search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிமைகள்"

    • நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள்.
    • செப்டம்பர் 8-ந்தேதி கன்னி மரியின் பிறந்தநாள்.

    உலகளவில் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு வந்து அன்னையின் அன்பை பெற்று செல்கிறார்கள்.

    ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு நாகபட்டினத்தில் இருந்த ஒரு செல்வந்தருக்கு வேளாங்கண்ணியில் வாழ்ந்த ஒரு இடையர் குல சிறுவன் ஒருவன், ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அதேபோல் பால் கொண்டு போகும்போது, வழியில் உடல் சோர்வுற்றதால் அந்த சிறுவன் சற்று ஓய்வெடுக்க ஒரு ஆல மரத்தின் நிழலில் குளத்துக்கு அருகே அமர்ந்தான்.

    அப்போது சூரியனை விட அதிக ஒளி ஒன்று அவன் முகத்தில் பட்டது. உடனே கண் விழித்தான் அந்த சிறுவன். விண்ணக அழகு நிறைந்த அன்னை தெய்வீக குழந்தையை கையில் ஏந்திய காட்சியை கண்டான். அந்த அன்னை புன்னகை தவழ தனது குழந்தைக்கு கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் பால் கொடுத்தான். அந்த குழந்தையும் பருகியது.

    சில வினாடிகளில் அந்த தேவ அன்னையும், குழந்தையும் அந்த இடத்தில் இருந்து மறைந்தனர். செல்வந்தரின் வீட்டுக்கு நேரம் தவறி வந்த சிறுவனிடம் ஏன் பாலின் அளவு குறைந்திருக்கிறது என்று விசாரித்தார் முதலாளி. சிறுதுநேரத்தில் சிறுவன் சுமந்து வந்த பால் குடம் நிறைந்து வழிந்தோடியது.

    இதை பார்த்த செல்வந்தர் என்ன இது அதிசயம் என்று மலைத்துபோய் நிற்க அந்த சிறுவன் நடந்ததை கூற ஆரம்பித்தான். அச்சிறுவனும் தான் வரும் வழியில் ஒருதாய் கையில் குழந்தையுடன் தோன்றி தன் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு வேண்டினாள். நானும் அக்குழந்தைக்கு பால் கொடுத்தேன் என்று சொல்லி முடித்தும் அவன் கையில் உள்ள பால் பாத்திரம் நிரம்பி வழிவது நிற்கவில்லை.

    சிறுவன் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று அன்னை காட்சி தந்த இடத்தை கண்டார் முதலாளி. அந்த இடத்தில் இருந்த ஆலமரமும், அந்த குளமும் சற்று வித்தியாசமாக அவருக்கு தெரிந்தது. உடனே அவர் அப்புனித தலத்தில் தாழ் பணிந்து வணங்கினார். சிறிது காலத்திற்கு பிறகு தெய்வீக தாய் காட்சி அளித்த அத்திருவிடத்தில் சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அது தான் இன்று நம் முன் சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் பழைய வேளாங்கண்ணி-மாதா குளம்.

    மோர் கார சிறுவனுக்கு காட்சி கொடுத்தது

    சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதாவின் இரண்டாவது காட்சி வேளாங்கண்ணி சிற்றுரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். அப்போது ஒரு நாள் வேளாங்கண்ணி மாதா தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டாள். சிறுவனும் குழந்தைக்கு மோர் வழங்கினான்.

    மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே வாழும் கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக "என்றார்.

    அதற்கு அந்த சிறுவன் நானோ கால் ஊனமுற்றவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்று கூற, "மகனே எழுந்து நட' என்று அந்த தேவத்தாயின் மறுமொழி கூற சிறுவன் எழுந்து நிற்க ஆரம்பித்தான். தன்னால் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது என்று உணர்ந்த சிறுவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது.

    அங்கு வீட்டிற்க்கு சென்று நடந்ததை விளக்கினான். அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்த கிறிஸ்தவருக்கு நேற்று இரவு வேளாங்கன்னி மாதா ஒரு ஆலயம் கட்ட சொல்லிய கனவும் நினைவுக்கு வந்தது. அந்த சிறுவனோடு அந்த இடத்திற்கு சென்று ஆலயம் கட்ட ஆரம்பித்தார்கள். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் பேராலயம்.

    கி.பி 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி மாதாவின் மூன்றாவது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்கொவில் இருந்து போர்ச்சுக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. வழியில் கடுமையான புயலால் அந்த கப்பல் தாக்கப்பட்டது.

    அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறோமே என்று பயந்து அஞ்சி நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.

    அம்மா மரியே எங்களை இந்த கடும் புயலில் இருந்து காப்பாற்றும். நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில் கன்னி மரியே உனக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நினைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோசம் குறையத் தொடங்கியது. அவர்கள் புயலில் சிக்கிய கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது.

    அன்றைய தேதி செப்டம்பர் 8. அன்று கன்னி மரியின் பிறந்தநாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து சேர்ந்ததற்காக இறைவனுக்கும், கன்னி மரியாவிற்க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள். போர்ச்சுக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தாங்கள் கட்டிய சிற்றாலயம் வந்து வணங்கி செல்வது வழக்கம்.

    ×