என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புராண கதை"
- ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன.
- சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் இருக்கும்.
நான்குபுறமும் மலை சூழ்ந்து இருப்பதாலும், இது சதுரமாக இருப்பதாலும் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் இருப்பதை தெரிந்துகொண்ட பல சித்தர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து தவம் செய்து வந்துள்ளனர்.
அதோடு தங்களை தேடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை இங்கு கிடைக்கக்கூடிய மூலிகைகளை வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளனர். பழனி நவபாஷான முருகன் சிலையை போகர் சித்தர் தான் செய்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இந்த சதுரகிரியில் தங்கி இருந்து தான் அதிக சக்திவாய்ந்த நவபாஷான முருகர் சிலையை செய்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் சிலை நேராக இருக்கும். ஆனால் சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அதற்கு இரண்டுவிதமான கதைகள் சொல்லப்படுகிறது.
கயிலாயத்தில் சிவபெருமானின் பூதகணங்களில் ஒருவர் யாழ்வல்லதேவன். இவர் யாழ் இசைத்து சிவனை மகிழ்வித்து வந்துள்ளார். அவர் அப்சரஸ் கன்னிகை மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவருக்கும் சிற்றின்ப ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்துகொண்ட சிவபெருமான் கோபம் கொண்டு இரண்டுபேரும் பூமியில் மனிதர்களாக பிறந்து உங்களோட விருப்பு வெறுப்பு எல்லாம் தீர்ந்து எப்போது முக்தி அடைகிறீர்களோ அப்போது என் இடத்திற்கு திரும்பி வருவீர்கள் என்று சாபம் அளித்தார்.
சதுரகிரி மலைக்கு அடியில் கோட்டையூரில் யாழ்வல்ல தேவன், பச்சைமாலாகவும், அப்சரஸ் கன்னிகை சடைமங்கையாக பிறந்து இரண்டுபேரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பசுக்களை மேய்த்து பால் கறந்து விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
சடை மங்கை குறிப்பிட்ட அளவு பால் கறந்து வியாபாரியிடம் கொடுத்த வாணிபம் செய்து வந்தாள். ஒருமுறை பால் எடுத்துக்கொண்டு செல்லும்போது ஒரு துறவி அவளிடம் பசிக்கிறது எனக்கு பால் தருமாறு கேட்டாள். அவளும் அந்த துறவிக்கு பருகுவதற்கு பால் கொடுத்தாள்.
உடனே அந்த துறவி நான் தினமும் இங்கு வருவேன் எனக்கு பால் அருந்துவதற்கு கொடுத்து எனது பசியை போக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மறுத்து பேசாமல் சடைமங்கை கணவருக்கு தெரியாமல் துறவியின் பசியை ஆற்றுவதற்கு பால் அருந்த கொடுத்து வந்தாள்.
பால் அளவு நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டுவருகிறது என்று வணிகர்கள் பச்சைமாலிடம் சொல்லி வந்துள்ளனர்.
தன்னோட மனைவி தினமும் என்ன செய்கிறாள் என்று பச்சைமால் மறைந்திருந்து பார்த்தான். சடைமங்கை வழக்கம்போல் அந்த துறவிக்கு குடிப்பதற்கு பால் கொடுத்தாள். இதைபார்த்ததும் கோபம் கொண்ட பச்சைமால் மனைவியை சரமாரியாக தாக்கினான்.
உடனே துறவி, தனக்கு இரக்கப்பட்டு குடிப்பதற்கு பால் கொடுத்த சடைமங்கை இப்படி அடிவாங்கிவிட்டாளே என்று அவளை சடைதாரி என்ற பெயரில் காவல் காக்கும் தெய்வமாக சிலையாக மாற்றிவிட்டு அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டார் துறவி.
மனைவியை பிரிந்த பச்சைமால் தன்னோட தவறை உணர்ந்து திருந்தி சதுரகிரியில் உள்ள சுத்தநாத சித்தர், சட்டைமுனி சித்தர் ஆகியோருக்கு பசியாற பால் கொடுத்து வந்தான் பச்சைமால்.
சதுரகிரிக்கு துறவி ஒருவர் புதிதாக வந்தார். அவரை எல்லோரும் நன்றாக உபசரித்து வந்துள்ளனர். அவருக்கு பச்சைமால் பசியாறுவதற்கு பால் கொடுத்து வந்துள்ளான். ஒருநாள் புதிதாக வந்த சித்தர் மாட்டின் மடியில் இருந்து பால் குடித்துள்ளார். சிவ பூஜைக்கு உள்ள பாலை யாரோ திருடன் குடித்துள்ளான் என்று கோபப்பட்டு ஒரு கம்பால் தலையில் அடித்தான். அதில் அந்த துறவியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
சட்டைமுனி பச்சைமாலுக்கு சாபம் கொடுப்பதற்காக வந்தார். உடனே துறவி உருவத்தில் வந்த சிவபெருமான் புலித்தோல் அணிந்து அவரோட சுயரூபத்தை காட்டினார். அப்போது அந்த துறவியிடம் அவனது முன்ஜென்ம கதையையும், பெற்ற சாபத்தையும் பற்றி கூறி சாபவிமோச்சனம் அளிக்க வந்தேன் என்று சிவபெருமான் கூறினார்.
முனிவர்கள் கேட்டுக்கொண்டதால் சுயம்புவாக சுந்தர மகாலிங்கம் என்ற பெயரில் சாய்ந்த கோணத்தில் தலையில் அடிபட்ட தழும்புடன் இன்றளவும் சதுரகிரி மலையில் ஆசி வழங்கி வருகிறார்.
ஒரு கதையில் சிவபெருமானின் பக்தன் யாழ்வல்லதேவன் என்று சொல்லப்படுகிற மாதிரி மற்றொரு கதையில் காவல் தெய்வமான கருப்பசாமியின் காவலை சோதித்து பார்க்க நினைத்த சிவபெருமான் கருப்பசாமியின் காவலில் இருந்த ஒரு மாட்டின் பாலை திருட்டுத்தனமாக குடித்து வந்துள்ளார். இதை பார்த்த கருப்பசாமி பிரம்பால் சிவபெருமானை அடித்துள்ளார். அதனால் தான் சுந்தரமகாலிங்கத்திற்கு அடிபட்டது.
கடமை தவறாத கருப்பசாமியை காவல் தெய்வமாக நியமித்தார் சிவபெருமான் என்றும், காவல் தெய்வமான கருப்பசாமியை வழிப்பட்ட பிறகுதான் சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.
எந்த இடத்திலேயும் இல்லாத அளவுக்கு சதுரகிரி மலையில் மட்டும் தான் இரட்டை லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது.
- வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ஜுனாபுரம் என்ற அழகான கிராமம் இருந்தது.
- பார்ப்பதற்கே செழிப்பாக பச்சைபசேல் என்று பசுமையாக இருக்கும்.
கொடுமையான வறுமையால் தன்னையும் தன் மக்களையும் பறிகொடுத்து தெய்வமாக இருக்கும் நல்லதங்காள் வரலாற்றை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அர்ஜுனாபுரம் என்ற அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் எந்த பக்கம் பார்த்தாலும், மா மரங்களும், தென்னை மரங்களும், வாழைமரங்களும், தேக்கு மரங்களும் பார்ப்பதற்கே செழிப்பாக பச்சைபசேல் என்று பசுமையாக இருக்கும்.
இந்த அர்ஜுனாபுரத்தை தலைமை இடமாக கொண்டு மதுராபுரி நகரத்தில் பிறந்த ராமலிங்க மகாராஜா. இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்தார். இவருக்கும், இந்திராணிக்கும் திருமணம் முடிந்து பலவருடங்களுக்கு பிறகு தான் குழந்தைப்பேறு கிடைத்தது. மொத்தம் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். மூத்த குழந்தை பெயர் நல்லதம்பி, இளைய குழந்தை நல்லதங்காள். இந்த இரண்டு குழந்தைகளுமே நல்ல செல்வசெழிப்புடன் வளர்ந்து வந்தனர்.
சிலநாட்களுக்கு பிறகு ராமலிங்க மகாராஜாவுக்கு முதுமை காலம் வந்தது. தான் உயிரோடு இருக்கும்போதே நல்லதம்பிக்கு முடிசூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே குந்தல தேசத்தை ஆட்சிபுரிந்து வந்த கோமகனின் மகள் மூழி அலங்காரியை திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் முடிந்த 10-வது நாள் நல்லதங்காளின் தாய் இந்திராணி இறந்துவிட்டார். மனைவி இறந்த துயரத்தாலும், தன்னுடைய மகளுக்கு இன்னும் திருமணம் முடித்து வைக்கவில்லையே என்ற துக்கத்தில் ராமலிங்க மகாராஜா சிலநாட்கள் கழித்து இறந்துவிட்டார்.
தாயும், தந்தையும் இறந்த பின்னர் நல்லதங்காளின் அண்ணன் நலல்தம்பி அவளை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தார். இனி தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க எண்ணிய நல்லதம்பி நிறைய நல்ல வரன்களை எல்லாம் பார்த்தார். மானாமதுரையில் உள்ள காசிராஜனுக்கு தனது தங்கையான நல்லதங்காளை திருமணம் முடித்துவைக்க எண்ணினார் நல்லதம்பி.
சித்திரை திங்கள் புதன்கிழமை அன்று அர்ஜுனாபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தது. நல்லதம்பி தனது தங்கையான நல்லதங்காளுக்கு நிறைய சீதனம் கொடுத்தார். தங்கத்தினாலும் நகைகளும், வெள்ளியினால் ஆன பூஜை பொருட்களும், வெள்ளாடுகளும், பசுமாடுகளும், பொன்னாலான முக்காலி போன்ற நிறைய பொருட்களுடன், ௯ பணிபெண்களையும் கொடுத்து கலங்கிய கண்களுடன் பிரியமனம் இல்லாமல் மானாமதுரைக்கு நல்லதங்காளை வழிஅனுப்பி வைத்தார் நல்லதம்பி.
8 ஆண்டுகள் ரொம்ப சந்தோசமாக இருந்தார்கள். காசிராஜனுக்கும், நல்லதங்காளுக்கும் 7 குழந்தைகள் பிறந்தனர். இதில் ௪ ஆண்குழந்தைகள், 3 பெண்குழந்தைகளும் இருந்தனர்.
இப்படி சந்தோசமாக வாழ்ந்து வந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சோதனை வந்தது. ஒருநாள் மானாமதுரையில் தண்ணீர் பஞ்சம் வந்தது. விளைச்சலும் குறைந்தது. ஆடு, மாடுகள் எல்லாம் செத்துப்போயின. மக்கள் பலர் பசியினால் இறந்து போனார்கள்.
காசிராஜனுக்கு தன்னுடைய மக்கள் கஷ்டப்படுவதை பார்க்கமுடியவில்லை. உடனே தன்னுடைய நாட்டு மக்கள் அண்டை நாடு செல்வதற்கு ஏற்பாடு செய்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மாளிகையில் இருக்கக்கூடிய பொன்னையும், பொருளையும் கொடுத்து உதவியும் செய்தார்.
தினமும் தன்னுடைய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைச்சுதா என்பதை தெரிந்த பிறகுதான் காசிராஜன் சாப்பிட்டு வந்தார். கொஞ்சநாட்களிலேயே தானியக்கிடங்கில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோயின. உடனே காசிராஜன் தன்னுடைய மந்திரி முதற்கொண்டு எல்லா மக்களையும் அடுத்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
காசிராஜனுடைய மனைவி நல்லதங்காளும், அவனுடைய 7 குழந்தைகளும் பசியால் அழுது துடைத்தனர். தன்னுடைய குழந்தைகள் பசியால் துடிப்பதை கண்ட நல்லதங்காள் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு சென்றால் குழந்தைகளுக்கு உணவாவது கிடைக்கும். இப்படி பசியால் துடிக்கமாட்டாங்க என்று நினைத்தாள். இதை எப்படி காசிராஜனிடம் கூறுவது என்று நினைத்து, காசிராஜனையும் தன்னுடன் கூட்டி சென்றுவிடலாம். அப்போது வறுமையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்து தன்னுடைய விருப்பத்தை காசிராஜனிடம் சொன்னாள் நல்லதங்காள்.
காசிராஜனிடம், நல்லதங்காள் என்னுடைய அண்ணன் வீட்டிற்கு செல்லலாமா? என்று கேட்டாள். இதை கேட்டதும் காசிராஜனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதற்கு காசிராஜன் நான் இந்த நாட்டிற்கு அரசன். எந்த நிலை வந்தாலும் நான் வரக்கூடாது. நீ வேண்டுமென்றால் நம்முடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு உன்னுடை அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு வா என்று நல்லதங்காளை அனுப்பிவைத்தார்.
நல்லதங்காளும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று சந்தோசத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு நடந்து சென்றார். காடு மேடு கடந்து, நல்லதங்காளும் அவர்களுய 7 குழந்தைகளும் மானாமதுரையில் இருந்து காட்டு வழியில் சென்றார். அப்போது நல்லதங்காளுக்கு வழிதெரியவில்லை. பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் இளைப்பாறினார் நல்லதங்காள் குழந்தைகளுடன். பசி பசி என்று குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன. அதைக்கண்டு நல்லதங்காளும் கதறி அழுதாள்.
நல்லதங்காளின் அழு குரலை கேட்டதும், வேடர்கள் எல்லோரும் ஓடி வந்து நல்லதங்காளிடம் விசாரித்தனர். தலைவிரி கோலமாக பசியால் மெலிந்துபோய் யார் என்றே அடையாளம் தெரியாமல் இருந்த நல்லதங்காளை பார்த்தவுடன் வேடர்குல தலைவன் வாய்விட்டு அழுதார்.
ஏனென்றால் அந்த வேடர்குல தலைவன் யார் என்றால் நல்லதம்பி தான். நல்லதங்காளின் உடன் பிறந்த அண்ணன். ஏன் வேடர் கோலத்தில் வந்தார் என்றால் ஒரு புலி ஒன்று ஊர் மக்களை துன்பப்படுத்திக்கொண்டே இருந்தது. அந்த புலியை வேட்டையாடவே வேடர் உருவத்தில் இருந்தார்.
நல்லதம்பி, நல்லதங்காளை பார்த்து கதறி அழுதார். அதன்பிறகு நடந்ததை எல்லாவற்றையும் நல்லதங்காள் தன்னுடைய அண்ணனிடம் சொன்னாள். இதைகேட்டதும் நல்லதம்பி, நல்லதங்காளிடம் தங்கையே நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. வேலை முடிவதற்கு இன்னும் 2 நாட்கள் ஆகும்.
முதலில் பசியால் உன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரண்மணைக்கு போ... அங்க அண்ணி உனக்கு வேணுங்றதை எல்லாம் தருவாள் என்று சொன்னார் நல்லதம்பி.
அதன்பிறகு தன்னுடைய பரிவாரங்களை அழைத்து என்னுடைய தங்கை நல்லதங்காளை அரண்மணைக்கு அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டான். அந்த நேரத்தில் அர்ஜுனாபுரம் அரண்மணை மாடத்தில் பெண்கள் எல்லோரும் தனக்கு சேவகம் செய்ய ரொம்ப சந்தோசமாக உட்காந்து இருந்தார் நல்லதம்பியின் மனைவியான மூழி அலங்காரி.
மூழிஅலங்காரிக்கு, செந்திலபதி என்ற தம்பி இருந்தார். இவர் நல்லதங்காளும் அவளுடைய 7 குழந்தைகளும் வறுமையால் தன்னுடைய நாட்டைவிட்டு அண்ணனை தேடி வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நல்லதங்காளும், அவளுடைய குழந்தைகளும் அரண்மனைக்கு வருவதற்கு முன்னாடியே காட்டில் நடந்த நிகழ்ச்சியை தன்னுடைய சகோதரி மூழி அலங்காரியிடம் அவசர அவசரமாக சொன்னார்.
இதை கேட்டதும் மூழிஅலங்காரிக்கு பயங்கரமாக கோபம் வந்தது. அடடா? நல்லதங்காள் மறுபடியும் அரண்மனைக்கு வந்துவிட்டாளா? இனி இங்கு இருக்கும் சொத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவாள் என்று நினைத்து அங்கிருந்த பணிப்பெண்கள் அனைவரையும் போகச்சொல்லிவிட்டாள்.
அரண்மனையில் உள்ள உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் பாதாளத்தில் உள்ள அறையில் கொண்டுபோய் மறைத்து வைத்தாள். அதன்பிறகு தானும் ஒரு மூலையில் சென்று படுத்துக்கொண்டாள். கொஞ்சநேரத்தில் அரண்மனை வாயிலை நுழைந்தவுடன் வாசல் கதை அடைத்து இருந்தது.
உடனே நல்லதங்காள் இங்கே ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்துகொண்டாள். கதவிற்கு அருகில் சென்றதும் நல்லதங்காள் அண்ணி கால், கைகள் எல்லாம் வலிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் பசியால் அழுகிறார்கள். கதவை திறங்க அண்ணி என்று கதவை தட்டினாள்.
ஆனால் மூழிஅலங்காரி கதவை திறக்கவில்லை. அதன்பிறகு அழுதுகொண்டே இறைவனாகிய சிவபெருமானை நினைத்து ஈஸ்வரனே என்னுடைய பிள்ளைகள் பசியாற கதவை திறங்க என்று கதறி அழுதாள். கொஞ்ச நேரத்தில் அரண்மனையின் கதவுகள் தானாகவே திறந்தது.
உடனே நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு மூழு அலங்காரி இருக்கும் இடத்திற்கு சென்றாள். அண்ணி என்னுடைய பிள்ளைகள் பசியால் துடிக்கின்றனர். ஏதாவது சாப்பிடுவதற்கு கொடுங்கள் என்றாள் நல்லதங்காள். உடனே மூழி அலங்காரி நானே உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறேன். காட்டிற்கு சென்ற உனது அண்ணன் அவர்கள் நல்லபடியா படைகளோடு திரும்பி வர வேண்டும் என்று அனைவரும் விரதம் இருக்கிறோம். அதனால் எதுவுமே சமைக்க வில்லை என்று பதில் சொன்னார்.
இதைக்கேட்டதும் நல்லதங்காள் சரி அண்ணி. அண்ணன் வரும் வரை நான் பசியை பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது குழந்தைகள் பசியாற ஏதாவது கொடுங்க என்று கூறினாள். நான் அந்த அரிசியை வைத்து நான் எனது குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுக்கிறேன் என்று பணிவுடன் கேட்டாள் நல்லதங்காள்.
மூழிஅலங்காரி, நல்லதங்காளை பார்த்து, உனக்கு தெரியாதா எங்களுடைய நாட்டிலும் பயங்கர பஞ்சம். விளைச்சளே இல்லை. அரிசிக்கு நான் எங்கபோறது. இரு கொஞ்சம் கேழ்வரகு வேண்டுமென்றால் தருகிறேன் என்று கூறிக்கொண்டு அதை உன்னுடைய பிள்ளைகளுக்கு கொடு என்று சொல்லி தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி வைத்தாள்.
அதன்பிறகு மூழி அலங்காரி இன்னொரு பணிப்பெண்ணை அழைத்து நல்லதங்காளுக்கு ஒரு பச்சை மட்டையும், ஓட்டை பானையும் கொடு அதைக்கொண்டு சமைக்கட்டும் என்று கூறினாள். அந்த பணிப்பெண்ணும் நல்லதங்காளுக்கு ஒரு பச்சை மட்டையும், ஓட்டை பானையும் கொடுத்தாள்.
எப்படியோ கேழ்வரகை அரைத்து கஞ்சு காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்தாள் நல்லதங்காள். அடுப்பு எரியவே இல்லை. உடனே நல்லதங்காள் அழுதுகொண்டே தாயே அன்னபூரணி நான் பத்தினி என்றால் இந்த அடுப்பு எரியவேண்டும் என்று சொன்னாள். உடனே அடுப்பு கொளுந்துவிட்டு எரிந்தது.
இதைப்பார்த்த பணிப்பெண்கள் பயந்துபொய் மூழிஅலங்காரியிடம் ஓடிபோய் இந்த விஷயத்தை கூறினர். இதை கேட்டதும் மூழி அலங்காரிக்கு கோபம் வந்து நல்லதங்காள் இருக்கும் இடத்துக்கு வந்தாள். மூழிஅலங்காரி, நல்லதங்காளை பார்த்து உன்னுடைய திருமணத்தின்போது நீ எடுத்துக்கொண்டு சென்ற செல்வம் எல்லாம் பத்தாது என்றா இந்த அரண்மனையை கொளுத்தப்பார்க்கிறாய் என்று சொல்லிவிட்டு கேழ்வரகு கஞ்சி கொதித்துக்கொண்டிருக்கும் பானையை தனது காலால் எட்டி உதைத்தாள்.
பானையில் உள்ள கஞ்சி எல்லாம் தரையில் சிதறிக்கிடந்தன. இதை பார்த்ததும் பசியால் இருந்த நல்லதங்காளின் குழந்தைகள் தரையில் சிதறிய கஞ்சியை வழித்து குடித்தனர். நல்லதங்காளுக்கு இந்த காட்சியை பார்க்கமுடியவில்லை. இனியும் இங்கு இருந்து அவமானப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய 7 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.
பாழடைந்த கிணற்றை தேடி சென்றாள் நல்லதங்காள். தன்னுடையை அண்ணன் வந்தால் தன்னுடைய வழியை தெரிந்துகொள்வதற்காக போகிற வழிகள் எல்லாம் ஆவாரம் பூ செடிகளை உடைத்து போட்டுக்கொண்டே சென்றாள் நல்லதங்காள். கொஞ்ச தூரம் சென்ற பிறகும் எந்த ஒரு கிணற்றையும் காணவில்லை. அந்த காட்டில் 3 பேர் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் சென்று நல்லதங்காள் எங்களுக்கு ரொம்ம தண்ணீர் தாகமாக உள்ளது. எனவே பக்கத்தில் ஏதாவது கிணறு இருக்கிறதா என்று கேட்டாள். உடனே ஆடு மேய்ப்பவர்களான மூவரி ஒருவர் ரொம்ப தூரத்துல் கருப்பராயன் என்று ஒரு கோவில் உள்ளது. அதைத்தாண்டி போனால் ஒரு கிணறு இருக்கிறது என்று கூறினான்.
உடனே நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றால். அங்கு சென்றதும் நல்லதங்காளின் குழந்தைகள் அனைவரும் பசிமயக்கத்தில் உறங்கிவிட்டனர். நல்லதங்காளும் தன்னுடைய குழந்தைகளுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தாள். அந்த சமயத்தில் தான் நல்லதங்காளின் மனதில் ஒன்று தோன்றியது. எந்த சமயத்திலும் அழையா விருந்தாளியாக யாருடைய வீட்டிற்கு போகக்கூடாது என்று கணவன் காசிராஜன் சொன்னது நினைவிற்கு வந்தது. தன்னுடைய தவறை எண்ணி அழுதுகொண்டே இருந்தாள்.
தன்னுடைய கணவனின் பேச்சை கேட்காமல் வந்தது எவ்வளவு தவறு என்று எண்ணி அழுதாள். நல்லதங்காளின் குழந்தைகள் கிணற்றாங்கரையில் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். தன்னுடைய குழந்தைகள் தூங்கி முழித்துவிட்டால் அவர்களை கிணற்றில் தூக்கிபோடுவதற்கு மனதே வராது. எனவே இதுதான் சரியான சமயம் என்று நினைத்த நல்லதங்காள் தன்னிடைய தாலியை கழற்றி தன்னுடைய கணவனோ, அல்லது அண்ணனோ தன்னை தேடிக்கொண்டு வந்தார் அவர்களுடை கண்ணில் படுமாறு நினைத்து அந்த கிணற்றின் மேட்டில் வைத்தாள் நல்லதங்காள்.
உடனே கிணற்றை 3முறை சுற்றி வந்து ஒவ்வொரு குழந்தைகளாக தூக்கி கிணற்றில் போட்டாள். இந்த சத்தம் கேட்டு நல்லதங்காளின் மூத்த மகன் முழித்துக்கொண்டான். அம்மாவிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தான். அவன் அம்மாவிடம், என்னை மட்டுமாவது தப்பித்துபோக விடுங்கம்மா. நம்முடைய வம்சத்தின் பேர் சொல்ல நான் மட்டுமாவது இருக்கிறேன் என்று கூறி கதறி அழுதான்.
நல்லதங்காளும் தன்னுடைய மகனின் பேச்சைக்கேட்டு அழுதுகொண்டே தன்னுடைய மூத்த மகனை பிடித்து கிணற்றில் தூக்கி போட்டு விட்டு கடைசியில் தானும் கிணற்றில் குதித்தாள். இப்போது நல்லதங்காளும், அவளின் 7 குழந்தைகளும் கிணற்றில் இறந்து மிதந்தனர்.
இந்த நேரத்தில் நல்லதங்காளின் அண்ணன் நல்லதம்பி வேட்டையை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். தன்னுடைய தங்கையையும், 7 குழந்தைகளையும் அரண்மனை முழுவதும் தேடினான். அவர்கள் அங்கு இல்லை. உடனே தன்னுடைய மனைவி மூழிஅலங்காரியிடம் வந்து கேட்டான் நல்லதம்பி.
உடனே மூழிஅலங்காரி தன்னுடைய கணவனிடம் நானே உடம்பு முடியாமல் படுத்துக்கொண்டு இருந்தேன். அப்படி இருந்தும் உங்க தங்கைக்கு சுவையான உணவுகளை சமைத்து சாப்பிட கூப்பிட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அண்ணன் வந்து சாப்பாடு போட்டால் தான் சாப்பிடுவோம். இல்லை என்றால் சாப்பிடமாட்டோம் என்று கோபப்பட்டு இங்கிருந்து சென்றுவிட்டனர் என்று பொய் சொன்னாள் மூழிஅலங்காரி.
நல்லதம்பிக்கு தன்னுடைய மனைவி சொன்னது சரியாகப்படவில்லை. உடனே நல்லதம்பி அங்குள்ள பணிப்பெண்களுடம் விசாரித்தான். உடனே நல்லதம்பி தன்னுடைய தங்கையை தேடி காட்டிற்குள் சென்றான். வழி எங்கும் ஆவாரம் பூவை பின் தொடர்ந்து சென்றான் நல்லதம்பி.
ஆனால் மறுபுறம் மானாமதுரையில் நல்லா மழைபெய்து நாடே செழிப்பாக இருந்தது. காசிராஜனும், தன்னுடைய மனைவி நல்லதங்காளையும், 7 குழந்தைகளையும் நல்லதம்பி வீட்டில் இருந்து அழைத்துக்கொண்டு வரலாம் என்று சொல்லி காட்டில் வந்துகொண்டிருந்தார்.
அந்த காட்டின் வழியாக தான் நல்லதம்பியும் தன்னுடைய தங்கை நல்லதங்காளை தேடிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். நல்லதம்பியும், காசிராஜனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். நல்லதம்பி நடந்த உண்மைகளை காசிராஜனிடம் சொன்னார். அந்த ஆவாரம் பூவை பின் தொடர்ந்தே காசிராஜனும், நல்லதம்பியும் சென்றனர். அது ஒரு கிணற்றுப்பகுதியை வந்தடைந்தது.
கிணற்றுக்குள் நல்லதங்காளும், அவளுடைய 7 குழந்தைகளும் இறந்து மிதந்துகொண்டிருந்தனர். இதை பார்த்ததும் காசிராஜனும், நல்லதம்பியும் கதறி அழுதனர். அதன்பிறகு நல்லதங்காளையும், அவளுடைய 7 குழந்தைகளையும் வெளியே எடுத்து ஈமக்காரியங்களை செய்தனர்.
உடனே காசிராஜன், தன்னுடைய மனைவி நல்லதங்காளும், 7 குழந்தைகளும் இறந்த துக்கம் தாங்காமல் இறந்துவிட்டார். நல்லதம்பிக்கு ரொம்ப கோபம் வந்தது. தன்னுடைய தங்கையும், அவளுடைய குழந்தைகளும் இறந்ததற்கு மூழ் அலங்காரி தான் முக்கிய காரணம் என்று நினைத்துக்கொண்டு மூழி அலங்காரியையும், அவளுடைய வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று ஒரு சபதம் எடுத்தார்.
உடனே அரண்மனைக்கு சென்று தன்னுடைய மனைவி மூழிஅலங்காரியிடம் ஒரு துக்கம் நடந்த வீட்டில் நல்ல காரியம் உடனே நடத்த வேண்டும். இதனால் உன்னுடைய தம்பி செந்திலபதிக்கு திருமணத்தை நடத்தி வைக்கலாம். உன்னுடைய சொந்தபந்தங்களை எல்லாம் வரச்சொல்லு என்றான் நல்லதம்பி.
இதனால் மூழ் அலங்காரிக்கு ரொம்ப சந்தோசம். திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்தது. நல்லதம்பி தன்னுடைய அரண்மனையில் உள்ள சிற்பியை அழைத்து ஒரு பொய்யான மண்டபத்தை தயார் செய்யும்படி கூறினான். மூழுஅலங்காரியின் சொந்த பந்தங்களை பொய்யாக உள்ள மண்டபத்திலும், நல்லதம்பியின் சொந்தங்களை அவனுடைய அரண்மனையிலும் தங்க வைத்தான்.
திருமணம் நடப்பதற்கு கொஞ்சநேரத்திற்கு முன்னால் நல்லதம்பி திட்டம் போட்டது மாதிரி போலியாக கட்டப்பட்ட மண்டபம் இடிந்து விழுந்தது. மூழிஅலங்காரியின் வம்சமே அடியோடு அழிந்துவிட்டது. உடனே தன்னுடைய கடமையை நல்லபடியாக முடித்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு நல்லதம்பி ஈட்டி மீது பாய்ந்து உயிரையே விட்டார்.
பச்சை ஆடை போர்த்திய வயல்களுக்கு மத்தியில் தான் அர்ஜுனாபுரத்தில் கோவில் கொண்டுள்ளார் நல்லதங்காள். இங்குள்ள கோவில் அமைப்பை பார்த்தால் மற்ற கோவில்களை போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக இருக்கும். 7 குழந்தைகளின் சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியாக இருக்கும்.
இங்கு நல்லதங்காளுக்கும், நல்லதம்பிக்கும் 2 கோவில்கள் கட்டப்பட்டு மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவிலுக்கு சற்று தொலைவில் தான் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்துபோய் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதமும் பொங்கல் விழாவின் போது நல்லதங்காளின் உறவினர் வழித்தோன்றலில் வந்தவர்கள் மானாமதுரையில் இருந்து வந்து விழாவில் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
அதன்பிறகு மாதம் தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. அவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்றவை இன்றும் வத்திராயிருப்பில் இன்றும் உள்ளது. நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் தான் நல்லதங்காளும், நல்லதம்பியும் வாழ்ந்த அரண்மனை கோவிலாக போற்றப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்