என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்ரீ கற்குவேல் அய்யனார்"
- கொடிமரத்திற்கு பின்னாலேயே சொரிமுத்து அய்யனார் வந்துகொண்டே இருந்தார்.
- கற்குவா மரத்தின் மீது அமர்ந்த அய்யன் என்று பாசத்துடன் அழைத்து வந்தனர்.
திருச்செந்தூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர் தான் தேரிக்குடியிருப்பு. அந்த தேரி குடியிருப்புக்கு பக்கத்தில் குதிரைமொழி தேரி என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் கற்குவேல் அய்யனார்.
ஒரு சமயம் பொதிகைமலைக்கு அடியில் இருக்கக்கூடிய காக்காய்ச்சி மலையில் இருந்து திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு கொடிமரம் வெட்ட வரும்போது, பேச்சியம்மன், சுடலைமாடசாமி, பிரம்மசக்தி அம்மன் முதலான 21 தேவாதி தேவதைகள் எல்லோரும் இடையூறு செய்தார்கள்.
உடனே கொடிமரம் வெட்ட சென்றவர்கள் எல்லோரும் சொரிமுத்து அய்யானாரிடம் சென்று முறையிட்டனர். சொரிமுத்து அய்யனாரில் கட்டளைப்படி அந்த 21 தேவாதி தேவதைகளும் அந்த கொடிமரத்தை திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகன் கோவிலில் கொண்டுவந்து சேர்த்தனர்.
அந்த கொடிமரத்திற்கு பின்னாலேயே சொரிமுத்து அய்யனார் வந்துகொண்டே இருந்தார். வந்துகொண்டு இருக்கும்போது செம்மண் காட்டு பகுதியில் தேரிக்குடியிருப்பு என்ற இடம் உள்ளது. அந்த செம்மண் தேரி சொரிமுத்து அய்யனாருக்கு மிகவும் பிடித்துபோகவே, இதனால் சொரிமுத்து அய்யனார் என்ன பண்ணினார் என்றால் அந்த செம்மண் தேரியில் உள்ள கறுவா மரத்தின் மீது அமர்ந்துகொண்டார்.
அதன்பிறகு தான் இங்கு இருப்பதை அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த நிலக்கிலாரின் கனவில் தோன்றி நான் அய்யனார் நீ வசிக்கும் பகுதியில் உள்ள கற்குவா மரத்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு இவ்விடம் பிடித்துவிட்டது. எனவே இந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி பூஜை செய்துவா, நான் உன்னை மேம்படுத்துவேன். என்னை நம்பி வணங்கும் பக்தர்களுக்கு எல்லா வளமும், நலமும் அளித்து காத்தருள்வேன் என்று கூறினார் சொரிமுத்து அய்யனார்.
உடனே நிலக்கிலார் என்ன செய்தார் என்றால் அந்த பகுதியை ஆட்சி செய்து வந்த சிற்றரசன் உதவியுடன் கோவிலை கட்டினார். மக்கள் எல்லோரும் கற்குவா மரத்தின் மீது அமர்ந்த அய்யன் என்று பாசத்துடன் அழைத்து வந்தனர். அதுவே காலப்போக்கில் மருவி கற்குவேல் அய்யன் என்று ஆகி இன்று கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறது.
கற்குவேல் அய்யனார் சொன்னதுபடியே 21 தேவாதி தேவதைகளுக்கும் இந்த இடத்தில் கோவில் கட்டி கொடுக்கப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு இந்த கோவிலை கட்டி தந்த நிலக்கிலாருக்கு ஒரு மகன் பிறந்தார். அந்த மகனுக்கு கற்குவா அய்யனார் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
கற்குவா அய்யனாரும் அந்த பெயரை சுருக்கி கற்கய்யனார் என்று அழைத்தனர். இந்த நிலக்கிலாரின் வம்சாவளியில் வந்த கய்யனார், இதேபகுதியை ஆட்சி செய்து வந்த அதிவீர ரணசூர பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தார்.
இந்த மன்னனின் கோட்டைக்கு அருகில் ஒரு அழகான சுனை ஒன்று உள்ளது. அந்த சுனையின் மேற்பரப்பில் ஒரு மா மரம் ஒன்று இருந்தது. அந்த மா மரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. என்னவென்றால் தினமும் ஒரு காய் அதுவும் கனிந்த நிலையில் தானே விழும். அப்படிப்பட்ட மா மரம் தான் அந்த சுனை அருகில் இருந்தது. ஒரு நாள் அந்த சுனையில் தண்ணீர் குடிப்பதற்காக முனிவர் ஒருவர் வந்தார்.
அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த மா மரத்தில் இருந்து ஒரு கனி ஒன்று விழுந்தது. உடனே அந்த முனிவர் அந்த மாம்பழத்தை கையில் எடுத்துக்கொண்டு உடனே முனிவர் மன்னரை பார்க்க சென்றார். அங்கு மன்னரை பார்த்து முனிவர் இந்த மாம்பழம் கிடைப்பதற்கரிய மாம்பழம். இந்த மாம்பழத்தை நீங்கள் அன்றாடம் வழிபடக்கூடிய இறைவனுக்கு தினமும் ஒரு கனியை பின்னர் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பிணியும், மூப்பும் அண்டாது என்று கூறினார்.
ரொம்ப சந்தோசமாக மன்னர் அந்த முனிவரிடம் இருந்து பழத்தை வாங்கிக்கொண்டார். அன்றில் இருந்து அந்த மரத்தில் இருந்து தானே பழுத்து கீழே விழும் மாம்பழத்தை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக 4 வீரர்களை மன்னர் காவலுக்கு வைத்தார்.
அந்த பகுதியில் கணவனை இழந்த ஒரு விதவையான பேச்சித்தாய் வாழ்ந்து வந்தாள். இந்த பேச்சித்தாய் சிறுவயதில் இருந்தே கறுகுவேல் அய்யனார் மீதும், அந்த ஆலயத்தில் அருள்புரியும் பேச்சியம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தாள். இவர் தினமும் பகல் பொழுதில் ஊருக்குள் நடமாடுவதே கிடையாது. அதிகாலையில் அந்த சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தாள்.
அதிகாலை நேரம் என்பதால் மரத்தை காக்கக்கூடிய வீரர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். ஒருநாள் அதிகாலைப்பொழுது சுனையில் இருந்து தண்ணீர் எடுத்துவர சென்றாள். அப்போது ஒரு குடத்தை அந்த சுனையின் மேற்பரப்பில் வைத்துவிட்டு மற்றொரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அந்த மாமரத்தில் இருந்து மாம்பழம் பழுத்து நீர் நிரம்பிய குடத்திற்குள் விழுந்தது.
இதை பேச்சித்தாய் கவனிக்கவே இல்லை. அதன்பிறகு தலையில் ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமும் வைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவந்தாள். அரண்மனையில் பூஜைக்கு தயாரான அரசன் இன்னும் மாம்பழம் வராததைக் கண்டு காவலர்களை அழைத்து காரணம் கேட்டார்.
காவலர்கள் அதற்கு இன்னும் மாம்பழம் விழவே இல்லை என்று கூறினர். அது எப்படி விழாமல் இருக்கும். யாராவது எடுத்து சென்றிருப்பார்களோ என்று கேட்டார் மன்னன். உடனே காவலர்கள் நாங்கள் காலையில் சிறிதுநேரம் கண்ணயந்துவிட்டோம் மன்னா என்று கூறினர். அதற்கு மன்னன் பொறுப்பில்லாமல் இருந்த காவலர்களுக்கு சிறைதண்டனை கொடுத்தார்.
அதன்பிறகு தன்னுடைய படை வீரர்களை அழைத்து அனைத்துவீடுகளிலும் அடுப்பாங்கரை முதல் அனைத்து இடத்திலும் விடாமல் தேடுங்கள் அந்த மாம்பழம் கிடைக்கும் என்று சொல்லி உத்தரவிட்டார். அரசனின் உத்தரவிற்கிணங்க அந்த வீரர்கள் எல்லோரும் அந்த தேரிக்குடியிருப்பு ஊரில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் சென்று தேடினார்கள்.
இறுதியாக பேச்சித்தாய் வீட்டில் தேடியபோது, பேச்சித்தாய் ஒரு இளம் விதவை அதனால் அவள் கதவிற்கு பின்னால் சென்று ஆடவரின் முகம் பார்த்திராத வண்ணம் ஒதுங்கி நின்றாள். நிறைகுடத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் கொட்டி காட்டினாள். அப்போது குடத்தில் இருந்து மாம்பழம் கீழே விழுந்தது.
உடனே அந்த மாம்பழத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்றார்கள். அந்த அரசன் தெய்வத்திற்கும், அரசனுக்கும் உரித்தான இந்த மாம்பழத்தை களவாடி சென்ற அந்த பேச்சித்தாய். எனவே அவளை நீங்கள் இழுத்துவரும்படி உத்தரவிட்டார். உடனே படைவீரர்கள் அனைவரும் பேச்சித்தாயிடம் மன்னன் ஆணை குறித்து சொன்னார்கள். அதைகேட்டதும் பேச்சித்தாயும் அவர்கள் பின்னாலேயே வந்து கோட்டை நோக்கி நடந்து வந்தாள்.
இந்த பேச்சித்தாய்க்கு மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரை வலம் வரச்செய்து சுண்ணாம்பு கால்வாயில் தள்ளுங்கள் என்று ஆணையிட்டார் அரசன்.
அப்போது அமைச்சர் கய்யனார் சென்று அரசனிடம், இவள் ஒரு அபலை பெண். இருட்டுக்குள் வாழ்ந்து பகலில் தூங்குபவள். இந்த இளம் வயது பெண்ணிடம் சொல்லும் பழிகள் நாளை நம் பரம்பரையையே பாழ்படுத்திவிடும் என்று கூறினார்.
இதைக்கேட்டதும் அரசன், நிறுத்து உன் உபதேசத்தை என்று கய்யனாரை பார்த்து கோபத்துடன் சொன்னார்.
அதன்பிறகு மன்னரின் ஆணைப்படி பேச்சித்தாய்க்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி வலம் வந்தனர். சுண்ணாம்பு கால்வாயில் தள்ளிவிடும் நிலையில் இருந்தால் பேச்சித்தாய். அப்போது பேச்சித்தாய் தன்னுடைய உயிர்போகுல் நிலையில் சுற்றி நிக்கக்கூடிய மக்களுக்கு மத்தியில் இருந்து அரசனுக்கு சாபம் கொடுத்தாள்.
நன்றிநெடுகேளாதவன் சீமையில் தீக்காற்றும் தீமழையும் பெய்யக்கடவது, கண்டு நீதிநெறி சொல்லும் கற்குவேல் அய்யனாரே நீரே சாட்சி. மன்னவன் பூமியெங்கும் மண்மாரி பொழியட்டும். நீதிநெறி சொல்லுக்கும் கற்குவேல் அய்யனாருக்கும் பூங்காவாகட்டும் என்று சொல்லி சாபம் கொடுத்தாள்.
உடனே நெருப்பு பேச்சித்தாயை நெருங்குவதற்கு முன்பே பேச்சியம்மன் அங்கே வந்து பேச்சித்தாயை ஆட்கொண்டுவிட்டார். அங்கு சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் கற்குவேல் அய்யன் கோவில் பேச்சியம்மனாக இருப்பது இந்த பேச்சித்தாய் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.
இந்த பேச்சித்தாயின் சாபத்தால் அந்த பகுதி முழுவதும் அழிந்து அதன்பிறகு ஊரானது என்று அங்கு இருக்கும் முன்னோர்கள் சொல்கிறார்கள். இந்த பேச்சித்தாயின் சாபத்தின்படி கோவிலின் பின்புறம் விரிந்தும், முன்பக்கம் சுளவுபோல் இருக்கிறது.
கற்குவேல் அய்யனார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான விழா என்னவென்றால் கள்ளர்வெட்டு திருவிழா தான்.
இந்த திருவிழா எதற்காக கொண்டாடுகிறார்கள் என்றால் கற்குவேல் அய்யனாரை வேண்டி பலன் பெற்ற சிற்றரசர்கள், நிலச்சுவந்தார்களும் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலானவற்றை தானமாக கொடுத்தார்கள். இதனால் கோவில் கருவறையில் உள்ள பெட்டகத்தில் ஆபரணங்கள் அதிகமாக இருந்தது.
இதை அறிந்த நெல்லை சீமையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலில் திருடுவதற்காக வந்து கோவிலில் திருடிவிட்டு கோவிலின் பின்புறம் சிறிதுதூரம் வந்தபோது அந்த வாலிபரின் கண்பார்வை பறிபோனது. உடனே கற்குவேல் அய்யனார் கோபம் கொண்டு உத்தரவிட வன்னியராஜன் வீச்சரிவாளுடன் சென்று அந்த வாலிபரை சிறைச்சேதம் செய்தார்.
தன்னுடைய மகனை காணாத திருடனின் தாய் கண்ணீர்விட்டு அழுது தேடிக்கொண்டே இருந்தாள். தெரியாமல் செய்த தவறை மன்னித்து என்னுடைய மகனுக்கு உயிர்பிச்சை தாரும் சுவாமி, கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள். கஞ்சிக்கும் வழியில்லை. பேரரசரும் உதவவில்லை. கருணைக்காட்ட யாருமே இல்லை. களவாட உன் இருப்பிடம் வந்தான்.
பிச்சாண்டார் மைந்தனே பிச்சை தாரும் என்று சொல்லி அந்த கற்குவேல் அய்யனாரிடம் புலம்பி நின்றாள் அந்த திருடனின் தாய். உடனே கற்குவேல் அய்யனார் மனம் இறங்கி அசரிரீயாக பூசாரி வந்து புனிதநீரை தெளித்து பிரம்பால் அடிக்க உன் மகன் உயிர்பெற்றெழுவான் என்று சொன்னார்.
உடனே தேரிக்குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியின் கனவில் காட்சி கொடுத்தார். பூசாரியிடம் நடந்ததை கூறிநீபோய் நீரை தெளித்து பிரம்பால் அடிக்க சிறைச்சேதம் செய்யப்பட்டவன் உயிர்பிழைப்பான் என்று கூறினார் கற்குவேல் அய்யனார்.
இதைக்கேட்டு பூசாரி தான் கண்ட கனவுபற்றி மற்றவர்களுக்கு கூற ஊர் முழுவதும் தகவல் பரவு அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள். அய்யனார் கனவில் சொன்னதுபடியே பூசாரி அருள்வந்து ஆடினார். அவர் துண்டாக கிடந்த திருடனின் உடல் மீது கற்குவேல் அய்யனாரின் அபிஷேக தீர்த்தத்தை தெளித்து பிரம்பால் 3 முறை அடிக்க உடனே உடலும், தலையும் சேர்ந்தது. உடனே அந்த திருடன் உயிர்த்தெழுந்தான். அந்த தாயின் வேண்டுகோளும் தீர்ந்தது.
உடனே ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டு அந்த தாய், கற்குவேல் அய்யனாரின் இந்த அற்புதத்தை அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் ஆண்டுதோறும் எனது சந்ததியினர் கள்ளன் சாமி ஆடி நன்றிக்கடன் செலுத்துவோம் என்று சொல்லி உறுதிகொண்டாள் அந்த திருடனின் தாய்.
கள்ளராக வந்தவர் அவர் காலம் முடிந்த பிறகு அவருக்கும் ஒரு பீடம் கொடுத்து அய்யனார் சன்னதியில் அவருக்கு எதிர்புறம் ஒரு சிறிய கோவில் வைத்துள்ளனர். இப்போது அந்த கோவில் கள்ளர்சாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
கார்த்திகை முதல்நாள் கொடியேற்றம் நடக்கும். அன்றில் இருந்து 30-வது நாள் கள்ளர்வெட்டு திருவிழா நடக்கும். இந்த ௩௦ நாட்களும் அய்யனாரின் கதை வில்லுப்பாட்டாக தினமும் 2 வேளை பாடப்படும். விழாவின் போது காலையில் காவல்தெய்வமான அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இந்த கள்ளர்வெட்டு திருவிழாவின்போது இளநீரை வெட்ட உதயத்தூர் கிராமத்தில் இருந்து ஒருகுலத்தவர்கள் அரிவாள் கொண்டு வருவார்கள். ஆண்டுதோறும் புதிய கயிறு, புதிய அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. கள்ளர்வெட்டு நடக்கும் இடத்தில் உள்ள புனித மண்ணை எடுத்து விவசாயம் செய்யும் நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும். சிறிய துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது இங்கு வரக்கூடிய பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்