search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோப்புக்கரணம்"

    • விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த விநாயகர் புராணம் உள்ளது.
    • முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும்.

    எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்கு மென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.

    விநாயகப்பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.

    விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.

    பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றோம்.

    மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.

    விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
    • விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும்.

    பிடித்து வைத்தால் பிள்ளையார்

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.

    மோதக தத்துவம்

    அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அரிசி மாவு சுவையற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும்போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அதுபோல பக்தி கலந்த வாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

    உருவ தத்துவம்

    யானைத்தலையும், பெருவயிறும் மனித, உடலும் ஐந்து கைகளும் கூடிய ஒரு விந்தையான வடிவே பிள்ளையார் வடிவம். அவருக்கு இடையின் கீழ் மனித உடம்பு, இடைக்கு மேலே கழுத்து வரை தேவ உடம்பு, அதற்கு மேலோ விலங்கின் தலை. ஒரு கொம்பு ஆண்தன்மையையும், மற்றொரு கொம்புபெண் தன்மையையும் குறிக்கும். யானைத்தலை அஃறிணை, தெய்வ உடம்பு உயர்திணை. இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்தால் பிள்ளையார் தேவராய், மனிதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அஃறிணையாய் விளங்குகிறார் என்ற உண்மை புலப்படும். உலகங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறார் என்பதை குறித்திடவே பெருவயிறு அமைந்துள்ளது. துதிக்கை வலது புறம் திரும்பி இருப்பது(வலம்புரி) யோகத்தை குறிக்கிறது.

    கடன்கள் தீர்க்கும் ஸ்ரீ  ருண மோசன கணபதி

    ருணம் என்றால் கடன் என்றுபொருள், மோசனம் என்றால் விடுபடச்செய்தல் என்று பொருளாகும். நம்மை கடன் தொல்லைகளில் இருந்து மீளச்செய்பவரே 'ருணமோசன கணபதி' கோவில்களுக்கு சென்று இம்மூன்று கடன்களையும் தீர்க்க முடியாதவர்கள் ருணமோசன கணபதியை வழிபாடு செய்து கடன்களை தீர்க்கலாம். அவருக்கான ருணஹரகணேச ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வது கடன்களை தீர்க்க உதவும்.

    நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

    ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார் அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக்கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிந்த தும் பிளளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    தோப்புக்கரணம் போடும் முறை

    விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரணம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் "காவிரி" என்று பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவர் தான் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.

    கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால் சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.

    5 தடவை குட்டுங்கள்

    எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் `சுக்லாம்பரதம்' சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும். இந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம். மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் சஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.

    கேது திசை நாயகன்

    ஜாதக ரீதியாக கேது புத்தி, கேது திசை ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும். இன்பம் பெருகும். திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் நன்மை பெருகும்.

    ×