ செய்த செயலுக்கு கண்டிப்பாக வருந்தியே ஆக வேண்டும். நீ இனி நாககன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமான், பார்வதிதேவிக்கு சாபம் கொடுத்துவிட்டார்.

    இதைகேட்டதும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து இந்த சிறிய தவறுக்கு மானிடப்பிறப்பா? அதுவும் நாகத்தின் வழியாகவா... என்று கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு அந்த இடத்தைவிட்டு எழுந்து நகரமுற்பட்டார் பார்வதிதேவி. உடனே சிவபெருமான் கடுமையான கோபம் கொண்டு நெற்றிக்கண்களை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியை எரித்து 8 பிண்டங்களாக்கியது.

    உடனே அந்த 8 பிண்டங்களையும் சிவபெருமான் தனது கையில் எடுத்து பாதாள உலகத்தில் நாககன்னி என்பவர் பிள்ளைவரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான் தன்னிடம் இருந்த ௮ பிண்டங்களையும் சாப்பிடுமாறு நாகக்கன்னியிடம் கொடுத்தார். அதை சாப்பிட்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது 8 முட்டைகளாக உருமாறி வெளிவந்தது.

    உடனே அந்த 8 முட்டைகளையும் அடைகாத்து வந்தார். நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் 8 முட்டையில் இருந்து 8 பெண்குழந்தைகள் பிறந்தது. முதலாவது பெண் குழந்தை முத்துமாரி என்ற முத்தாரம்மன் என்று பக்தர்கள் பெருமையாக அழைப்பார்கள்.

    இரண்டாவதாக பிறந்தவர் தான் மாகாளி என்ற பத்ரகாளி. மூன்றாவதாக மூன்று முகங்களுடன் பிறந்த முப்பிடாதி. மூன்று தலைகள் இருந்ததால் இவரை முப்பிடறி என்று அழைக்கப்பட்டார். இதுவே காலப்போக்கில் மறுவி முப்பிடாதி என்று அழைக்கப்படார்.

    நான்காவதாக பிறந்தவர் தான் உலகளந்தாள் என்ற உலகம்மன். உலகநாயகி என்று அழைப்பார்கள். ஐந்தாவதாக பிறந்தவர் அரியநாச்சி என்ற அங்கயர்கன்னி. இவர் நாகாத்தம்மனாகவும், நாகக்கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். ஆறாவதாக பிறந்தவர் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி. இவர்களை செல்லியம்மன் என்று அழைக்கின்றனர். ஏழாவதாக பிறந்தவர் சந்தனமாரி. இவர் சடைமாரி, ஆகாசமாரி என்றும் அழைக்கின்றனர். கடைசியாக பிறந்தவர் காந்தாரி.

    இந்த பிள்ளைகள் 8 பேரையும் நாகக்கன்னி மிகுந்த அன்போடும், அரவணைப்புடனும் வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆனார்கள். வளர்ந்து வந்த பிள்ளைகள் அனைவரும் அவர்களுடைய அம்மா நாகக்கன்னியை பார்த்து அம்மா என்னுடைய முகமும், உங்களுடைய முகமும் வேறுபட்டு இருக்கிறதே? ஏன் அம்மா என்று கேட்டனர்.

    உடனே நாகக்கன்னி அந்த 8 பிள்ளைகளையும் பார்த்து எல்லாம் அந்த சிவபெருமானின் செயல் என்று கூறினார். உடனே அந்த பெண்களும் நம்மை ஏன் தாயை போல் நாகக்கன்னியாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைத்தார் இந்த சிவபெருமான். இந்த நாககுலத்தில் மனிதபிறப்பு எடுத்து என்ன பயன்பெறப்போகிறோம். அதை அந்த சிவபெருமானிடமே கேட்போம் என்று அக்காள், தங்கை 8 பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் புரியத்தொடங்கினர்.

    அஷ்டகாளிகளின் தவத்தை பார்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் தோன்றினார். அஷ்டகாளிகள் சிவபெருமானிடம் தங்களுடைய பிறப்பு குறித்து கேட்டனர். அதற்கு சிவபெருமான் மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டுவரக்கூடிய மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தான் நீங்கள் படைக்கப்பட்டீர்கள் என்று கூறினார்.

    உடனே அந்த அஷ்டாகாளிகள் அனைவரும் சிவபெருமானிடம் நாங்கள் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று அந்த மகிஷாசுரனை வதம் செய்த பிறகு எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணம்முடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டார்.

    அதன்பிறகு மகிஷாசுரனை அழிக்கக்கூடிய வகையில் அந்த 8 பேருக்கும் அனைத்து வரங்களையும் வழங்கினார் சிவபெருமான். சிவபெருமானின் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வதமலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் கடுமையாக சண்டை நடந்தது. தனித்தனியாக நின்று போரிடுவதைவிட ஒன்றுசேர்ந்து நின்றால் தான் பலம் அதிகம் என்று அஷ்டகாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சாமூண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    மகிஷாசுரன் இறக்கும்போது சாமூண்டீஸ்வரியை பார்த்து தாயே என்னை மன்னித்துவிடுங்கள். வாழும் வரை மனிதகுலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி தாயே உம்மை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

    இதைகேட்டதும் ஆங்கார ரூபினியான சாமூண்டீஸ்வரி அதன்பிறகு சாந்த சொரூபினியாக மாறினார். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக மாற்றி தன்னுடைய வாகனமாக்கிக்கொண்டார். அன்றில் இருந்து அஷ்டகாளிகள் 8 பேரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டார்.

    அதன்பிறகு ஒருநாள் அஷ்டகாளிகள் 8 பேரும் கயிலாயம் சென்றனர். கயிலாயம் விட்டு வந்த அஷ்டகாளியர் பொதிகைமலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தி கோவில் கொண்டு அப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    • உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர்.
    • கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய தலம் தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.

    அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர். தற்போது உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேப்பமரக்காற்று மணமணக்க, பனைமரக்காற்று சலசலக்க வெண்மணல்கள் கம்பளம் விரிக்க, கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    பொதுவாக சிவலிங்கத்தின் மேற்பாகம் தான் சிவபெருமான். லிங்கம் பொருந்தி இருக்கக்கூடிய ஆவுடை பாகம் அம்பாளுடையது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வீற்றிருக்ககூடிய உவரி சுயம்புலிங்க சுவாமிக்கு ஆவுடை பாகம் இல்லை. ஆவுடை பாகம் இல்லாத இந்த சிவபெருமானை ஆதிபரம்பொருள் என்ற பொருளில் பெரியசாமி என்று அழைத்தனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் உலகையே காக்கும் பரமேஸ்வரராகிய சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக வந்தார். தொடக்க காலத்தில் உவரி மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக படர்ந்து இருந்ததால் இந்த பகுதியை கடம்பவனம் என்று அழைத்தனர்.

    ஒரு சமயம் கோட்டபனை என்ற ஊரில் இருந்து பால் விற்பதற்காக தினமும் உவரி வழியாக செல்வது வழக்கம். தற்போது சுவாமி இருக்கக்கூடிய இடத்தின் அருகே வரும்போது கால் இடறிவிழுந்துகொண்டே இருந்தாராம். எனவே கால் இடற காரணமாக இருந்த கடம்பவேரை வெட்டி வீழ்த்தும் போது ரத்தம் பீரிட்டு வந்தது. அங்கிருந்த அனைவரும் பார்த்து பயந்து போனார்கள்.

    உடனே அசரிரீயாக தான் இங்கு வீற்றிருப்பதாகவும், இங்கு தனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொன்னார். உடனே அங்கு இருக்கக்கூடிய பக்தர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அந்த இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவலிங்கத்தின் தலையில் வெட்டுபட்டு ரத்தம், வழிந்துகொண்டு இருந்தது.

    அப்போது மீண்டும் ஒரு அசரிரீ ஒலித்தது. அன்பர்களே... ரத்தம் வழியும் இடத்தில் சந்தனக்கட்டையால் சந்தனம் அரைத்து அந்த சந்தனத்தை வெட்டுபட்ட இடத்தில் பூசுங்கள். அப்போது ரத்தம் வழிவது நின்றுவிடும். உங்கள் பல தலைமுறைகளும், நம்மை அண்டியவர்களும் நோய்நொடிகள் அண்டாது வாழ்வார்கள் என்று சொன்னது.

    அதன்பிறகு அடியவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதேஇடத்தில் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினர். முதலில் பனை ஓலையில் கோவில் எழுப்பினார்கள். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு முன்பு முதலில் காவல் தெய்வமாக இருக்கக்கூடிய சிரட்டை பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வீற்றிருக்கக்கூடிய சுடலைமாடன் சுவாமிக்கு சிதறுதேங்காய் உடைத்த பிறகு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் தென்மேற்கில் கன்னிவிநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் முதலில் கடலில் நீராடிவிட்டு பின்பு ஆலயத்தின் பின்புறத்தில் இருக்கக்கூடிய தெப்பத்தில் நீராடிய பின்னர் கன்னி விநாயகரை வழிபட்ட பின்னர் தான் மூலவரான உவரி சுயம்புலிங்க சுவாமியை வழிபட வேண்டும்.

    இங்கு வரக்கூடிய ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணிய தடைசெய்யப்பட்டுள்ளது. கன்னிவிநாயகருக்கு கண்டிப்பாக சிதறுதேங்காய் உடைக்க வேண்டும். உவரி சுயம்புலிங்க சுவாமியின் சன்னதியில் சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படும். அதுவும் உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சாற்றிய சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் 48 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி ஈசனாகிய சிவபெருமானை வழிபட்டு கருவறை தீபத்திற்கு நெய் சேர்த்து அங்கு பிரசாதமாக தரக்கூடிய சந்தனத்தை வாங்கி உண்டுவந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். அடுத்ததாக உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் வெளிப்புறத்தில் தனி சன்னதியில் முன்னோடி சுவாமி இருக்கிறார்.

    இவர் பைரவரின் சொரூபமாக அருள்பாலிக்கிறார். முன்னோடி சுவாமி கோவிலை அடுத்து தனி கோவிலில் பிரம்மசக்தி அம்மன் அருள்பாலிக்கிறார். பிரம்மசக்தி அம்மனை பஞ்சமி, புதன்கிழமை, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, விசாகம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களில் கருவறை தீபத்திற்கு நல்லெண்ணெய் ஊற்றி வெண் தாமரை மலர்கொண்டு பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    பிரம்மசக்தி சன்னதியை தொடர்ந்து சிவனணைந்தபெருமாள் சன்னதியும் உள்ளது. சிவபெருமானுடன் பெருமாள் பெண் உருவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்தபெருமாள் சன்னதியில் உள்ள மரத்தின் கிளையில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    அதன்பிறகு பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் போன்ற சன்னதிகளும் இந்த கோவிலில் இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய இசக்கி அம்மனுக்கு எண்ணெய் மஞ்சனம் கலவையை சாற்றி வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள். எண்ணெய் மஞ்சனம் என்பது இசக்கியம்மனுக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும்.

    ஆலயத்தின் மேற்கு திசையில் ஆலயடி சாஸ்தா கோவில் உள்ளது. இங்கேயும் கண்டிப்பாக சென்று வழிபட வேண்டும். இங்கே வன்னிமரத்தின் அடியில் பூரணபுஸ்கலையுடன் சாஸ்தா அருள்பாலிக்கிறார். இங்கு சித்ராபவுர்ணமி, பங்குனி உத்திரம், ஆடி அமாசாசை, விசாக நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் எல்லோரும் பொங்கலிட்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர விழா என்ற சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இரவு வாகனபவனி நடக்கும். தைப்பூச நாளில் இங்கு தேரோட்டம் நடைபெறும். தேரோட்டம் முடிந்து மறுநாள் பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு தெப்பத்திருவிழாவு சிறப்பாக நடைபெறும்.

    அதுமட்டுமில்லாமல் பிரதோசம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளிலும், வாராந்திர திங்கட்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. பொதுவாக சிவன் கோவில்களில் சூரியபூஜை ஓரிரு நாட்கள் இருக்கும். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரியபூஜை நடக்கிறது.

    அதாவது மார்கழி மாதம் முழுவதும் இந்த தலத்தில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை சூரிய பகவான் வழிபடுகிறார். சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் காலையில் சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு துன்பங்கள் எல்லாம் நீங்கி வாழ்வில் வளம் வீச வளமும், நலமும் பெறுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    • அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான்.
    • சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள்.

    பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது மார்க்கண்டேய முனிவர் திரவுபதிக்கு இந்த கதையை எடுத்துக்கூறுகிறார். அந்த கதையை நாம் இன்று தெரிந்துகொள்ளலாம்.

    ஒரு ஊரில் மத்திரநாடு என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் அசுபபதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லை. எனவே சாவித்ரி என்ற பெண் தெய்வத்தை வழிபட்டார். அந்த சாவித்திரி என்ற பெண் தெய்வத்தின் ஆசியாலும், சூரியபகவானின் அருளாளும், அசுபபதி மன்னனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தைக்கு சாவித்ரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சாவித்ரி சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்துவிளங்கினாள். அதேநேரத்தில் சாய்பு நாட்டை துய்மத்சேனன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னனுக்கு ஒரு மனைவியும், சத்தியவான் என்ற மகனும் இருந்தனர்.

    சத்தியவான் சிறுவதில் இருந்தே மிகுந்த பேரழகுடனும், வீரமுடனும் இருந்தார். ஒரு நாள் சாய்பு நாட்டு மன்னன் துய்மத்சேனனை எதிரிநாட்டு மன்னர்கள் போர்தொடுத்து வந்தனர். அந்த போரில் தோல்வி அடைந்த துய்மத்சேனன் எதிரிகளிடம் தன்னுடைய நாட்டை பறிகொடுத்ததோடு வாழவே வழி இல்லாமல் தன்னுடைய மனைவியையும், மகன் சத்தியாவானையும் அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றனர்.

    சத்தியாவனும், அவருடைய அப்பா, அம்மாவும் காட்டில் வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சத்தியவானின் அப்பாவிற்கும், அம்மாவிற்கு கண்பார்வை பறிபோனது. தினமும் சத்தியவான் காட்டில் கிடைக்கக்கூடிய விறகுகளை எடுத்து அதனை விற்று பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்.

    இப்போது சத்தியவானும், சாவித்திரியும் பருவ வயதை அடைந்து இருந்தனர். ஒரு நாள் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அனுமதி கேட்க அவரும் சம்மதிக்கவே உடனே தனது தோழிகளுடன் சாவித்ரி காட்டை சுற்றிப்பார்க்க சென்றார்.

    தோழிகளுடன் காட்டை சுற்றிவரும்போது காட்டில் விறகுவெட்டிக்கொண்டிருந்த சத்தியவானை பார்த்தார். அதுமட்டுமல்லாமல் சத்தியவான் தனது தாய்-தந்தைக்கு ஆற்றிய தொண்டை கண்டு அவருடைய மனதை பறிகொடுத்தார். சாவித்ரிக்கு, சத்தியவான் மீது காதல் வந்தது.

    உடனே சாவித்ரி அரண்மணைக்கு சென்றதும் காட்டில் நடந்ததை தனது தந்தையிடம் கூறினார். அதுமட்டுமல்லாமல் சத்தியவானை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் கூறினார். அப்போது அங்கு நாரதமகரிஷி வந்தார். நாரதர் நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு சாவித்ரியின் தந்தையிடம், அரசே சத்தியவான் அர்ப்ப ஆயுள் உள்ளவன் என்று சொன்னதோட மட்டுமில்லாமல் இன்றில் இருந்து 12 மாதங்களில் அவன் இறந்துவிடுவான் என்றும் கூறினார் நாரதர்.

    இதைகேட்டதும் மன்னன் மிகுந்த அதிர்ச்சியுடன் சாவித்திரியை பார்த்தார். ஆனால் சாவித்ரி மனதால் நினைத்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சாவித்ரி அப்பாவை பார்த்து அப்பா... நான் சத்தியவானை பார்த்ததுமே எனது மனதில் கணவனாக நினைத்துவிட்டேன். மணந்தால் சத்தியவானை தான் மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

    மகளின் உறுதியை கண்ட அசுபபதி அரசனும் திருமணத்திற்கு சம்மதித்தார். சத்தியவானுக்கும், சாவித்ரிக்கும் திருமணம் நடந்தது. அப்போது நாரத மகரிஷி சாவித்ரியிடம் சில நோன்பு முறைகளை சொல்லிக்கொடுத்தார். சாவித்ரி நீ உள் அன்புடன் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று கூறினார் நாரதர்.

    இப்போது திருமணம் முடிந்ததும் அரண்மணையை விட்டுவிட்டு சாவித்ரி, சத்யவான் கூட காட்டில் சென்று வாழ கிளம்பினாங்க. சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று தெரிந்தும் சாவித்ரி அதனை தனது கணவனிடம் தெரிவிக்கவே இல்லை. இப்படி நாட்கள் சென்றுகொண்டிருந்தன. இன்னும் சத்தியவான் இறப்பதற்கு 3 நாட்களே இருந்தன.

    3 நாட்களும் சாவித்ரி உணவும், உறக்கமும் இன்றி கடுமையாக விரதம் இருந்தார். 3-வது தனது கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி கண்ணீர்மல்க பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். சத்தியவான் இறக்கும் நாளும் வந்தது. சத்தியவான் இறக்கும் நாள் அன்று விறகு வெட்ட காட்டிற்கு சென்றுகொண்டிருந்த சத்தியவானிடம், சாவித்ரி இன்றைக்கு நானும் உங்களுடன் விறகு வெட்ட வருகிறேன் என்று கூறினார்.

    சத்தியவானும், சாவித்ரியை தன்னுடன் காட்டிற்கு அழைத்துச்சென்றார். சாவித்ரியை ஒரு மரத்தின் நிழலில் உட்கார வைத்துவிட்டு சத்தியவான் மட்டும் விறகுவெட்ட கிளம்பினார். கொஞ்சநேரத்திலேயே விறகுவெட்டிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு பயங்கரமான தலைவழி வந்தது. உடனே சத்தியவான், சாவித்ரி அருகில் வந்து அவரது மடியில் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் சத்தியவானின் உயிர் பிரிந்தது.

    அங்குவந்த எமதர்மராஜா அவரை கவர்ந்து செல்ல வந்தார். பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எமதர்மன் கண்ணுக்கு தெரிந்தார். எமதர்மனை வணங்கிய சாவித்ரி தாங்கள் யார்? என்று கேட்டார். நான் எமதர்மராஜா என்று கூறினார். உடனே எமன் பெண்ணே உயிரிழந்த உன் கணவனின் உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி என்று கூறினார் எமன். உடனே சாவித்ரி அங்கிருந்து விலகி நின்றார்.

    சாவித்ரி, எமதர்மராஜாவை பார்த்து ஒரு அன்பு கணவனையும், அவனுடைய அன்பு மனைவியையும் உங்களின் மாறாத விதி பிரிக்கவே கூடாது என்று எமதர்மராஜாவிடம் வேண்டினார். உடனே எமதர்மராஜாவும் சாவித்ரியை பார்த்து உத்தமியே உனது கணவன் சத்தியவானின் உயிரை தவிர்த்து 3 வரங்களை கேள் தருகிறேன் என்று கூறினார் எமதர்மன்.

    அதற்கு சாவித்ரி எமர்தர்மனிடம் தனது மாமனார்-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைக்க வேண்டும் என்றும், தனது தந்தைக்கு பிறகு அரசாள்வதற்கு ஆண்வாரிசு இல்லாததால் அவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்றும், போரில் பின்வாங்காத வீரமுடைய புதல்வர்கள் எனக்கு மகனாக வரவேண்டும் என்றும் கேட்டார்.

    சாவித்ரியின் சாமர்த்தியமான பேச்சைக்கேட்ட எமதர்மன் சிறிது யொசிக்காமல் அப்படியே ஆகட்டும். தந்தேன்.... என்று கூறிவிட்டு சத்தியவானின் உடலை எடுத்துக்கொண்டு எமலோகத்திற்கு சென்றார். சாவித்ரியும், எமதர்மராஜாவை தொடர்ந்து பின்னாடியே போனார்.

    எமதர்மராஜா, சாவித்ரியின் பொறுமையை கண்டு மீண்டும் மனம், இழகி சாவித்ரியை பார்த்து இன்னும் உனக்கு வரம் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு சாவித்ரி, எமதர்மராஜா... ஏற்கனவே நீங்கள் தந்த வரத்தில் புத்திரபாக்கியம் எனக்கு என் கணவன் இல்லாமல் எப்படி கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு எமதர்மராஜா தந்தேன்... என்று கூறிவிட்டு மறைந்தார்.

    அதன்பிறகு சத்தியவான் உறக்கத்தில் இருந்து எழுந்தவன்போல எழுந்தார். சாவித்ரி பெற்ற வரத்தின்படி சாவித்ரிக்கும் அவரது மாமா-அத்தைக்கு இழந்த நாடும், கண்பார்வையும் கிடைத்தது. சாவித்ரியின் தந்தைக்கு ஆண் வாரிசும் கிடைத்தது. சத்தியவானும், சாவித்ரியும் வீரமிக்க புதல்வர்களை பெற்று பல்லாண்டுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

    இந்த கதையில் நாம் புரிந்து கொண்டது என்ன என்றால் சத்தியவான், சாவித்ரியின் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் எமதர்மன் கூட ஆற்றல் அற்றவனாக மாறிவிடுவான் என்பதற்கு சத்தியவான், சாவித்ரி கதை சான்றாக உள்ளது.

    ×