search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையாள்வது எப்படி"

    • பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினையை தடைக்கற்களாக பார்க்கிறார்கள்.
    • மாற்றி சிந்தித்தால் அவை வெற்றி படிக்கட்டுகளாக மாறும்.

    `சிஸ்டம் சரியில்லை...' - இந்த வார்த்தையை வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பல பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையே தடைக்கற்களாக பார்க்கிறார்கள். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப்படிக்கட்டுகளாக மாறும்.

    தன்னை அறிதல்:

    நம்மால் முன்னேற முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்லை என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்ற வேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள `பிளஸ், மைனஸ்' விஷயங்களை மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை ஒதுக்கி விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்ய வேண்டும்.

    யதார்த்த பார்வை:

    பிரச்சினைகளை அணுகுவதில் ஆண்களை விடப் பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்சினைக்கான வலியை அதிகரிக்க செய்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரை தருவதற்கான கருவறையே, பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக் கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. எனவே தான் சந்திக்கும் பிரச்சினைகளை பெண்கள் எதார்த்தமாக அணுகலாம்.

    திறனை மேம்படுத்துதல்:

    அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், சிலருக்கு உடனடியாக டென்சன் தொற்றும். வேலையில் தங்களை கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்ற அச்சம் எட்டிப்பார்க்கும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும், அதனை நிறைவேற்றுவதற்கான எளிய வழிகளையும் பற்றி சிந்திப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தனித்திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    சக மனிதரை புரிந்துகொள்ளுதல்:

    திருமணம் பெண்ணின் வாழ்வில் முக்கியமான தருணம். தன் வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், புகுந்த வீட்டில் தனக்கான குடும்பத்தின் தலைவியாக பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போது எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களுமே பிரச்சினைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம் கூட பெரிதாக மனதை காயப்படுத்தும். புதிய மனிதர்களை விருப்பு, வெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் சக மனிதர்களை புரிந்து செயல்படுவதால் வீட்டிலும், வேலையிடத்திலும் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க முடியும்.

    இனிக்கும் இல்லம்:

    சில வீடுகளில் தம்பதிகள் எதிரெதிர் துருவங்களாக இருப்பார்கள். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்சினைதான் இது. இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூருங்கள். அவரவருக்கான சுதந்திர எல்லையை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்குங்கள். இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது.

    எந்த உறவிலும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக சுமூகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். நெருக்கடியான தருணங்களில் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

    • மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல.
    • எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது.

    முதலில் மன அழுத்தம் என்பது ஒரு சிம்டம். மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது பிரச்சினையின் வெளிப்பாடு என்பது முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சிலபேர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் தான் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. மன அழுத்தம் எங்கிருந்து அல்லது எதில் இருந்து ஆரம்பித்தது என்பதை கண்டறிந்தாலே நாம் அதில் இருந்து வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

    மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினை அல்லது ஒருவர் மீது வைக்கப்படுகிற அழுத்தம். அதாவது இதை இப்படி செய்ய வேண்டும். இந்த வேலையை நாம் இந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே மன அழுத்தம். இது நாம் மற்றவர்கள் மேல் வைத்ததாக இருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மேல் வைப்பதாக கூட இருக்கலாம். உலகத்தில் நமக்கு தேவைப்படுகிற விஷயமாக இருந்தாலும் சரி, நாமே நம் மனதில் உருவாக்கி கொள்கின்ற விஷயமாக இருந்தாலும் சரி இதுவே மன அழுத்தத்தை கொண்டுவந்துவிடுகிறது.

    மன அழுத்தத்தை உங்களால் கையாள் முடியும் என்றால் அதனை நீங்களே உடைத்து எரிந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய நிலையை அடைய முடியும். எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது. இந்த அழுத்தத்தை முறையாக கையாள தெரியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்கு உங்களுக்கு மோட்டார்சைக்கிள் தேவை. அங்கு 10 நாட்களுக்கும் சேர வேண்டும். உங்களிடம் பைக் இல்லை, பைக் வாங்கினாலும் 10 நாட்களில் உங்களுக்கு லைசென்சும் கிடைக்காது. எனவே இதனால் உங்களது மனதில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அதுவே சிலநாட்கள் தொடர்ந்து இருந்தால் அதுவே ஒரு மன அழுத்தமாக மாறிவிடும். இது ஸ்கில் லெவல் பிரச்சினை.

    மற்றொரு உதாரணம் நீங்கள் ஒரு ஆபிசில் வேலைசெய்கிறீர்கள் அங்கு நீங்கள் டாக்குமெண்ட் டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சுமாராக ஒரு நாளைக்கு 100 டாக்குமெண்ட் டைப் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆபிசில் சிலபேர்களை வேலையைவிட்டு எடுத்துவிடுகிறார்கள் அதனால் என்ன ஆகிறது அவர்களுடைய வேலையும் உங்கள் தலைமேல் விழுகிறது. இப்போது நீங்கள் ஒருநாளைக்கு 150 டாக்குமெண்ட் தயார்செய்ய வேண்டும் இல்லை என்றால் வேலையைவிட்டு நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அப்போது வேலைபளு காரணமாக ஒருவித அழுத்தம் ஏற்படும். இந்த வேலை இல்லை என்றால் நான் என்ன செய்வது? அல்லது இவ்வளவு வேலையை நாம் ஒருவரே எப்படி செய்வது, இந்த கூடுதல் வேலையினால் வீட்டில் உள்ள வேலைகள் எல்லாம் தடைபடும். குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படும். இதனால் மன அழுத்தம் உருவாகும்.

    எனவே எப்போதும் ஸ்டிரஸ் (மன அழுத்தம்) எதனால் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும். எனவே உங்களுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்ள ஒரு 10 நாட்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் இன்றைக்கு நம் மனதை பாதித்த மற்றும் அழுத்தத்தை கொடுத்த விஷயங்கள் என்னென்ன என்பதை தினமும் எழுதிக்கொண்டு வர வேண்டும்.

    10 நாட்கள் கழித்து அன்றைக்கு உங்களுக்கு மிகவும் பிரச்சினையாக இருக்கக்கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை வட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அந்த 10 பிரச்சினைகளுக்கும் உங்களால் தீர்வு காண முடியுமா என்பதை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நீங்கள் யோசித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செயல்படுத்திக்கொண்டே வர வேண்டும். எழுதிவைத்த எல்லா தீர்வுகளும் முடிவுக்கு வராது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் தான் பிரச்சினைகளில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும்.

    சிலநேரங்களில் நாம் தோல்வியை கூட தழுவலாம். ஆனால் தொடர்ந்து இதை செயல்படுத்துக்கொண்டே வந்தால் நமக்கு பிரச்சினை வந்தால் அதனை எப்படி தீர்த்துக்கொள்வது என்பதை பற்றிய புரிதல் இருக்கும். சில நேரங்களில் நமக்கு எழுதி வைத்த சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லை என்றால் அதனைவிட்டு நாம் வெளியேற முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கடுமையான நிலைக்கு வருவீர்கள்.

    இதில் நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால் வாழ்க்கையில் எப்போதும் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. எனக்கு நிறைய சம்பளமும் வேணும், நான் குறைந்த நேரம் தான் வேலை செய்ய வேண்டும். நான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்றால் அனைத்தும் எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதாவது ஒரு விஷயம் மட்டும் உங்கள் வாழ்க்கையில் இழக்க வேண்டி வரும். பணத்தையோ, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையோ அல்லது உழைப்பையோ என்பதை யோசித்து பார்த்து அதற்கு நீங்கள் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.

    அதாவது உங்களுக்கு எது முக்கியம் என்பதை தேடி ஆராய்ந்து பார்த்து அது உங்களுக்கு எந்த அளவுக்கு பயனை தருகிறது என்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்தது ரொம்ம முக்கியமான விஷயம் என்னவென்றால் எடுத்த முடிவை ஃபாளோ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவை மாற்றி மாற்றி எடுக்காமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவது கடினம்.

    எனவே நாம் ஒரு முடிவெடுத்தால் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது கொஞ்ச நாளைக்காவது அதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவெடுத்த பிறகு நீங்கள் எடுத்த முடிவில் இருந்து மாற்றிக்கொண்டே வந்தால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாது.

    இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேற யோகா, தியானம் செய்வது சிறந்தது. அதிலும் சென் எனப்படுகிற தியானம் இதற்கு மிகவும் உதவும்.

    ×