search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ச்சகர் பயிற்சி"

    • கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்.
    • கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்.

    திருக்கோயில் அர்ச்சகர், ஓதுவார் மற்றும் தவில், நாதஸ்வர பயிற்சிகளை முடித்த 11 பெண்கள் உள்பட 115 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ்கள் வழங்கினார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம். கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம். கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்; பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம். பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது.

    இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியினை முடித்திருக்கிறார்.
    • ஆன்மிகம் சார்ந்த நிறைய விஷயங்களை கற்று கொள்ளலாம்

    தமிழக அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் அர்ச்சகர் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சமீபத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களில் மூன்று பேர் பெண்கள். ஆண்கள் மட்டுமே கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்து வந்த நிலையில் தற்போது இந்த பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று இறைவனுக்கு பூஜை செய்ய இருக்கிறார்கள்.

    இவர்களில் இருவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலாதனூரை சேர்ந்த ரம்யா-கிருஷ்ணவேணி.மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெள்ளமதகு கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா. இவரது பெற்றோர் நடராஜன் - உமா. இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். 25 வயதாகும் ரஞ்சிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியினை முடித்திருக்கிறார்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அர்ச்சகர் பணி பொறுப்பை ஏற்க இருக்கும் ரஞ்சிதாவை சந்தித்து சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அர்ச்சகர் பணி ஆசை பற்றியும், அர்ச்சகர் பயிற்சி அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

    உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

    அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு தங்கை, ஒரு தம்பி ஆகியோருடன் தாத்தா, பாட்டியும் உள்ளனர். அர்ச்சகர் பயிற்சியில் சேர்ந்தபோது தொடக்கத்தில் சிலர் கேலி, கிண்டல் செய்யத்தான் செய்தார்கள். ஆனால் இப்போது நிறையபேர் பாராட்டுகின்றனர்.

    அர்ச்சகராக வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?

    திருவாரூரை அடுத்த கொரடாச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தேன். பின்பு திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் பி.எஸ்சி. விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.

    அப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் பற்றி நண்பர் மூலம் அறிந்தேன். குறிப்பாக பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என கேள்விப்பட்டேன். `நாமும் அர்ச்சகர் ஆகலாம். ஆன்மிகம் சார்ந்த நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்' என்ற எண்ணம் மேலிட்டது.

    பொதுவாக கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிடுவோம். மற்ற பூஜைமுறைகள் குறித்து நமக்கு தெரியாது. அர்ச்சகரானால் பூஜை முறைகளை அறிந்து கொள்ள முடியும். கோவில் விழாக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பதால் ஆர்வத்துடன் பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மன திருப்தி அளிக்கிறது.

    கடவுளை வழிபடுவதுடன் மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அர்ச்சகர் பயிற்சியின்போது கற்றுக்கொண்டது என்ன?

    விஸ்வரூபம், திருவாராதனம், புண்ணிய வாகனம், சூக்தம், திவ்ய பிரபந்தத்தில் 110 பாசுரங்களை பயிற்சி எடுத்துக்கொண்டேன். சாமிக்கு எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். வைணவ ஆகமவிதிப்படி எப்படி பூஜைகளை செய்ய வேண்டும். அர்ச்சனைகள் எப்படி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் அர்ச்சனை செய்வது குறித்து கற்றுத்தரப்பட்டது. அனைத்தையும் நன்றாக கற்று தேர்ந்துள்ளேன். மேலும் மந்த்ர ப்ரயோகம் பாகம்-1, மந்த்ர ப்ரயோகம் பாகம்-2 ஆகிய புத்தகங்களும் கொடுத்துள்ளனர். அதில் எல்லாவிதமான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அர்ச்சகராக பயிற்சி பெற்ற பிறகு உங்களது மனநிலை எப்படி இருக்கிறது?

    எங்கள் குடும்பத்தில் முதன் முதலாக அரசு சார்பான வேலைக்கு செல்லும் நபர் என்ற பெருமையை நான் பெற்று இருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியத்துடன் வழங்கப்படவுள்ள இந்த அர்ச்சகர் பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    என்னுடன் கடலூரை சேர்ந்த 2 பெண்களும் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு நாங்கள் தொடக்கமாக இருக்கிறோம். இது தொடர வேண்டும். இந்த ஆண்டு 10 பெண்கள் பயிற்சியில் சேர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு முறையாக பணி வழங்கப்பட்டால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அதிகம் பெண்கள் அர்ச்சகர் பயிற்சியில் விரும்பி சேருவார்கள்.

    ஆண் அர்ச்சகரைப்போல் பெண் அர்ச்சகர்களும் எல்லா பூஜைகளும் செய்யலாமா? பெண் அர்ச்சகர்களுக்கென கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா?

    ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பயிற்சி ஏதும் அளிக்கப்படவில்லை. ஆண்கள், பெண்கள் என அனைவரையும் ஒன்றாக வைத்துத்தான் பூஜை முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கென எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. நாங்கள் எந்த கோவிலில் பணி அமர்த்தப்படுகிறோமோ அந்த கோவிலில் உள்ள தலைமை அர்ச்சகரின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்.

    அர்ச்சகர் பணியில் சவால் இருக்கும் என கருதுகிறீர்களா?

    கண்டிப்பாக சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். தலைமை அர்ச்சகர்கள் எந்த முறைப்படி எங்களை ஏற்றுக்கொண்டு சொல்லிக் கொடுக்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் நாங்கள் கற்ற விஷயங்களை செயல்படுத்த முடியும். அதனால் எல்லாமே தலைமை அர்ச்சகர் முடிவில் தான் இருக்கிறது.

    அவர்கள் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் நாங்கள் படித்ததை வைத்து முழுமையாக பூஜைகள் செய்ய முடியும். இல்லையென்றால் சவால்கள் ஏற்படும். சவால்களை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலை தேர்வு செய்தது ஏன்?

    நான் வைணவ ஆகமவிதிப்படி பயிற்சி பெற்று இருக்கிறேன். அதனால் வைணவ கோவிலான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பணி புரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். எங்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். பணி விரைவில் வழங்கப்பட்டவுடன் பாடசாலைகளில் கற்றதை கோவில்களில் நேரடியாக செயல்படுத்துவோம். நாங்கள் நல்லபடியாகவே பூஜை செய்வோம், என்கிறார்.

    • படிப்படியாக அனைத்து திருக்கோவில்களில் ஓதுவார் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற 3 பெண்கள் விரைவில் உதவி அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்கள்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களுக்கு ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

    பெண் ஓதுவார்கள் பணி புரிய உள்ள கோவில்கள் விவரம் வருமாறு:-

    1. பாடி திருவல்லீஸ்வரர் கோவில்-பார்கவி

    2. வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் சுவாமி கோவில்-தாரணி

    3. ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவில்-சாருமதி

    4. மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில்-சிவரஞ்சனி.

    5. சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில்-கோமதி.

    நிகழ்ச்சியில் மேலும் திருகோவில்களில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.

    அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே 5 திருக்கோவில்களில் பெண் ஓதுவார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற 15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இறைவனுக்கு செய்யப்படுகின்ற வழிபாடுகளின் போது ஓதுவார்கள் அனைத்து திருக்கோவில்களிலும் நியமிக்கப்படுகின்ற முயற்சியை துறை எடுத்துக் வருகிறது. இதுவரையில் திருக்கோவில் களில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 34 ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 ஓதுவார் பணியிடங்களில் இதுவரை 107 ஓதுவார்கள் திருக்கோவில்களில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

    படிப்படியாக அனைத்து திருக்கோவில்களில் ஓதுவார் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற 3 பெண்கள் விரைவில் உதவி அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்கள்.

    அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக ஓராண்டுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் மணிவாசன், சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், ஜெய ராமன், மங்கையர்க்கரசி, ரேணுகாதேவி, முல்லை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×